Thursday, 31 July 2025

                                                             திடம்

அரிதான

அதனுடைய இருப்பையும்

அசாதாரணமான

ஒளியையும்

அதீதமான கடினத்தையும்

காணப் பொறாமல்

மீளவும் வந்து

முட்டி மோதிச் சிதறடிக்க

முயலுபவர்கள்

அறிவதில்லை

உள்ளுக்குள்

உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்

உள்ளம்

தீட்டவும் தீராத

திண்மை கொண்ட

வைரம் என்பதை.

**                               

 "கனவின் முற்றத்தில் தரையிறங்கும் தாரகைகள்" தொகுப்பிலிருந்து...

Wednesday, 30 July 2025

 




நிகழ்த்துக்கலை

புகைப்படக்கருவியின்

கோணத்திற்குள்

அடங்கிவிடுகின்றன

கட்புலனாகிற

காட்சிகள்

 

சட்டகத்திற்கும் அப்பால்

எட்டியவரையிலும்

எங்கும்

நிகழ்ந்துகொண்டிருக்கிறது

வாழ்க்கை.

%

#சொல்லினும் நல்லாள் கவிதைத் தொகுப்பிலிருந்து...  

Monday, 28 July 2025


மற்றொரு கடல்

ஒருமுறை கூட
கடல் பார்க்காத ஒருத்தி
எத்தனையோ முறை
மூச்சடக்கி
கடலின் ஆழத்தில்
முத்தெடுத்தவளைச் சந்திக்கிறாள்
முதன்முதலாக

அலைகள் பொங்கி
கால் நனைக்கத் தொடங்குகிறது
ஒருத்தியிடமிருந்து
மற்றவளுக்கு

கடல் பார்க்காதவள்
பார்க்கிறாள்
கடல் நீலக்கடலான
ஒருத்தியை

கடலை அறிந்தவள்
நனைகிறாள்

தான் அறியாத மற்றொரு கடலில். 

** 

Sunday, 27 July 2025

உப்பின் ரகசியம் - சக்தி ஜோதி

மின்னிக் கரையும் துகள்கள்:

மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரமான அனுமந்தன்பட்டியில் பிறந்து, அதன் இன்னொரு பகுதியான அய்யம்பாளையத்தில் வசித்து வரும் எனக்கு மலை என்பது அண்ணாந்து பார்க்கும் உயரம் மட்டுமல்ல. நேரடியான வாழ்வனுபவமும் தருவது.

என்னுடைய வளரிளம் பருவம் முழுக்க நான் வசித்தது ஒரு மலையின் மேல்தான். குறிஞ்சியும் முல்லையும் மருதமும் சேர்ந்து செழித்திருக்கும் பகுதியில் வாழநேர்ந்தாலும் என் மனம் விரும்புவதென்னவோ நெய்தல் நிலத்தைத்தான். கடலும் கடல் சார்ந்த பகுதியையும் பரவசத்தோடு நான் பார்த்தது என்னுடைய பதின்பருவத்தில். அதுவரையில் கடல் என்பது உலக வரைபடத்தில் தெரிகிற நீலமாகவும் கதைகளில் வருகின்ற கப்பல் மிதக்கும் நீர்ப்பரப்பாகவுமே நினைவில் இருந்தது.

முதல்முறை கடல் பார்த்தபோது அந்தக்கடல் எனக்கு உள்ளேயும் வெளியேயும் விரிந்தது. அதன்பிறகு எத்தனையோ முறை கண்டிருப்பினும் ஒவ்வொருமுறை பார்க்கும்போதும் அது புதியதாகவே இருந்தது. கரையில் நின்று கடலைக் காணும்போது ஆனந்தம், அமைதி, அச்சம், வியப்பு என எத்தனையோ விதமான மன உணர்வுகளுக்கு ஆட்பட்டிருக்கிறேன். கற்பனையில் விரிகிற ஆழ்கடலின் மௌனமும் கரையோர ஆர்ப்பரிப்பும் ஒன்றுடனொன்று இணைந்தும் விலகியும் என்னையே என் முன்பாக நிறுத்திவிடுகிறது. ஒருகணம் உப்பாகவும் மறுகணம் உணர்வாகவும் காட்சிப்படுகிற கடலின் இரகசியங்கள் கடலினும் பெரிது.

 

அலைகள் ஓயாத ஒரு கடலைப்போலவே என்னுடைய வாழ்வின் செயல்பாடுகளும் அமைந்துவிட்டன. கரையோரம் தனிமையில் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தவாறிருக்கையில் ஆழ்மனம் அடைகிற அமைதியை சொல்லில் விளக்க இயலாது. அவ்வாறான ஓர் ஆழ்ந்த அனுபவம்தான் எனக்கு கவிதையும்.

 

என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு தொடங்கி இப்போதுவரை என்னுடைய கவிதைகளில் நான், என் தாய், என் மகள் தவிர சந்திக்கும் பெண்களில் என்னைப்போலவே இருப்பதாக நான் உணர்கிறவர்கள் அல்லது  என்னிலிருந்து மாறுபட்ட இயல்புகளைக் கொண்டவர்கள், என்னுடன் பணிபுரிபவர்கள் என ஏராளமான பெண்களாலானது என்னுடைய உலகம். அந்த உலகத்திற்குள் புதிதாக அடியெடுத்து வைத்து நுழைந்திருப்பவள் வினோதினி. எனது மருமகள். அவளுடனான ஓர் உரையாடலில்... அவள் கடலை நேரில் பார்த்ததில்லை என்றபோது என்னையே நான் என் பதின்ம வயதில் பார்ப்பதைப்போல உணர்ந்தேன். அவளது கண்களின் நீலத்தில் மின்னுவதும் கரைவதுமான உப்புத் துகள்களைக் கண்டேன். அந்த உப்பின் ருசி என்பது உணவின் ருசி மட்டுமன்று. ஒரு பெண் ஆழ்மனத்தின் சுவை நரம்புகளில் உணர்கிற கனவின் ருசி; காதலின் ருசி; காமத்தின் ருசி; தாய்மையின் ருசி. அதுவே எனதிந்தக் கவிதைகளின் ருசியும்கூட. அவளுக்கும் எனக்கும் கடல் வேறுவேறு முகம் காட்டலாம்; அல்லது நான் பார்த்த கடலை அவளும் காணலாம். எப்படியிருப்பினும் என்னைப்போலவே கடலை நேசிக்கும் அவளுக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கிறேன்.  

 

எண்ணிக்கைப்படி இது  என்னுடைய 16 வது நூல். இவற்றுள்  ‘சங்கப் பெண் கவிதை’,   ‘ஆண் நன்று பெண் இனிது’ ஆகிய இரண்டு கட்டுரைத் தொகுப்புகளைத் தவிர்த்து விட்டால் ‘உப்பின் ரகசியம்’ எனது பதினாலாவது தொகுதி.

 

கணவர் சக்திவேல் குழந்தைகள் திலீப்குமார், காவியா இவர்களுடன் என்னுடைய அக்கா ஜெயா, அவரது குழந்தைகள் ஹில்டன், அர்ச்சனா ஆகியோரின் அணுக்கமும் அரவணைப்பும்தாம் என்னைத் தொடர்ந்து இயங்கச்செய்கிறது. அவர்களுக்கு என் அன்பு.  


இந்தக் கவிதைத்தொகுதி வெளிவருவதற்கு என்னை ஊக்கப்படுத்திய நண்பர் கவிஞர் பழநிபாரதி அவர்களுக்கும் தொடர்ந்து என்னுடைய கவிதைகளை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கிற தோழர்களுக்கும் என்னுடைய பல கவிதைகளை கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்த்தும், மாணவர்களுடைய ஆய்வுகளுக்குப் பரிந்துரை செய்துகொண்டும் இருக்கிற பேராசிரியர்களுக்கும் என்னுடைய நன்றி.


இத்தொகுப்பை நேர்த்தியாக வெளியிடும் தமிழ்வெளி பதிப்பகத்திற்கும் நண்பர் கலாபன் அவர்களுக்கும் என் நன்றி.