Wednesday 7 June 2017

‘எங்கே என் மருதா நதி!’ - தேடும் கவிஞர் சக்திஜோதி- விகடன். காம் இல் .. 

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!

என் வீட்டின் பின்னால்தான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது மருதாநதி.
ஆனால் பால்யத்தில் நான் உணர்ந்திருந்த மருதாநதியல்ல இப்போது  பார்க்கிற இந்த நதி.  மலையடிவார கிராமத்திற்கான அத்தனை அம்சங்களும் பொருந்திய ஊர் அய்யம்பாளையம். இந்த கிராமத்தின் பெரும்பகுதி நீராதாரத்தை நிறைவு செய்வதாக இன்றைக்கும் இந்த நதி அமைந்துள்ளது.

மூன்றுபக்க மலையிலிருந்து கிளைத்துப் பெருகி இணைகிற மருதாநதி, சட்டென பெருகியிருக்கும் முக்கூடல் சந்திப்பில் சின்னஞ்சிறியதாக ஒரு அணைக்கட்டு. அங்கிருந்து தெற்கிலும் வடக்கிலும் கிளைபிரிகிற இரண்டு பெரிய வாய்க்கால்களோடு மையத்தில் அகன்று பாய்கிற மருதா என்னுடைய பால்யகால சினேகிதி.

பள்ளிப்பிராயத்தில் தோழியரோடு ஆற்றிலாடியதன் ஈரம் இன்றுவரை உலரவேயில்லை. ஆனால் மருதா தன்னுடைய ஆழ, அகலங்களை இழந்து, நீர்மை குறைந்தவளாக ஆகியிருக்கிறாள். என்றபோதிலும் எப்பொழுது விடுமுறை வருமென்று காத்திருந்து மருதாவைச் சந்தித்த நாட்களின் காதல் இன்னமும் குறையவேயில்லை.

மலைகள் சூழ இயற்கையான படித்துறை அமைந்த ஒருபக்கக் ஆற்றங்கரையில்,  மண்ணால் அமைத்த வெள்ளாவியில் உடைகள் வேகின்ற வாசனை அந்தப் பகுதி முழுக்கப் பரவியிருக்க துவைத்து உலர்த்திய உடைகளின் வண்ணங்கள் அக்கரையில் விரவியிருக்கும். விவசாயக்குடிகளின் நிலமாக மட்டுமேயிருப்பதால் மறுகரையில் மாலையில் மஞ்சள் வெயிலில் மாடுகளைக் குளிப்பாட்டும் காட்சி ஒளிர்ந்திருக்கும். குளிப்பதற்கென தனிப்பகுதி ஒன்றுமில்லை. ஆனால் தென்னந்தோப்புகளை ஊடுருவி பாய்கிற மருதாவில் ஆழம் குறைவாகவும் நீர்ச்சுழல் அற்ற பகுதிகளையும் அடையாளம் கண்டு அங்கங்கே நீராடித் திளைப்பவர்களை எப்போதும் பார்க்க முடியும்.

வெள்ளிமீன்களென துள்ளியபடி எதிரோடி தெறிக்கும் அயிரையை வலைவீசிப்  பிடிக்கிற தொழில்முறையாளர்களை வேடிக்கை பார்ப்பது கோடை விடுமுறையின் பொழுதுபோக்கு. என் பங்குக்கு அக்காவோடு சேர்ந்து ஓடும்நதியில் தாவணி விரித்துப் பிடித்த மீன்களை வீட்டிற்கு கொண்டு வருவேன். ஆற்றிலிருந்து அள்ளிவந்த நீரை கண்ணாடி குப்பியில் ஊற்றி பிடித்துவந்த மீன்களை வளர்க்க முற்பட்டு, அவை ஒவ்வொன்றாய் செத்துப்போன கணங்களில் துயரத்தோடு அடக்கம் செய்த சிறுபிள்ளை கணங்கள் மறக்க இயலாதவை.

முதன்முதலாக பயத்தோடு மருதாவை நான் நினைவு கொண்ட சம்பவம் அதன்பின் ஒருபோதும் நிகழவேயில்லை. நான் சிறுமியாக இருந்த ஒரு மழைகாலத்தில் காட்டாறெனப் பெருகிய மருதாவைக் கடக்கமுற்பட்ட  என்னுடையத் தெருவைச் சேர்ந்த முருகேஸ்வரி என்கிற பெண்ணை அது  தன்னோடு இழுத்துச் சென்றது. அப்போது கைக்குழந்தைகளாக இருந்த அவருடைய இரண்டு மகள்களும் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து பெரியவர்களாகி இதே தெருவில் வசிக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் தென்படும் பொழுதெல்லாம் அடித்துப்புரண்டோடிய மருதாவைக் கண்டு நான் பயந்த தினத்தை நினைவூட்டி விடுகிறார்கள். அந்த மழைநாளில் பக்கத்து ஊர் வரையில் முருகேஸ்வரியோடு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு, கடைசிவரையில் கண்டெடுக்க முடியாமல் போன வேறு இரண்டு பெண்களும் மருதாநதிக்கரையில் ஆவியாக உலாவுகிற கதைகள் இன்றுவரை தொடர்ந்திருக்கிறது. உள்ளூரில் பேய்க்கு பயம், வெளியூரில் நீருக்குப் பயம் என்கிற சொலவடை உண்டு. மிக நீண்ட காலம் மருதாவும், மருதாவில் ஆவியான பெண்களும் இரண்டுவிதமாகவும் பயப்படுத்திக்கொண்டே இருந்தார்கள்.

பள்ளிப்பிராயத்தின் ஓய்வுநேரங்களில் உலகவரைபடத்தில் நாடுகளை அடையாளம் காணுவதும், நதிகளை வரைந்து பெயர் குறித்துப்பார்ப்பதும் என்னுடைய பிடித்த விளையாட்டுகளுள் ஒன்றாக இருந்தது. நதிகளை வரைவதற்காகப் பயன்படுத்துகிற நீலவண்ணம் இப்போதுவரை எனக்குப் பிடித்த வண்ணமாகவே இருக்கிறது.

நீலம் என்றவுடன் சிந்துநதியின் கிளை நதியான ஜீலம்/ நீலம் என்கிற நதி நினைவுக்கு வருகிறது, இந்தியாவில் “ஜீலம்” என்றும் பாகிஸ்தான் பகுதியில் “நீலம்” என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்த நதியின் மீது நீர்மின்சாரம் எடுப்பதற்கான “கிருஷ்ணகங்கை” திட்டத்தினை 2007 ஆம் ஆண்டில் இந்தியா தொடங்க, அப்போது சர்வதேச நீதிமன்றத்திடம் பாகிஸ்தான் முறையிட்டுத்  தடுத்துவிட்டது. ஆனால் இந்தியா திட்டமிட்ட 330 மெகாவாட் நீர்மின் திட்டத்தைவிட மூன்று மடங்கு பெரிய நீர்மின்திட்டத்தை அதே நதியில் பாகிஸ்தான் தன்னுடைய எல்லையில் சீனாவின் உதவியுடன் அப்போதே தொடங்கிவிட்டது. 2011 இல் தடை விதிக்கப்பட்ட திட்டத்தை மீண்டும்  2013 சில நிபந்தனைகளோடு இந்தியா செயல்படுத்தியது. அந்த நிபந்தனைகள் என்னவென்றால், நதிநீரை வேறு எதற்கும் இந்தியா செலவு செய்யாமல் அதனுடைய நீரோட்டத்தைத் திருப்பி, மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பதுதான் அது. இந்த நிலத்தில் உற்பத்தியாகும் நதிநீரை விவசாயத்திற்குப் பயன்படுத்தவோ, அந்த அணைக்கட்டில் வண்டல் எடுக்கவோ இந்தியாவுக்கு அனுமதியில்லை.

ஆசிய கண்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கிடையே பாய்கிற  நதிகளுக்காக நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் எதுவும் வேறுநாடுகளில் முறைப்படுத்தப்படவில்லை. ஆனால் இந்தியா மட்டும் பாகிஸ்தானுடனும் வங்காளத்துடனும் நதிநீர் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளது. 1960 இல் நதிநீரை விட்டுகொடுத்து பாகிஸ்தானுடன்  இணக்கம் வைத்துகொள்ள நினைத்த  இந்தியாவோடு எப்பொழுதுமே அந்த நாடு நட்புக் கொள்ளவேயில்லை. போதாக்குறைக்கு செய்துகொண்ட சர்வதேச நதிநீர் ஒப்பந்தத்தின் விளைவாக ஆயக்கட்டு நாடுகளுக்கான நீர்வரத்தைக் குறைக்காமல் அனுப்பவேண்டும் என்பது இந்தியாவுக்கு மட்டுமேயான நிபந்தனையாக ஆகியிருக்கிறது. இவ்விதமாக நதிநீர் பகிர்மானத்தில் அயல்நாடுகள் தொடங்கி, உள்நாட்டிலும் மாநிலங்களுக்கிடையேயும் தீரவே தீராத போராட்டம்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நீர்மின்சாரம் எடுப்பதற்கான அணைக்கட்டு அமைத்தல் மற்றும் சுரங்கம் தோண்டுதல் சார்ந்த சூழலில் வளர்ந்தவள் நான். அணையினைக்  கட்டுவதற்காகக் குவிக்கப்பட்டிருக்கும் மணலில் கைகள் எட்டும் தூரம்வரையில் சுரங்கம் அமைப்பதும், சிறிய அளவிலான அணைக்கட்டுகளை அந்த மணல்மேட்டில் கட்டிப்பார்ப்பதும் என்னுடைய பால்யகால விளையாட்டு. தேனி மாவட்டத்தின் சுருளியாறு நீர்மின்திட்டப் பணிகளிலும், கோவை மாவட்டத்தின் காடம்பாறை நீர்மின்திட்டப் பணிகளிலும் அப்பா ஈடுபட்டிருந்த காலகட்டத்தில் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்து என்னுடைய வளரிளம் பருவத்தின் நீர்மையை அந்த நீர்த்தேக்கங்களிலிருந்தே அடைந்தேன். அப்பாவை நேசிக்கும் பெண்பிள்ளைகளுக்கு அப்பாவின் தொழிலும் அது சார்ந்த சூழலும் மிகப்பிடித்ததாக இருக்கும். அதனாலேயே எந்த நீர்மின்சாரத் திட்டத்தின் செயல்பாடுகளின் மீதும், அணைக்கட்டுகளின் மீதும் இயல்பான கவனமும் நதிகளின் மீதான பிடிப்பும் எனக்கேற்பட்டது.

தண்ணீர் பஞ்சம் என்கிற சொல்லை கேட்டு வளராத என்னை
கே.பாலச்சந்தரின் “தண்ணீர் தண்ணீர்” என்கிற திரைப்படத்திற்கு அப்பாதான் அழைத்துச்சென்றார். தண்ணீரும் மழையுமற்ற நிலங்கள் இருப்பதை என்னுடைய பதின்ம வயதில் அந்தத் திரைப்படத்தில்தான் முதன்முதலாக அறிந்து கொள்ள நேர்ந்தது. அப்படியான என்னுடைய வாழ்சூழலில் தண்ணீரைப் பற்றியும், நதிநீர் இணைப்புப்பற்றியும் அப்பாவும் அவரது நண்பர்களும் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறேன். அப்போது அவர்கள் பேசிய “மழையற்று வறண்ட நிலங்கள் ஒருபக்கமும் பயன்படுத்த இயலாமல் கடலில் கலக்கும் வெள்ளமும்” இன்றுவரையில் அப்படியேயிருக்கிறது.

இயற்கையாக அமைந்த குளங்கள், கண்மாய் போன்றவைகளை கோடையில் தூர்வாரி மழைக்காலத்திற்கு தயார் செய்வதும், தேவைக்குத் தக்க குளங்கள் வெட்டி பராமரிப்பதும் காலங்காலமாக நம்மிடமிருந்த ஒரு பழக்கம்.
“காடு கொன்று நாடாக்கி
குளந்தொட்டு வளம்பெருக்கிஎன பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. தமிழர்களிடம் இருந்த இந்தப் பழக்கம் பீகார் பழங்குடியினரிடமும் இருந்ததாக டி.டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். இந்த நிலத்தின் ஆதிக்குடிகள் தண்ணீரின் தேவையை நன்குணர்ந்தவர்களாகவும், பருவங்களைக் கணித்து அதற்கேற்ப செயல்படுகிறவர்களாகவும் இருந்தார்கள்.

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை புலவர் குடப்புலவியனார் எழுதிய புறநானூறு(18) பாடலொன்று ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம் ஆண்டுகள் வாழ  வாழ்த்துகிறது. அவ்விதம் ஒரு மன்னன் வாழச்செய்யவேண்டியதாக அந்தப்பாடல் குறிப்பிடுவது என்னவென்றால்,
“நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!” என மன்னனின் புகழ் நிலைத்திருக்கவும் ,”நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே“ என நீரும் உணவும் உடலுக்கு மிக அவசியம் என்பதால்
“உணவெனப்படுவது நிலத்தொடு நீரே!
நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைதிசினோரே!” என மக்கள் பசியின்றி வாழ நிலமும் நீரும் பாதுகாக்கப்படவேண்டும் என்பதாகவும் நீர்வளம் காக்க நினைப்பதே இம்மைக்கும் மறுமைக்கும் புண்ணியம் தரும் செயல் என்கிறது இந்தப்பாடல்.   

ஆதிகாலம் தொட்டு இன்றுவரையில் நீருக்கான தேடலும் அதனைப் பாதுகாக்கும் தேவையும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. தண்ணீரைத் தேடிச் சேகரிப்பதிலேயே தன்னுடைய வாழ்நாளை கழித்துவிடுகிற பெண்கள் காலங்காலமாக வாழ்ந்து மறைகிறார்கள். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரச் சிக்கலை மையமாக வைத்து கதைகள் எழுதியவர் எழுத்தாளர்  கந்தர்வன். அவரது “தண்ணீர்” என்கிற சிறு கதையில் மழை பொய்த்துப்போய், பசுமை அற்றுப்போன ஒரு கிராமத்தின் தண்ணீர் தேவையை நிறைவு செய்வதற்காக அந்தக்கிராமத்துப் பெண்கள் படுகிற துயரினைச் சொல்லியிருப்பார். பக்கத்து கிராமத்திற்கு வெகுதொலைவு நடந்து சென்று தண்ணீர்பிடித்துத் திரும்பும் பெண்கள், பாசஞ்சர் இரயிலில் எப்பொழுதும் தண்ணீர் வருமென்பதை அறிந்துகொண்ட நாட்களுக்குப் பிறகு காலிக்குடங்களோடு ஓடிச்சென்று அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு தண்ணீர் பிடித்து வருகின்றனர். அப்படியொரு பழக்கத்திற்கு ஆட்பட்ட பெண்களில் இந்திரா என்கிற பெண் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பொழுது இரயில் புறப்பட்டுவிடுமே என்கிற பதற்றத்தில் கைகளில் ரத்தம்வருமளவுக்கு அந்தக் குழாயை அழுத்திப்பிடிக்க முயலுகிறார். நிரம்பாத குடத்திற்காக வருத்தப்பட்டபடி  கிளம்பிவிட்ட ரயிலிலிருந்து குதிக்க முற்பட, வடக்கத்திப் பெண் ஒருவர் தடுத்துக் காப்பாற்றுகிறார். ரயிலோடு போய்விட்ட பெண்ணுக்காக வருந்தி அழுது, இராமநாதபுரம் வரைத் தேடிச் சென்று உறவினர்கள் திரும்ப, அடுத்த இரயில் நிலையத்தில் இறங்கி, தண்ணீரோடு தண்டவாளம் வழியே நடந்து வீடுதிரும்புகிறாள் இந்திரா. “குடத்துத் தண்ணீரைச் சுமந்துகொண்டா அவ்வளவு தொலைவிலிருந்து நடந்து வந்தாய்” எனக் கேட்கும் தகப்பனுக்கு, “நாளைக்கு வரை குடிக்க எங்கெ போறது?” என்று மட்டும் சொல்வாள். ஒருவீட்டின் அனைத்து உறுப்பினருக்கும் தேவையான தண்ணீர் தேவையை அந்த வீட்டின் பெண்தான் பூர்த்தி செய்கிறவளாக இருக்கிறாள்.

அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலின் மலையாள ஆக்கதித்தினை வாசித்த மலையாள எழுத்தாளர் பால் சக்காரியா தன்னுடைய பேட்டி ஒன்றில், “இந்த நாவல் வாசிப்புக்கு முன்புவரை மலையாள ஆக்கங்களோடு ஒப்பீட்டளவில் தமிழ்ப் படைப்புலகம் பின்தங்கியிருப்பதாக உணர்ந்ததாகவும், வாசிப்புக்குப்பின்பே தமிழ் ஆக்கங்களின் செட்டான தன்மையினால் கவரப்பட்டு தமிழிலக்கியம் நோக்கி நகர்ந்ததாகவும்” கூறுகிறார். தண்ணீருக்காக குடத்தைத் தூக்கிக்கொண்டு ஊர் பெயர் தெரியாத பெண்கள் அலைவதை திருமபத் திரும்பப் பார்த்ததன் விளைவாக இந்தக் கதையை எழுதியதாக அசோகமித்திரன் சொல்கிறார்.

வறண்ட நிலத்தின் தண்ணீர் தேவைக்காக உடல், பொருள், ஆவி இழந்தவர்களின் கதைகளினால் இந்த நிலம் உருவாகியுள்ளது. “இரண்டு சொட்டு தண்ணீர்” என்கிற பொருளில் K.A. Abbas  இயக்கத்தில்
1971 இல் “Do Boond Pani” என்கிற பெயரில் ஒரு திரைப்படம் வெளியானது. குடிதண்ணீருக்காக மைல்கணக்கில் நடந்து செல்கிற நிலையிருக்கும் ஒரு நிலத்தின் வளமைக்காக  உருவாக்கப்படுகிற  அணைக்கட்டுகளுக்காக உயிரை இழந்தவர்களும், வன்புணர்வு செய்யப்பட்ட பெண்களும் தவறாமல் இருந்துவிடுகிறார்கள் என்பதன் மிகச்சிறியபகுதியை  இந்தத் திரைப்படம் அடையாளம் காட்டுகிறது. அணைக்கட்டுகளில் உயிரிழந்த பலருடைய கதைகளை கேட்டு நானும் வளர்ந்திருக்கிறேன் என்பதால் எந்தவொரு பிரமாண்டமான கட்டிடங்களுக்குள் நுழையும் பொழுதும் அதன் கட்டுமானப்பணிகளின் பொழுது மரித்தவர்களின் ஆன்மாவை ஒருகணம் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.

தண்ணீர் என்பது உயிரின வாழ்வின் ஆதாரமாக இருக்க சுற்றுச்சூழல் மாசுபடுத்துவது என்பதும் தொடர்ந்து நிகழ்த்தப்படுகிறது. பருவமழை பொய்த்துப் போவது, நீராதாரம் பாதிக்கப்படுவது, குடிநீருக்கான தேடல், விவசாயம் நலிவடைவது என்பது சமகாலத்தின் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. பெருமளவில் நகரமயமாதலும், விவசாயநிலம் தொடர்ச்சியாக அழிக்கப்படுவதும், மீதமிருக்கும் விவசாயமும் விவசாயிகளின் அடிப்படையான வாழவாதரத்தையே நிரப்ப வழியற்றுப் போய்விட்டதுமான  நிலைக்கு காடுகள் அழிக்கப்படுவதும் சூழல் மாசுபடுவதும்தான் காரணம். எனவே இந்தியாவில் சுற்றுச்சூழல் சிக்கல்களைக் களைவதற்காக 1974 ஆம் ஆண்டில் சட்டம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் மிகக்கடுமையாக சுற்றுசூழல் பாதிப்பின் வேகம் அதிகரித்திருக்கிறது. மழைநீர் நிலத்தில் சேகரம் ஆகும்படியான மழைநீர் சேகரிப்புக்குட்டையமைத்தல்,  கிணற்றடிகளில் நீர் உறிஞ்சு குழிகளையும், ஓடைகளை சீரமைப்பதும், குளங்களை தூர் வாருவதும், மழை மரங்களை நட்டுப்பராமரிப்பதுமான பாரம்பரிய செயல்பாடுகளை மீட்டெடுப்பது காலத்தின் அவசியமாகியிருக்கிறது. 

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவல்படி, இந்தியாவில் 302 ஆறுகள் மாசுபடிந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 275 ஆறுகள் தனது நீண்ட பாதை முழுக்கவே மாசுபடிந்துள்ளது. இந்த ஆறுகளில் உயிர்வேதியல் மற்றும் ஆக்சிஜன் அளவு மிகக்குறைவாகவும் கரிமமாசு அதிகமாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் 39 இடங்களிலுள்ள 7 ஆறுகள் பெரிதும் மாசுபட்டுக் காணப்படுகின்றன. பவானி,  தாமிரபரணி, காவேரி, பாலாறு, சரபங்கா, திருமணிமுத்தாறு மற்றும் வஷிஸ்டா ஆகிய ஆறுகள் மாசுபட்டுள்ளதாகவும் இந்த ஆறுகளில் உயிர் ரசாயன ஆக்சிஜன் மிகவும் குறைவாக லிட்டருக்கு 30 மில்லிகிராம் அளவில் காணப்படுவதாகவும் தகவல் தெரிவிக்கிறது. 

நீர்வியாபாரம் என்பதைப்பற்றி ஒருகாலகட்டத்தில் சொல்லியிருந்தால் நம்பியிருக்கவே மாட்டோம். இன்றைக்கு அதுதான் லாபம் தருகிற தொழிலாக மாறியிருக்கிறது. தமிழகத்தின் வற்றவே வற்றாத ஒரேஒரு ஜீவநதி அயல்நாடுகள் முதலீடு செய்திருக்கும் குளிர்பானங்களாக மாறிக்கொண்டிருக்கிறது. வற்றுகிற நதி குறித்தும், விற்பனையாகும் நீர்வளம் குறித்தும் கையறுநிலைப் பாடல்களை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

இப்பொழுதும் மருதாநதி ஓடிகொண்டிருக்கிறது. இப்பொழுது இது மழைகால மருதா மட்டுமே. சூழலின் மாசு அதன் மீது படியவில்லை எனினும் ஓடிப்பெருக்கெடுக்கும் மருதாவைப் பார்த்து வெகுகாலமாயிற்று. தேங்கிய அணைநீரில் மீன்களை வளர்த்து லாபம் பார்ப்பவர்கள் வரத்தொடங்கிவிட்ட இந்த நாட்களில் அயிரையும் கெளுத்தியும் குறவையும் உழுவையும் என்னவென்றே அறியாத காலமாகிப் போனது. வெள்ளாவி வாசனையும் இல்லை, நாட்டு மாடுகளைக் குளிப்பாட்டும் படித்துறையும் இல்லை. சுழல் அறிந்து நீச்சல் பழக இடம் தேடும் இளையவர்களும் இல்லை.  நீர் சார்ந்த இவ்வகையான மாற்றங்கள் உணவு பண்பாட்டு மாற்றமாகவும் முற்றிலுமாக திரிபடைந்துவிட்டது.  திண்ணையற்ற வீடுகள் போல தண்ணீர் சார்ந்தும் வாழ்வியல் முறை மாறிவிட்டது. இன்றைக்கு யார் ஒருவர் வீட்டு வாசலிலும் “ஒரு சொம்பு தண்ணீர் குடிக்கக் கொடுங்க” என்று கேட்டு யாரும் நிற்பதில்லை.

என்னைப் போல பலருக்கும் சிநேகிதியாக அந்தந்த ஊர்களில் இருந்த பல நதிகள் இன்றைக்கு சாயப்பட்டறைக்கும், தொழிற்சாலைக் கழிவுகளுக்கும், மருத்துவமனையின் கழிவுகளுக்கும் அயல்நாட்டு குளிர்பானங்களுக்கும் காவு போய்விட்டன. மீன்களற்றுப்போன நதிகளாகி, மணல் அள்ளும் நதிகளாகி,  நதியே அற்று, பெயராகி போன நதிகளுக்காக மணல் இல்லாத ஆறு என்கிற என்னுடைய கவிதை,

“ஆற்றங்கரையில்
நாங்கள்  நட்டுவைத்த
செடிகளை
யாரோ  பிடுங்கி  எறிந்துவிட்டனர்

தட்டாங்கல்லுக்கு  பொறுக்கி   வைத்திருந்த
௬ழாங்கல்லைக்  காணவில்லை

சிறு மீன்களுக்குப்  பொரியிடும் வயோதிகர்கள்
இன்று  வரவில்லை

ஊத்துத்  தோண்டி விளையாடும்  சிறுமிகள்
மிரண்டு  ஓடுகின்றனர்

ராட்சஷ  ஓநாய்களைப்  போல
ஓலமிட்டு   வருகிறது  மஞ்சள் நிற லாரிகள்

ஈரம் உலர்த்துவதற்கென
நின்றிருந்த  வேம்புகள்
இன்னும்  சிறிது  நேரத்தில்  விழப்போகின்றன

லாரிகள்  சுமந்துபோகும் நதி மணலில்
ஈரம் வற்றிட சுருண்டு மடிகின்றன சிறு  நத்தைகள்.

ஒரு நிலத்தில் நதி வற்றிபோனால், அந்த நிலத்தில் ஏரிகளும், குளங்களும், கம்மாய்களும் வற்றிப்போகும். ஒரு நிலத்தில் நீர் ஆதாரம் வற்றிபோவது என்பது அந்த நிலத்தில் வாழுகிற மனிதர்களின் மனங்களையும் வற்றச்செய்துவிடும்.


***************************************************************************************************************
http://www.vikatan.com/news/vikatan-specials/84294-story-about-poet-sakthijothis-marutha-river.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2

2 comments:

Mohammed Siraj said...

அழியாத கோலங்களில் தெளிவான நீரோடையாய் உங்கள் கட்டுரை. முருகேஷ்வரி நினைவுகள் மனக் கடலில் துயர அலைகளாய்... இறையன்புவின் ஆற்றங்கரை ஓரம் சுமந்து மிதக்கும் உயிரவலங்கள்....தொடர்ந்து எழுதுக.வாழ்த்துகள்.

Dr.W.Mohamed Younus said...

கவித்துவமும் கனன்று உள்ளெழும் துயரங்களின் கண்ணீரும்செந்நீரும் கலந்து பரவும் உணர்வை உங்கள் கட்டுரை தாங்கி நிற்கிறது.
ராட்சஷ ஓநாய்களைப் போல
ஓலமிட்டு வருகிறது மஞ்சள் நிற லாரிகள் என்ற உவமையில் மருதா நதியின் அவலம் என் உள்ளத்தைப் பதற வைக்கிறது.
வலிகளும் வலுவும் சுமந்து உங்கள் கட்டுரை படைப்பாவேசத்துடன் வெளிவந்துள்ளது.
உங்கள் எழுத்தின் பயணம் நீளட்டும்.வாழ்த்துகளுடன்....
முனைவர் வ.முகம்மது யூனுஸ்
ஜமால் முகமது கல்லூரி திருச்சி