Tuesday, 26 April 2016


பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்.. 

19. நெடும்பல்லியத்தை:  






ஒரு பெண் துறவு ஏற்கிறாள் :

“கடவுள் நண்ணிய பாலோர் போல...”

கணவனையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு ஞானத்தைத்தேடி எந்த மரத்தடியையும் பெண்கள் எவரும் தேர்வதில்லை, மாறாகப் பெண்ணைப் பொறுத்தவரையில் ஞானம் என்பது இருப்பதைத் துறப்பது அல்ல, தன்னுடன் இருப்பவர்களுக்காக தன்னிடம் இருப்பவற்றைத் துறப்பது. தன்னவனுக்கான கடமைகளை ஏற்றுகொள்கிற நிலையில் அவனையும் துறந்து நிற்கிறவளாக பெண்ணே இருக்கிறாள்.
___________________________________________________________________________________

சிறு கோடுதான்
நீ
தேடியதும்
நான் வரைந்ததும்
அடையாளம் தெரியவில்லை
அவ்வளவுதான்

உமா மோகனின் இக்கவிதை பயணத்திற்குள் நம்மை அழைத்துச் செல்கிறது. முடிவற்று ஒரு பயணம் இருக்கிறது என்பதைப் உணர்கிறவர்களுக்கே உமா மோகன் வரைந்து காட்டியுள்ள ஒரு சிறு கோடு எதுவென்று உணரமுடியும். காலங்காலமாக பெண்கள் அனைவருமே ஒரே ஒரு கோட்டினைத்தான் திரும்பத் திரும்ப வரைகிறார்கள். அன்பின் கிளையை விரிப்பதற்காக அவர்கள் வரைந்துகொண்டிருக்கும் கோட்டினைப் புரிந்துகொள்ள இயலாமல் அன்பைத்  தேடியலைவது ஆணின் இயல்பாக இருக்கிறது.

இப்படித் தேடியலையும் மனதைத் தொடரவியலாமல் தடுமாறும் பெண்ணின் மனதை நறுமுகை தேவி தன்னுடைய கவிதையொன்றில் சொல்கிறார்.

“மூட்டையோடு பயணிப்பது
உனக்கென்னவோ
இலகுவானதும் பாதுகாப்பானதுவுமாக இருக்க
நானோ பறவை இறகை இழுத்துச்
செல்லும் எறும்பாய்
உன் ஒற்றை வார்த்தையை இழுத்தபடி
தடுமாறி அலைந்தவண்ணமிருக்கிறேன்
இப்பிரபஞ்ச வெளியெங்கும்”

தானாக உதிர்கிற பறவையின் இறகை, எறும்புகள் இழுத்துச் செல்வதில்லை. குருதியின் வாசனையும், தசையின் சிறிய துணுக்கும் ஒட்டிக்கொண்டிருக்கும் இறகுகளையே எறும்புகள் பற்றி இழுத்துச் சுமந்துசெல்லும். அவனுடைய வார்த்தை, அவளுக்கு குருதி கசியும் தசைத்துணுக்குள்ள இறகு போல இருக்கிறது. அவனுக்கு, அவள் சார்ந்த யாவற்றையும் விட்டுவிட்டு சட்டென கிளம்பும் பயணம் இலகுவாக வாய்க்கிறது. அவளுக்கு, அவன் சார்ந்த ஒற்றைச்சொல்லும் குருதி கசியும் வாசனையாக இருக்கிறது. அந்த வாசனையின் தீவிரத்தை அவளால் ஒதுக்கிவிடவே முடிவதில்லை.

பாண் நலின் இயக்கிய சம்சாரா என்கிற  இருமொழித் திரைப்படம்( திபெத்-லடாக்), இமயமலையில் லடாக் பிரதேசத்தில் நிகழ்கிற ஆன்மீக, காதல்கதை. “சம்சாரா” என்பது ஒருவகையிலான ஆன்மீகத்தேடல், ஒரு ஆண் ஆன்மீக ஞானம் தேடும் போராட்டத்தில் உலகத்தைத் துறப்பதுவும், பெண்ணொருத்தி தான் உணர்ந்த அன்பினைத் தக்க வைத்துக்கொள்ள  உலக வாழ்க்கையோடு ஒன்றிபோவதும்தான் இத்திரைப்படத்தின் மைய இழை.

“ ஐந்துவயதில் புத்த துறவியாக்கப்பட்டு  மடாலயத்தில் வளர்க்கப்படுகிற நாயகன் தஷி, தன் இளம்வயதின் பாலுணர்வு தூண்டுதலின் மாயத்தோற்றங்களில் சலனமடைகிறான்.  அவனுடைய ஆன்மீக குரு அவனை உலக வாழ்வுக்கு அனுப்பிவிடுகிறார். ஓடுகிறநதியில்,  அவன் தன் துவராடைகளைக் களைந்து, துறவறத்தைக் கைவிடுகிறான். துறவியாக இருந்தபொழுது ஒருமுறை மட்டுமே பார்த்திருந்த  பெமா என்கிற பெண்ணைத் தேடிவந்து  திருமணம்  செய்துகொள்கிறான். காதல், மகிழ்வு, துயரம், பொருளாதாரத் தேடல், குழந்தை என குடும்பம் சார்ந்த நடைமுறை வாழ்க்கைக்குப் பழகிவிடுகிறான். விவசாயம் சார்ந்த வாழ்வில் தரகுக்காரர்களின் ஏமாற்றுகிற செயலைக்கண்டு கோபப்படுகிறான்.  அதனால் விரோதமாகும் தரகுக்காரன் தஷியின் வயலில் விளைந்திருந்த பயிர்களுக்கு தீ வைத்துவிடுகிறான். இதனால் தஷி மேலும் கோபமாகி தரகுக்காரனிடம் சண்டையிடுகிறான். காயங்களுடன் ஓய்விலிருக்கும் தஷிக்கு வயல்வேலைக்கு வருகிற சுஜாதா என்கிற பெண்ணுடன்  தற்செயலாக பாலியல் உறவு ஏற்படுகிறது. அதன் பிறகு, குற்றஉணர்வுடன் தன் வாழ்வுபற்றி மறுபரிசீலினை செய்கிறான். ஒருநாள் இரவு மனைவி குழந்தைகளைப் பிரிந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறான். மீண்டும் ஓடும்நதியில் இல்லறவாழ்வின் ஆடைகளைக் களைந்து, காவி உடை  அணிந்து, துறவறத்திற்குத் திரும்புகிறான்.

அப்போது அவனைத்தேடி வருகிற அவன் மனைவி பெமா, “யசோதரா, இந்தப் பெயர் நினைவில் இருக்கிறதா? எனக் கேட்கிறாள். நடுஇரவில்  குழந்தையை, மனைவியை விட்டு விலகி, ஞானம் தேடிச்சென்ற சித்தார்த்தனை இந்த உலகம் புத்தர் என்று கொண்டாடுகிறது. அவ்விதமான ஞானத்தைத் தேடி கணவனை, குழந்தையைப் பிரிந்து யசோதரை சென்றிருந்தால், இந்த உலகம் அவளை ஏற்றுக்கொள்ளுமா எனக் கேட்கிறாள். ஒரு பெண்ணுக்கு அது சாத்தியமே இல்லை. ஆணுக்கு  ஞானம் என்பது  குடும்பத்தைத் துறப்பது. ஆனால் பெண்ணுக்கு ஞானம் என்பது உலக வாழ்வோடு இணைந்த உறவுகளால்  ஆனது. சித்தார்த்தன் பிரிந்து சென்ற  பிறகு  யசோதரையின்  துயரம் எதையும் அவன் அறியவேயில்லை. சரித்திரமும் அறியவில்லை” எனக் கூறி பெமா தஷியைப் பிரிந்து செல்கிறார்.  துறவறத்தைக் கலைக்கவும் இல்லறத்தைக் கலைக்கவும் ஓடும்நதியில் உடுத்திய ஆடையைக் கலைந்து விடுவது போல வாழ்வைக் களைவது ஆணுக்கு இயல்பாக இருக்கிறது.

எண்ணற்ற யசோதராக்கள் நம்மைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாலச்சந்தர் இயக்கிய “அவள் ஒரு தொடர்கதை” திரைப்படத்திலும் இப்படி ஒரு காட்சி, நிறைய குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தைத் தவிக்கவிட்டு காணாமல்போன கணவன், ஒரு சாமியாராகத் திரும்பி வருகிறான். அப்போது அவன் மனைவியிடம், “குடும்பத்தை உதறித்தள்ள கோழைத்தனம் மட்டும் போதும், ஆனா துறவறத்தை உதறித்தள்ள துணிச்சல் வேணும், அது எங்கிட்ட இல்லம்மா” என்று சொல்கிறான். இவ்விதமான ஆண்களாலும் ஆனதாகவே பெண்களின் உலகம்  இருக்கிறது. காசி, இராமேஸ்வரம், திருவண்ணாமலை போன்ற  கோவில் தலங்களில் காவியுடை உடுத்திய சாமியார்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் அவர்களின் கோழைத்தனத்தால் தனித்திருக்கும் ஒரு பெண்ணை நினைக்காமல் இருக்க முடியவில்லை. ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் கூட அவளின் துயரமென்பது குறைவுதான். ஆனால் குடும்பத்தை  பாரமெனக் கருதி, வீட்டைவிட்டு ஓடிப்போய்விடுகிற கணவன்களால் பெண்கள்  அடையும் துயரங்களை அத்தனை எளிதில் சொல்லிவிட முடியாது. கணவன்  இருக்கிறானா... செத்து  விட்டானா என்பதை அறியவியலாமல் குடும்பத்தை வழிநடத்திச்  செல்கிற எத்தனையோ பெண்கள் அவர்களின் வாழ்நாள் முழுக்க எதிர்கொள்கிற கேள்விகள் பேரலைகளாக எழுந்து அவர்களைத் துயரத்தில் ஆழ்த்திவிடும்.

சங்கப் பெண்பாற்புலவர் நெடும்பல்லியத்தையின் குறுந்தொகைப்பாடல், கடவுளை நெருங்கியவர்போல இருக்கும் தலைவனைக் குறித்து எழுதியுள்ளார்.

“மலை இடையிட்ட நாட்டாரும் அல்லர்
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்
கடவுள் நண்ணிய பாலோர் போல
ஒரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென்மன் யான் பண்டு ஒரு காலே.“

“வருவதற்கு வழிகள் அரியதாக உள்ள மலைகள் உயர்ந்து குறுக்கிடுமாறு அமைந்த நாட்டைச் சேர்ந்தவரும் அல்லர்; இடம் தோன்றாமல் மறைத்தற்குரிய மரங்கள் உயர்ந்து வளர்ந்த நாட்டைச் சேர்ந்தவரும் அல்லர்; நம் கண்ணாலே காணும்படியாக விரைவில் வருவதற்குரிய அண்மையில் தலைவர் இருந்தும் தெய்வத்தை நெருங்கியவர்போல என்னை ஏற்காமல் மனதால் நீங்கி வாழ்கிறார். முன்பொரு காலத்தில் என்னைப்பொருந்தி அவர் வாழ்ந்தபொழுது ஏற்படுகிற சிறியபிரிவிற்கும் அவர் பொருட்டு மிகவும் வருந்தினேன். ஆனால் இப்போது அந்த வருத்தம் இல்லை” எனத் தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

இந்தப்பாடலுக்கு உரையாசிரியர்கள் பாலைபாடிய பெருங்கடுங்கோ எழுதிய குறுந்தொகைப் பாடலான “ஓர் ஊர் வாழினும் சேரி வாரார்” என்கிற பரத்தையர் பிரிவினால் ஏற்படுகிற பிரிவினை ஒப்பிட்டு எழுதியுள்ளனர். பரத்தையரை விரும்பிச்சென்ற தலைவன் தன்னுடைய குற்ற உணர்வினால் தலைவியின் தூய்மை காரணமாக தலைவியை விட்டுவிலகி இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்தப்பாடலை. காண்பதற்கரிய களவுக் காலத்தில்கூட காண வந்தவன், இணைந்து வாழவேண்டிய கற்புக்காலத்தில் பிரிந்து வாழ்கிறான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் பிரிவுக்கு பரத்தையர்தான் காரணம் என்று புரிந்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் சங்கமரபில் பரத்தையரை நாடிச்செல்கிற தலைவனைக் குறித்துப் பெருமிதம் அடையும் தலைவிகளையும் காணமுடிகிறது. சிறிய ஊடலுக்குப்பிறகு அந்தத்தலைவனை அவள் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறாள். இந்நிலை இன்று வரைகூடத் தொடர்கிறது. ஆண் வேறு பெண்ணுடன் வாழ்ந்து திரும்பினாலும் பெண் ஏற்றுக்கொள்கிறாள். சேர்ந்து வாழும்பொழுது சிறிய பிரிவைக் கூடத் தாங்காமல் வருந்துகிறவள்,  கடவுளை விரும்பிச்செல்கிற ஆணை, அவர் போக்கிலேயே விட்டுவிடுகிறாள்.  

இதேஆண், ஒருகாலத்தில் தலைவிடம் எவ்வாறு இருந்தான் என்பதையும் நெடும்பல்லியத்தையே அவருடைய இன்னொரு பாடலில் குறிப்பிடுகிறார்.
  
“அயிரை பரந்த அம் தண் பழனத்து
ஏந்து எழில் மலர தூம்புடைத் திரள்கால்
ஆம்பல் குறுநர் நீர் வேட்டாங்கு இவள்
இடை முலைக் கிடந்தும், நடுங்கல் ஆனீர்
தொழுது காண் பிறையின் தோன்றி, யாம் நுமக்கு
அரியம் ஆகிய காலைப்
பெரிய தோன்றினிர் நோகோ யானே.“

“தலைவனும் தலைவியும் புதுமணத்தம்பதிகள். அவர்கள் குடும்பம் நடத்துகிற வீட்டிற்கு தோழி வந்திருக்கிறாள். தலைவியை கொஞ்சம்கூட பிரிவதற்கு மனமின்றி தலைவன் ஓயாமல் சுற்றி வருவதைப் பார்க்கிறாள் தோழி. அப்போது அவளுக்கு அவர்களின் களவு வாழ்வு நினைவுக்கு வருகிறது. அப்போதெல்லாம் தலைவியை தலைவன் காண்பது அத்தனை எளிதில்லை. அது மூன்றாம்பிறை பார்ப்பதுபோல மிக அரிதான நிகழ்வாக இருக்கும்.

அயிரைமீன் மேய்வதற்கு வசதியான பரந்த, குளிர்ந்த பொய்கையில் துளையுடைய திரண்ட நீண்ட தண்டுகளுடன் ஆம்பல் மலர்கள் உள்ளன. அவற்றைப் பறிப்பவர்கள் நீரின் நடுவிலேயே நின்றபடி இருப்பினும், தண்ணீர் குடிக்கும் வேட்கையை அடைவதுபோல தலைவியின் மார்பகத்தின் நடுவே கிடக்கும்படியே இருந்தபோதும் நடுங்குதல் உடையவராக இருக்கிறீர்கள். களவுக்காலத்தில் பிறைச்சந்திரன்போல என்றோ ஒருநாள் காணக்கிடைக்கும் நிலையில் நீர் மிகவும் பொறுமையுடன் இருந்தீர். அதை நினைத்து இப்போது வருந்துகிறேன்” எனத் தோழி சொல்கிறாள். தலைவியின் மீது கொண்டுள்ள அன்பின் வன்மையை களவுக்காலத்தில் தான் அறியவில்லை என்கிறாள்.

களவுக்காலத்திலும், கற்புக்காலத்தின் தொடக்கத்திலும் ஆணுக்கு பெண்ணிடம் இருக்கிற வன்மையான அன்பு, காலப்போக்கில் கரைந்து மறைகிறது. ஆணுக்குத்தான் மனித வாழ்வின் அடிப்படையை புரிந்து கொள்ளவியலாத சந்தர்ப்பங்களில் ஞானம் வேண்டியதாக இருக்கிறது. குடும்பம் நடத்துவதின் அடிப்படையான பொருளாதாரச் சிக்கல்களையும் அன்றாடத்தின் நிகழ்வுகளையும் எதிர்கொள்ளத் தடுமாறும் பொழுது அதற்கான தீர்வை குடும்பத்துக்கு வெளியே தேட முயலுகிறான். பெண்ணுக்கு இவ்விதமான குழப்பம் ஒருபோதும் இல்லையென்றே சொல்லலாம். 

கணவனையும் குழந்தைகளையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு ஞானத்தைத்தேடி எந்த மரத்தடியையும் பெண்கள் எவரும் தேர்வதில்லை, மாறாக பெண்ணுக்குத் துறவென்பது அவளுக்குப் பிடித்தமான உணவைத்துறப்பது, அவளுக்குப் பிடித்தமான உடையைத்துறப்பது, அவளின் விளையாட்டுக்களைத் துறப்பது, கல்வியைத் துறப்பது, உறக்கத்தைத் துறப்பது என்பதாக இருக்கிறது. குழந்தைகளுக்காவும் கணவனுக்காகவும் தன்னுடைய விருப்பங்களைத் துறந்துவிட்டு, அவர்களுக்கான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்வதிலேயே அவளுக்கான ஞானத்தை அடைந்துவிடுகிறாள். பெண்ணைப் பொறுத்தவரையில் ஞானம் என்பது இருப்பதைத் துறப்பது அல்ல, தன்னுடன் இருப்பவர்களுக்காக தன்னிடம் இருப்பவற்றைத் துறப்பது. தன்னவனுக்கான கடமைகளை ஏற்றுகொள்கிற நிலையில் அவனையும் துறந்து நிற்கிறவளாக பெண்ணே இருக்கிறாள்.


இவர் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளது. குறுந்தொகை: 178, 203.

No comments: