பெண் –
உடல் , மனம் , மொழி :
சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..
18. பூங்கணுத்திரையார் :
காதலில் அமிழ்ந்திருக்கும் பெண்:
“நன்னுதல் பசலை நீங்க...”
“சங்ககால சமூகத்தில் அனுமதிக்கப்பட்ட
இயற்கைப்புணர்ச்சிக்கு இடமும் காலவரையறையும் உண்டு. களவு ஒழுக்கத்தை
நீட்டிக்கவிரும்பும் தலைமகனை இடித்துரைத்து மணவாழ்க்கைக்கு நெறிப்படுத்துபவர்களாக தோழி, செவிலித்தாய், பாங்கன் முதலியோர் இருந்தனர்.
இன்னும் இவ்வகையான ஆண்பெண் உறவு வேறு வடிவங்களில் தொடர்வதைக் காண்கிறோம். இப்போது
ஒரு காதலைத் தொடங்கவும் சமயத்தில் முடித்துக்கொள்ளவும் ஒரு குறுஞ்செய்தி
போதுமானதாக இருக்கிறது.”
______________________________________________________________________________
ஒரு பெண்ணுக்கு உடல்பேதம் அறியாத பருவத்திலேயே
அப்பாவாகவும் சகோதரனாகவும் ஆண் அறிமுகமாகி விடுகிறான். அந்த வயதில் அவளுக்கு
அவர்களை ஆண்கள் என்று பிரித்துணரவே தெரியாது. பெண்குழந்தை வளர்ந்து வரும்பொழுது
உடைகளின் வழியாக ஓரளவு வித்தியாசத்தை உணர்கிறது என்றாலும் தான் பங்கெடுக்கும் விளையாட்டுகளின்
வழியாகவே தன்னைப் பெண் என்று முதலாவதாகவும் முழுமையானதாகவும் அறிந்து கொள்கிறது எனலாம். அவளுக்கு மட்டும்
விலக்கப்படும் விளையாட்டுக்களும் அண்ணனுக்கோ தம்பிக்கோ அனுமதிக்கப்படும் விளையாட்டுகளும்
அவர்கள் விளையாடும் வெளிகளும் ஆண் என்றும் பெண் என்றும் பால் வேறுபாடுகளை
நிலைப்படுத்துவதாக அமைகிறது. குறிப்பிட்ட சில விளையாட்டுக்கள் மட்டுமே விளையாட பெண்களுக்கு
இன்றுவரையில் அனுமதிக்கப்படுகின்றன. அதற்கு உடலியல் ரீதியாகக் காரணங்கள்
சொல்லப்பட்டாலும் பெண் என்று தன்னை உணர்கிற இடங்களாக விளையாட்டுத் தளங்களே
அமைந்துள்ளன. விளையாட்டுக்களின் வழியாகவே அல்லது விளையாட அனுமதிக்கப்படும்
இடங்களின் வழியாகவே ஒரு பெண்ணுக்கு பாலினவேறுபாடு முற்றிலுமாக அறிவுறுத்தப்படுகிறது.
சங்கக்காலத்தில்
“ஓரை” என்று ஒரு விளையாட்டை பெண்கள் விளையாடினர். கடலலை
பாயும் மணலிலும், ஆற்றுமணலிலும், சேற்றுநிலத்திலும்,
முற்றத்தில்
பரப்பப்பட்ட மணலிலும் இது விளையாடப்பட்டதாகச் சங்கப்பாடல்கள் தெரிவிக்கின்றன. இந்த
விளையாட்டு தொடங்கும் முன்பாகவோ பின்பாகவோ வண்டல் விளையாட்டு,
பாவை
விளையாட்டு, அலவன் ஆட்டல் போன்றவை விளையாடப்படுவதுண்டு. ஓரை
விளையாடும்போது மகளிர் தம் காற்சிலம்பு ஒலிக்க ஓடுவர். கடலலை மணலில்
விளையாடும்போது மகளிரின் கூந்தல் நனைந்து நீர் சொட்டும். ஆற்றில் ஓரை விளையாடும்
மகளிரோடு இளைஞர் சேர்ந்துகொள்வதும் உண்டு. என்றாலும் ஆண்களுடன் இணைந்து விளையாடினால்
அடக்கமின்மை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒரு பெண் காதலுற்றவுடன் முதலாவதாக செய்கிற காரியம்
அதனால் வரையிலுமான தனது விளையாட்டுகளை கைவிடுவதுதான். பலசமயங்களில் அம்மா
கண்டித்தாலும் காதல் வயப்படாதவரையில் பெண்குழந்தைகள் ஆண்களுடன் இணைந்து
விளையாடுவதை நிறுத்துவதில்லை. ஆனால் காதல் உணர்வு தோன்றியவுடன் தன்னுடலை
அதுவரையில் இல்லாத வகையில் புதிதாக அறியத்தொடங்கும் பெண் தன் தோழிகளுடனும் கூட
விளையாடாமல் தனிமைக்குள் ஒடுங்கிவிடுகிறாள்.
“தாதின் செய்த தண் பனிப்பாவை
காலை வருந்துங் கையாறோம்பு என
ஓரை யாயங் கூறக் கேட்டும்
இன்ன பண்பி னினைபெரி துழக்கும்
நன்னுதல் பசலை நீங்க அன்ன
நசை ஆகு பண்பின் ஒருசொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே”
சங்கப் பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையாரின் குறுந்தொகைப்
பாடலில் “பூந்தாதுக்களினால் செய்யப்பட்ட குளிர்ச்சியான விளையாட்டுப்பாவை, தலைவி
தன்னை எடுத்து விளையாடவில்லையென வருந்துகிறது. இந்தப் பூம்பாவையைக் காப்பாயாக எனத்
தலைவியிடம் ஓரை விளையாடும் தோழியற் கூட்டம் சொல்லக்கேட்டும், அவள் விளையாட்டில்
கலந்து கொள்ளவில்லை. இவ்வாறு விளையாட்டிலிருந்து ஒதுங்கியிருக்கும் தலைவியினுடைய
பசலை நீங்குமாறு அவளுக்குத் விருப்பமான ஒரு சொல்லைத் தலைவன் வந்து சொல்ல இயலாதா”
எனத் தோழி கேட்கிறாள்.
தலைவனுடைய ஒற்றைச்சொல்லுக்கு ஏங்குகிறவளாக தலைவி
இருக்கிறாள். அந்தச்சொல் அவளுக்கு விருப்பமான ஒன்றாக இருக்கவேண்டும் என்றும்
விரும்புகிறாள். ஆணுடைய உடல் பெண்ணுக்கு பரிச்சயம் ஆவதற்கு முன்பாகவே அவனுடைய
சொற்களினால் ஈர்க்கப்படுகிறாள். அதனாலேயே சொற்களுக்குள் சிக்கிக்கொண்டு வெளிவரமுடியாமல்
தடுமாறுகிறவளாகவும் ஆகிவிடுகிறாள். பெண்ணின் உடலைத் தன்வயபடுத்த முயலும்
ஆண்களுக்கு ஆதரவானதாகவே அவனுடைய சொற்கள் எப்போதும் அமைகின்றன. விதந்தோதும் அவனது
வார்த்தைகளின் வழியாக தன்னைக் காணத்தொடங்கும் பெண், அதுவரையிலும் அவளுடைய
அடையாளமாக இருந்த தனது செயல்கள் பலவற்றையும் விடுத்து அவனது விருப்பத்தை ஒட்டியே
தன்னுடைய மனதை இழையவிடுகிறாள்.
பெண்களின் நேசம் என்பது மனதிலிருந்து உருவாவது
என்றாலும், விரும்புகிற நபரைத் தேர்வதும் நேசம் தொடங்குகிற பருவத்தைத்
தீர்மானிப்பதும் அப்பெண்கள் வாழ்கிற சூழலே ஆகும். சங்க இலக்கியத்தில், பொதுவாக தினைப்புனம்
காக்கச் சென்ற இடங்களில் காதல் தொடங்கியதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தலைவன்
வேறு நிலத்தைச் சேர்ந்தவனாக இருப்பான். அவனைப்பற்றிய நேரடியான எந்தத் தகவலும்
இல்லாமலேயே தலைவி தன்னுடைய கண்களால் கண்டவுடன் காதல் கொள்கிறாள். இந்த
நூற்றாண்டில் நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்து, அந்த கலைஞர்களின் மீது
அன்பினை வளர்த்துக்கொண்ட பெண்கள் பலரும் உண்டு. அதைப்போலவே பெண்கள் படிக்க
ஆரம்பித்து, கதைகள் வாசிக்கத் தொடங்கிய காலக்கட்டத்தில் கதைகளில் வரும்
கதாபாத்திரங்களை தமது கனவுநாயகர்களாக வரித்துக்கொண்ட பெண்கள் அநேகர். கல்கியின்
வந்தியத்தேவனையும், ஜெயகாந்தனின் சாரங்கனையும், நா.பார்த்தசாரதியின் அரவிந்தனையும்
நேசித்த பெண்களை நான் அறிவேன். இதைப்பற்றி “நாவல் படிக்கிற பெண் குடும்பத்துக்கு
ஆகமாட்டாள் என்கிற கருத்துக்கூட ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் நிலவியதாக”
எழுத்தாளர் பிரபஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற கற்பனைக்கனவுகள் நடைமுறை வாழ்க்கைக்கு
எவ்வகையிலும் உதவாதென பெண்ணுக்குத் தெரிந்திருந்தாலும் அதன் பின்னால் செல்கிறவளாக இருந்திருக்கிறாள்.
கதைகளின் நாயகர்களைத் தொடர்வது போலவே சொந்த வாழ்விலும், நேரில் சந்திக்கும்
ஆணிடமும் ஒருவித மிகைக் கற்பனையுடனே பழகத்தொடங்குகிறாள். மனதின் இயல்பான ஈர்ப்பை
இதுபோன்ற மிகையுணர்வுகளால் சிக்கலாக்கிக் கொண்டுவிடுகிற பெண்கள் அது நிறைவேறாதபோது
தற்கொலைவரையிலும் கூட சென்றுவிடுகிறார்கள். சங்ககாலத்தில் மடலேறிக் காதலைத் தெரிவிப்பது
என்பது ஆணுக்கு அனுமதிக்கப்பட்டிருந்தது. அதுபோலவே இன்றுவரையிலான சமூக அமைப்பில்
காதலைத் தெரிவிப்பதில் ஆணுக்கு அதிக சுதந்திரம் உண்டு. மேலும் திருமணத்திற்கு
முன்பாக ஒர் ஆண் எதற்காக தற்கொலை செய்து கொண்டாலும் அது காதல் தோல்வி என்றே சொல்லப்படுகிறது.
ஆனால் இன்றுவரையிலும் காதல்தோல்வியினால் பெண் தற்கொலை செய்து கொண்டாள் என்று
செய்தி வெளிவருவதில்லை. பெரும்பாலும் பெண்களின் இத்தகைய மரணங்கள் தீராத வயிற்றுவலி
என்பது போன்ற ஒற்றை வாக்கியத்தால் மூடி மறைக்கப்படும்.
இந்நிலையிலிருந்து இன்றைய பெண் சற்றே முன்நகர்ந்திருக்கிறாள்
என்றுதான் சொல்லவேண்டும். பெண்களுக்கு ஆணுடைய தோற்றமும் புறச்செயல்பாடுகளும்
அவனைப்பற்றிய செய்திகளும் மட்டுமே அறிமுகமான காலத்தில் மனதால் மட்டுமே ஈடுபாடு
கொண்டிருந்தாள். சங்ககால சமூகத்தில் அனுமதிக்கப்பட்ட இயற்கைப்புணர்ச்சிக்கு இடமும்
காலவரையறையும் உண்டு. களவு ஒழுக்கத்தை நீட்டிக்கவிரும்பும் தலைமகனை இடித்துரைத்து
மணவாழ்க்கைக்கு நெறிப்படுத்துபவர்களாக
தோழி, செவிலித்தாய், பாங்கன் முதலியோர் இருந்தனர். இன்னும் இவ்வகையான
ஆண்பெண் உறவு வேறு வடிவங்களில் தொடர்வதைக் காண்கிறோம். இப்போது ஒரு காதலைத்
தொடங்கவும் சமயத்தில் முடித்துக்கொள்ளவும் ஒரு குறுஞ்செய்தி போதுமானதாக
இருக்கிறது. மேலும் சங்க
இலக்கியங்களில் காதல் தோல்வியினால் தற்கொலைகள் நிகழ்ந்ததாகக் குறிப்புக்கள் இல்லை.
ஆனால் அப்படி நிகழாமல் இருந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
பெண்களின் நிறைவேறாது போகும் காதல் என்பது அவர்களின்
மனதின் அடியில் உறைந்திருக்கும்.
மறைந்திருக்கும் அந்தக்காதலுடனே வேறு ஒருவனைத் திருமணம் செய்துகொள்ள தயாராகிறாள். இவ்விதமாக சூழலின் கட்டாயத்தால் வேறு ஒரு வாழ்க்கைக்குள் தன்னைப்
புகுத்திக்கொள்கிற பெண்ணைப் பற்றி கவிஞர் இ.எஸ்.லலிதாமதியின் கவிதை ஒன்று,
“நாதஸ்வரத்தில்
வழியும் இசை அழகுதான்
அதில் இல்லை நீ....
கழுத்தில் இடப்பட்ட மாலையில்
இல்லை உன் வாசம்...
சூழ நின்று வாழ்த்துபவர்களின்
வாழ்த்தில் இல்லை
என் வாழ்க்கை...
என் தலை மீது விழும்
ஒவ்வோர் அரிசியிலும்
இருக்கிறாய் நீ!”
வழியும் இசை அழகுதான்
அதில் இல்லை நீ....
கழுத்தில் இடப்பட்ட மாலையில்
இல்லை உன் வாசம்...
சூழ நின்று வாழ்த்துபவர்களின்
வாழ்த்தில் இல்லை
என் வாழ்க்கை...
என் தலை மீது விழும்
ஒவ்வோர் அரிசியிலும்
இருக்கிறாய் நீ!”
எல்லோரும்
அட்சதையாக எண்ணி அள்ளிவீசுகிற அரிசிமஞ்சள் ஒவ்வொன்றும் அவளுக்கு மட்டும்
வேருவிதமாகப் பொருள் தருகிறது.
சமீபத்திய
நிகழ்வு ஒன்றில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகளுடன் உரையாட நேர்ந்தது.
அப்பொழுது ஒரு மாணவி தன்னுடைய அம்மா ஒரு குறிப்பிட்ட பாடலை அவ்வப்போது பாடுவதைக்
கேட்டிருப்பதாகவும் அப்பா வீட்டிலிருக்கும் சமயங்களில், அம்மா ஒருபோதும் பாடமாட்டாள்
என்றும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப்பாடலின் பொருளும் அம்மாவின் குரலும்
அம்மாவின் இளமைக்காலம் பற்றிய எதையோ ஒன்றை தனக்கு உணர்த்துவதாகச் சொன்னார். இச்சூழலில்
வாழ்கிற பெண் அவளுடைய மனதின் ஆழத்தில் மறைந்திருக்கும் ஆணுடன் தனக்குள்
பேசுகிறவளாக இருக்கிறாள். குறிப்பாக பாடல்களில் அவனை அடையாளம் காணுகிறவளாக இருக்கிறாள்.
பெற்றோரின்
விருப்பத்திற்கு உட்பட்டு காதல் செய்தவனை
விட்டு விலகி வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொள்ள பெண் ஒப்புக்கொள்கிறாள்.
காலப்போக்கில் யதார்த்தத்தில் அவனை மறந்துவிட்டது போலத் தோன்றும்.
ஆனால், அவளின் முக்கியத் தருணங்களில் அவளுக்கு வேராகவும் நீராகவும் அவனுடைய நினைவு
இருப்பதாக கவிஞர் கலைஇலக்கியா தன்னுடைய ஒரு கவிதையில் சொல்கிறார்.
“நாம் சந்திக்கவே முடியாது போகலாம்
வாழ்க்கைச்
சிக்கலின் நடுவே
கடக்கும் பாடலாய்
நமது
நேசம் சிறுத்துப்போகலாம்
காலம்
பதியமிடும் புதரில்
நீ
இருக்குமிடம்
மறைந்தும்
போகலாம்
உன்னைக்காட்டிலும்
யாரையேனும்
நேசிக்கச் சூழல் நேரலாம்
அப்போதும்
என் பேனா வழி வரும்
என் பேனா வழி வரும்
வார்த்தைக்கும்
வரிக்கும்
நீதான்
வேரும் நீரும்.“
தான்
விரும்பியவனைத் திருமணம் செய்ய அனுமதிக்கப்படாத சூழலிலிருக்கும் ஒரு பெண், தன்னுடைய
பெற்றோர் விருப்பத்திற்கு உட்பட்ட திருமணத்திற்குக்
கட்டாயப்படுத்தபடுவது போன்ற தமிழ்த் திரைப்படக் காட்சிகளில் பெரும்பாலும் ஒலிக்கிற
வசனம் ஒன்று உண்டு. அது, “அவன் என்னுடைய பிணத்துக்குத்தான் தாலி கட்டுவான்“ எனக்
கதாநாயகி சொல்வது. இது அப்படியே “பிணம்” என்று நேராகப் பொருள் கொள்ள
வேண்டியதில்லை. பெண்ணுடைய மனமென்பது காதலனிடம் இருக்க, உடல் மட்டுமே வேறு ஒருவருக்குச் சொந்தமாகிறதென
எடுத்துக்கொள்ள வேண்டும்.
சங்கப்
பெண்பாற் புலவர் பூங்கணுத்திரையாரின் மற்றுமொரு குறுந்தொகைப் பாடல், தோழியிடம்
தலைவி சொல்வதாக அமைந்துள்ளது. இந்தப்பாடலில், தலைவியை அயலவர் பெண் கேட்டு வருகின்றனர்.
பக்கத்து ஊரில் பெய்த பெருமழையினால் பெரும் சேதம் விளைந்து விலங்குகள் ஆற்றில்
அடித்து வந்து கொண்டிருக்கிறது. இது
தெரியாமல், ஆழமான குளத்தில் மீன்
பிடிப்பதற்கு வலை இடப்பட்டிருக்கிறது.
அந்த வலையில் மீன் கிடைப்பதற்குப் பதிலாக
செத்துப்போன விலங்குகள்தான் சிக்கும். அதுபோல அயலவரின் இந்தத் திருமண முயற்சியும்
நிகழும். அவர்களுக்குக் கிடைக்கப்போவது உயிர்த்துடிப்புள்ள மீன் அல்ல, செத்துப்போன
விலங்கின் சதைப்பொருள் மட்டுமே என்பதாக பொருள்பட பாடியுள்ளார்.
“காணினி வாழி தோழி யாணர்க்
கடும்புன லடைகரை நெடுங்கயத் திட்ட
மீன்வலை மாப்பட் டாஅங்
கிதுமற் றெவனோ நொதுமலர் தலையே.”
சங்க இலக்கியத்தில்
இவர் எழுதியதாக மூன்று பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. குறுந்தொகை 48, 171, புறநானூறு 277.
No comments:
Post a Comment