Thursday, 7 August 2025

 

காவியாவும் அர்ச்சனாவும்

 இப்போதும்  

அவர்கள் புத்தகம் வாசிக்கிறார்கள்

அவரவர் அறையில்

அவரவர் விருப்பத்தில்

தேர்ந்து டிவி பார்க்கிறார்கள்
அத்தனை ஒழுங்கு அவர்களின் அறை

முன்பு ஒரு சமயம்
"
அவ என்னைக் கிள்ளிவைக்கிறா'
அவ என்னை வம்பு செய்கிறா "
காவியாவும் அர்ச்சனாவும்
சேர்ந்திருக்கும் பொழுதுகள்
இப்படித்தான்

ஒருநாள் இவர்கள் ஒன்றாக இருந்தால்
ஒன்பது நாள் ஒழுங்கு செய்யும்படி
வீடு அப்படிக் கலைந்துக் கிடக்கும்
நிமிடத்திற்கொருமுறை ஓயாத சண்டை
நிமிடத்திற்கொருமுறை சமாதானமும்
நிமிடத்திற்கொருமுறை அணைப்பும்

இப்போது அவர்கள் வளர்ந்துவிட்டார்கள்.

**

"இப்பொழுது வளர்ந்து விட்டாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து.. 

 

Wednesday, 6 August 2025

 

என்னைப்போல் ஒருத்தி

வனத்தின் யட்சியென
மனங்கொண்டிருப்பவள்

மாலைக்கதிர்
மயங்கிச்சரியும்

கவனிப்பார் எவருமற்ற
தாமரைக்குளத்தில்
உவந்து
தன் பாதம் நனைக்க
காலாதீதமாய்
கருவறையில்
உறைந்திருக்கும்
மீனாட்சியும்
உள்ளம் குளிர்கிறாள்

தன்னைப்போல்

ஒருத்தியைக்கண்ட

அக்கணத்தில்.

**

Tuesday, 5 August 2025

 



நீலமும் இன்னபிற நிறங்களும்  

 

கடலும்

வானமும்

நீலமல்ல

 

நம் மனம் நிகழ்த்தும்

மாய மென்பதை

நுரைத்த அலைகளும்

கருத்த மேகமும்

உணர்த்த

 

மண்ணில்

காணும்

நிறமெல்லாம்

நிஜமல்ல

அவை

கண்ணின் கற்பிதங்களென

ஓசையின்றி

ஒலிக்குமொரு குரல்

உள்ளிருந்து உரைத்திடும்

அழுத்தமாக

**

Sunday, 3 August 2025




பழமை

கடல் மிகப்புராதனமானது

அது

இரகசியங்களின்

அற்புதங்களின்

மேலும்

கனவுகளின் பெட்டகம்

 

மலைகளைப்

பெயர்த்தெடுத்துக் கொட்டிவைத்திருக்கும்

பாறைகள்தானா

பெருங்கடலை

அடக்கி விடும்

 

கடலின்  பழமைக்குக்

கடலே சாட்சி

 

ஆழ்கடலின்  ரகசியங்களை

பச்சைப்பாசி  படர்ந்த

பாறையிடுக்கு  நண்டுகள்

கூறிக்கொண்டேயிருக்கின்றன

 

ஈரக்காற்றின்

உப்புச்சுவையோடும்

கடல்  வாசனையோடும்

ஆழ்கடலின்  மௌனத்தைச்

கலைத்துக்  கொண்டிருந்தது

காற்றலைகள்

 

வெளி நனைந்து  சிலிர்க்கையில்

வெளிப்படுவது

பிரபஞ்ச சுவையும்

பழமையின் வாசனையுமே.

%

 "கடலோடு இசைத்தல்" தொகுப்பிலிருந்து.. 

Friday, 1 August 2025



முடிவின் தொடக்கம்

இனி

செய்வதற்கு ஏதுமில்லை

அவ்வளவுதான்

என்றானபிறகுதான்

சரித்திரத்தின் அடையாளமாகிய 

சாதனைகளும்

மணிமுடிகளுக்கான

அதிகாரப்போட்டிகளும்

மாத்திரமின்றி

மகத்தான

காதல்களும்கூட

நிகழ்ந்திருக்கின்றன

 

நடக்கும் பாதை

முடிவுறும்போது

தன்னியல்பாக விரியத்தொடங்குகின்றன

இறக்கைகள்

வானத்தை நோக்கி.  

- "சொல்லினும் நல்லாள்" கவிதைத் தொகுப்பிலிருந்து. 

Thursday, 31 July 2025

                                                             திடம்

அரிதான

அதனுடைய இருப்பையும்

அசாதாரணமான

ஒளியையும்

அதீதமான கடினத்தையும்

காணப் பொறாமல்

மீளவும் வந்து

முட்டி மோதிச் சிதறடிக்க

முயலுபவர்கள்

அறிவதில்லை

உள்ளுக்குள்

உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்

உள்ளம்

தீட்டவும் தீராத

திண்மை கொண்ட

வைரம் என்பதை.

**                               

 "கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்" தொகுப்பிலிருந்து...

Wednesday, 30 July 2025

 




நிகழ்த்துக்கலை

புகைப்படக்கருவியின்

கோணத்திற்குள்

அடங்கிவிடுகின்றன

கட்புலனாகிற

காட்சிகள்

 

சட்டகத்திற்கும் அப்பால்

எட்டியவரையிலும்

எங்கும்

நிகழ்ந்துகொண்டிருக்கிறது

வாழ்க்கை.

%

#சொல்லினும் நல்லாள் கவிதைத் தொகுப்பிலிருந்து...