Tuesday, 26 June 2012

விதை. . .



கையிலிருக்கும்
சில விதைகளைத் தருகிறேன்
உங்களுடைய நிலத்தின் இடுவதற்காக 

இன்று மேலும் இரண்டு மரங்களுக்கு 

நீர் ஊற்றியிருக்கிறேன்  

யாரோ  விதைத்து 
வளர்ந்த  மரத்தில் 
வயதானவர்கள்  ஓய்வெடுத்துச்  செல்கின்றனர் 

காய்த்துக் குலுங்கும் மரத்தினடியில் 
சிறுவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கின்றன

என்னிடம் மேலும் சில விதைகள்  இருக்கின்றன
 என்னிடம் மேலும் சில பறவைகள்  இருக்கின்றன
என்னிடம் மேலும் சில ௬டுகள்  இருக்கின்றன


முதலில் யார்
இந்த விதையை விதைத்தார்கள் என்று அறிகின்ற
பின்னொரு  நாளில்
என்னுடைய  கைகளிலிருந்த  விதைகளை
வாங்கியவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்

அப்பொழுது
உங்களுடைய  நிலத்தில் விதைத்துக்கொண்டிருப்பீர்கள் 

நட்பு . . .



அந்தப் பயணத்தில்
என்னருகில்   இருந்தாய்

பேசிக் கொண்டிருந்தோம்
சொற்களாலும்
மௌனத்தாலும்

உன்மேல்  சாய்ந்து  கொண்டேன்
நீ உணரா வண்ணம்

அப்பொழுது
உன்  இதயம்  துடித்துக்  கொண்டிருந்தது
என்  அண்மைக்காக

சொல்லிவிடத்தான்   விரும்புகிறேன்
உன்மீது  சாய்ந்து நாட்களாயிற்றென

என் விரைந்த  உடல்
ஆடைகளில்  மறைந்து  கொண்டிருப்பதை
அறிய  மாட்டாய்

உன்னிடம்  சொல்லிவிடும்   வரை
இந்தப்  பயணம்  நீண்டால்

சொல்லி  விடுவேன் .

மலர்தல். . .




நிலாவென
நான்
ஒளிர்வதாகக்  கூறுகிறாய்
சூரியனாய்  இருந்து  கொண்டு

என்
நினைவின்   அடுக்குகளில்
எத்தனையோ  கதைகள்
பொதிந்துள்ளன 

நிலா இரவுகள்
அன்று  இருந்தது  போல்
இல்லை

பால்யம்
கடந்த  இந்த  இரவுகளில்

பாட்டிகளின்
மரபில்
வந்து போன  இளவரசனாய்

ஏழு  குதிரைகளில்
நீ
வருகையில்

சூர்யகாந்தியாய்
மலர்கிறேன்

நிலா ஒளிரும்  பொழுதிலும் .

Saturday, 23 June 2012

கடலை அறிந்தவள்





கடலை
மௌனம் என்றுதான் நினைத்திருந்தாள்

பேரிரைச்சலைத்
தரும் அலைகள்கூட
பெரும் மௌனம் என்பதாகத்தான்
நம்பிக்கொண்டிருந்தாள்

கடல்
பெரும் சப்தமிடுவதாக
ஒற்றைக்குரலில்
சொல்லிக் கொண்டிருந்தார்கள்
அவளிடம்

அலைகளால்
நனைந்த மணற்பரப்பில்
நிலத்தினை அளவிட்டுக் கொண்டிருக்கிறாள்
கடலின் கதையினைக் கேட்டபடி
சிறுமி

அவள்
பிரபஞ்ச மொழியை
அலைகளின் ஓசையில் புரிந்துகொண்டு
வீடு திரும்பினாள்
கடலை அறியாதபடியும் அறிந்தபடியும் .

கேள்வியும் பதிலும்…


மண் கடவுளென்றேன்
கடல் ஒரு தேவதையென்றேன்
சிப்பியும் அதனுள் வளரும் முத்துவும் எதுவென்று கேட்ட மகள்
சொல்கிறாள்
அது மகிழ்ச்சியைத் தருகின்றதென

காற்று இப்போது தோழமையோடு இருக்கிறது என்றேன்
தோழமை என்றால் என்னவென்று கேட்டவள்
சொல்கிறாள்
என் தோழியை விடவா இந்தக் காற்று
தோழமை தந்துவிடப் போகிறதென

தாகம் மிகுந்த வேளையில்
நீர் அருந்தினோம்
எவ்வளவு ருசி எவ்வளவு ஆனந்தமென சொல்லிக்கொண்டேன்
ஆனந்தம் என்றால் என்னவென்று கேட்டவள்
கேட்கிறாள்
அதுதான் இவ்வளவு சுதந்திரத்தைத் தருகிறதாவென... 

Tuesday, 19 June 2012

தவம்


இன்று நீ என்னைப் பார்த்தே ஆக வேண்டும்
அல்லது நான்
இல்லையென்றால் நாம் காத்திருக்க வேண்டும்
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள்
.
காலம் பற்றி
உன்னை விட நான் நன்கறிவேன்
.
காலம் சமரசமற்றது
மேலும்
அதனிடம் பேரம் பேச இயலாது
.
நான் தவம் செய்தேன் ஒன்றை அடைவதற்கு
இத்தனை காலமாக
.
நான் அடைந்தேன்
அடைந்தேனா என்று தெரியவில்லை
.
அப்பொழுது
அது என்னைக் கடந்திருந்தது
.
எனக்குக் காத்திருக்கவும் தெரியும்.

சக்தி ஜோதி