படக்கதை
அவ்வப்போது
எடுத்துக்கொள்கிற
புகைப்படங்கள் எல்லாவற்றையும்
ஒரு
தொகுப்பாக 
சேமித்து
வைத்துக்கொள்கிற வழக்கம் 
என்னிடமில்லை
மேலும் 
ஒரு
புகைப்படத்திற்காக   
அணியும்
உடையின்மீதும் 
அத்தனை 
கவனம்
கொள்வதில்லை  
அன்றன்று
அணிபவையே  
அன்றன்றைய
வண்ணம்  
அன்றன்றைய
எண்ணமும்கூட
புகைப்படங்களுக்கென
பிரத்தேயகமாக
உடைகளைத் 
தெரிவு
செய்து 
உடுத்திக்கொண்ட
நாட்களும் 
எனக்கிருந்தன 
என்பதை 
தற்செயலாகக்
கண்ணில்பட்ட 
பழுப்புநிறப்
புகைப்படமொன்று
நினைவுபடுத்தியது
எதற்குப்பதிலாக
நாம் 
எவற்றையெல்லாம்
இழந்திருக்கிறோம்
அடைந்திருப்பவையெல்லாம்
ஆசைப்பட்டவைதாமாவென
அரிதாகத்தென்பட்ட  
அந்தப்புகைப்படம்
யோசிக்கவைக்கிறது 
மனதின்
ஆழத்தில்
உறைந்திருக்கும்
ஒரு
தருணத்தை 
அல்லது
முகச்சாயலில்
படிந்திருக்கும்
ஒரு மனநிலையை
மீண்டும்
மேலெழச்
செய்துவிடுகிறது 
ஒரு 
பழையப் புகைப்படம்
மிக
எளிதாக.
***
 

 



