Friday, 29 June 2012

பூக்கனவு . . .

கோடை விடுமுறை
முற்பகல் விளையாட்டுகளில்
உன்னிப் பூக்களைச் சூட்டி மகிழ்ந்தவனும்
உன்னிப் பழங்களையும் இலைகளையும்
தாம்பூலமென
பழக்கித் தந்தவனுமான அவனை
ஆயிரம் ஆயிரம் இரவுகளைக் கடந்த பின்பு
சந்திக்கிறாள்

இரவுகளை
அவன் நினைவால்
கடந்தபடியிருந்தாள்
எழுதப்படாத இரவுகளின்
வெற்றுக் காகிதங்களையும்
சேகரித்து வைத்திருந்தாள்

அவர்களின் பால்ய நினைவுகளை
எழுதுவதற்கு
இன்னும்
நிறைய காகிதங்கள் தேவைப்படலாம்

காற்றில் படர்ந்திருந்த பக்கங்களில்
நினைவின் வண்ணங்களைக்கொண்டு
பறவைகளின் காடு ஒன்றை வரையத் துவங்கினாள்

அங்கே
இன்னும் சில இரவுகள்
இன்னும் சில பகல்கள்
இன்னும் சில பருவங்கள்

அந்தப் பூக்கள்
மணந்துகொண்டிருக்கும்

தேன் பருக வருகின்ற வண்டைப் பற்றிய
அவள் கனவு தொடர்கிறது.

1 comment:

Ponnambalam kalidoss ashok said...

எழுதப்படாத இரவுகளின் வெற்றுக் காகிதங்களையும் சேகரித்து வைத்திருந்தாள்--ஒரு நாள் கனவு குமரன் நனவில்
வருவான்..இருவரும் சேர்ந்து அற்புத 'கனாக் காலங்களை...' அழகாக ஷிருச்டிக்கலாம் ..தூங்க விடா கனா ..கண்ணன் வரும் வரை..