Tuesday, 16 September 2025




இட்டு நிரப்புதல்

 

இதோ

இங்கே புதராக மண்டிக்கிடக்கும்

மூங்கில் செடியினருகே  

வர நேர்கையில்

தவறாமல் நினைத்துக்கொள்கிறேன்  

இவ்விடத்தில்

முன்பிருந்த ஒற்றை பன்னீர்மரத்தை.

 

சின்னஞ்சிறு செடியாக

நான்தான் அதனை  நட்டு வைத்தேன்

 

இரண்டு பருவ மழைக்காலங்களைக்

கடந்தபின்பு

அந்த மரம் பூக்கத்தொடங்கியது

 

அதன்பின்பான எல்லா மழைக்காலத்திலும்

பூத்து

முற்றம் நிறைத்தது 

காற்றில் வாசம் பரப்பியபடி

 

எதிர்பாராது

சுழன்றடித்த  சூறாவளி நாளொன்றில்   

அடியோடு சாய்ந்தது அந்த மரம்

 

மனதையே

பிடுங்கி எறிவதுபோல

அத்தனைத்  துயரம் அந்தக்காட்சி

 

வேரோடிக்கிடந்த நிலமெங்கும்

பன்னீர்த்துளிகளென  

சின்னஞ்சிறிய செடிகள் துளிர்க்கத்தொடங்கின

 

என்ன காரணத்தினாலோ

தழைக்கத்தழைக்க

நானே

பிடுங்கி எறியத் தொடங்கினேன்

 

இன்னொரு மழைப்பருவத்தில் 

நானேதான்  நட்டு வைத்தேன்

இந்த மூங்கில் மரத்தையும்

 

ஒன்றை இன்னொன்றால்

இட்டு நிரப்பியபோதிலும் 

ஒவ்வொரு மழைக்காலத்திலும்

மனதுக்குள் பூத்துக்கொண்டிருக்கும்

பன்னீர்ப்பூக்களை

என்ன செய்ய.

 

Tuesday, 2 September 2025




 சங்க இலக்கியம்-உடல் மனம் மொழி :

இது என்னுடைய 17 வது நூல்.

என் முனைவர் பட்டத்திற்காக சங்க இலக்கியத்தில்  ஆண் மையக் கருத்துருவாக்கம்எனும் தலைப்பில் மேற்கொண்ட  ஆய்வினைச் செம்மைப்படுத்தி விரித்து எழுதியுள்ளேன்.

 

இந்த ஆய்வு இனக்குழுத் தோற்றம் முதல் அது தாய்வழிச் சமூகமாக நிலைபெறுவது   வரையிலான வரலாற்றை சங்ககாலத்தின் பின்னணியில் சுருக்கமாக  விவரிக்கிறது.

 

நிலத்தின் மீதான ஆணின் உரிமை பெண்ணின் உடல் மீதான அதிகாரமாக எவ்வாறு மாற்றம் பெற்றது, மொழியின் துணைகொண்டு பெண்ணின் மனத்தைத் தன்னகப்படுத்துவதன் வாயிலாக பெண்ணுடல் ஆணுக்கு உகந்ததாக எவ்விதம் வடிவமைக்கப்பட்டது என்பனவற்றை ஆராய்வதோடு இனம், இனக்குழு, சிற்றரசு, பேரரசு, குடும்பம், சாதி, கடவுள் வழிபாடு, மதங்களின் தோற்றம், இலக்கண இலக்கிய உருவாக்கம்  அவற்றில் வாணிபம்பயணங்கள், போர், கல்வி, பண்பாடு, தொன்மங்கள், உளவியல் போன்ற பல்வேறு காரணிகளின் பங்கு முதலியவற்றை விவரிக்கும் தன்மையில் இந்நூல் அமைந்துள்ளது.

 

இந்த நூல் உருவாக்கத்தில் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இதை அழகிய வடிவில் நூலாக வெளியிடும்

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்திற்கும் என் நன்றி.