விகடன்.காம் இல்
'கல்வி என்பது குழந்தைகளை இம்சிக்கக் கூடாது!' - சக்திஜோதி
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்..
அலுவலக வேலை சார்ந்த சந்திப்புகள், இலக்கிய நிகழ்வுகள், நூல்
வெளியீடுகள், கல்லூரி விழாக்கள் என நிறைய அரங்குகளில் பேச நேர்ந்திருக்கிறது. அவை
எல்லாவற்றையும் விட ஒரு சிறிய பள்ளி ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு, அங்குள்ள
குழந்தைகளோடு உரையாடுகையில் எனக்குக் கிடைக்கும் நிறைவு அளவில்லாதது. சாதாரண பள்ளி
வேலை நாட்களை விடவும், ஆண்டுவிழா சமயத்தில் அக்குழந்தைகள் அடையும் உற்சாகமும்
உத்வேகமும் தனி. ஒருவருடம் முழுவதற்குமான மகிழ்ச்சியை அந்த ஒருநாளிலேயே அவர்கள்
அடைந்துவிடுகிறார்கள். அந்தத் தருணத்தில் அவர்களோடு இருப்பதன் மூலமாக பால்ய
நினைவுக்குள் அமிழ்ந்திருக்கவும் குழந்தைமையை மீட்டுக்கொள்ளவும் முடிகிறது.
ஒருகாலத்தில், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் என்பது
பள்ளிக்குழந்தைகளுக்கு ஒருகாலத்தில் கொண்டாட்டமாக இருந்த மாதங்கள். பொதுவாக
கல்வியாண்டின் தொடக்கத்தில் விளையாட்டு தினமும், ஆண்டின் இறுதியில் ஆண்டுவிழாவும் கொண்டாடப்படுவதுண்டு.
விளையாட்டில் தேர்ந்த மாணவர்கள் பயிற்சிக்காக
பள்ளிகூட மைதானத்திலேயே கிடப்பது ஆண்டின் துவக்கத்திலும், கலையில் தேர்ந்தவர்கள்
நிகழ்வுகளுக்கான ஒத்திகைக்காக பாடநேரத்தைத் தவிர்ப்பது ஆண்டின் இறுதியிலும்
தவறாமல் நிகழும். பாடப்புத்தகங்களில் நாட்டம் இல்லாத பலர் நாடகத்தில் ஒரு வசனம்
கூட பேச வாய்ப்பில்லாத மிகச்சிறிய கதாபத்திரங்களுக்குப் பெயர்கொடுப்பார்கள்.
அரிதாரத்தைப் பூசிக்கொண்டு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அவர்கள் வசிக்கும் தெரு
முழுக்கக் காட்டி மகிழ்வார்கள்.
பள்ளிக்கூட நாடகங்களில் தலைகாட்டிய ஆர்வத்தில் திரைப்படங்களில்
நடிப்பதற்காக வீட்டைவிட்டு நகரத்திற்கு
ஓடிப்போனவர்களின் கதைகள் இல்லாத கிராமமே இருக்கமுடியாது. அந்தளவுக்கு நடிப்பின்
மீதும், நடனத்தின் மீதும் இயல்பான பற்றுடன் இருப்பவர்கள் ஒருபக்கம் இருந்தார்கள்.
தேனி மாவட்டம் இராயப்பன்பட்டியில் ஈஸ்டர் தினங்களையொட்டி நிகழ்த்தப்படுகிற பாஸ்கா
திருவிழாவைப் பார்ப்பதற்காகவே தவக்காலங்களை விரும்புகிறவர்களை அறிந்திருக்கிறேன்.
தொலைக்காட்சிப் பெட்டிகள் அறிமுகம் ஆகாத காலத்தின் உன்னதம் என்பதே இம்மாதிரியான நாடக
நிகழ்வுகள் என்று சொல்லலாம். என்னுடைய பள்ளிப் பருவத்தில் பார்க்க விரும்பிய அந்த
பாஸ்கா நாடகத்தில் இயேசுவாக நடித்த ஒருவரை பின்னாளில் திரைப்படங்களில் வெற்றி
பெற்றவராகச் சந்தித்திருக்கிறேன். கிராமத்து நாடங்களில் ‘ஜோ’ வாக இருந்த அவர் ‘ஜோ மல்லூரி’ எனத் திரையில்
அறியப்படுவதற்குள் கிட்டத்தட்ட இருபது
ஆண்டுகள் கடந்துவிட்டது. யார், எதனிடம் தங்கள் கனவையும் காலத்தையும் ஒப்புகொடுக்கிறார்களோ அவர்கள் அதில் வெற்றி
பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
இன்றைய கிராமங்களில் ஆங்கிலப்பள்ளிகளுக்குக் குறைவில்லை. அவர்கள்
நடத்துகிற ஆண்டுவிழாக்கள் மாலை ஐந்து மணிக்குத் தொடங்கி நள்ளிரவுவரை நீள்கிறது.
குழந்தைகளும் பெற்றோர்களும் உறவினர்களும் கூடி ஒரு பள்ளிக்கூட ஆண்டுவிழாவாக
அல்லாமல் ஊர்த்திருவிழாவினைப் போலவே நிகழ்த்துகிறார்கள். பள்ளியில் படிக்கும்
அத்தனைக் குழந்தைகளையும் மேடையேற்றுகிற பள்ளி நிர்வாகங்கள் சொல்வது என்னவென்றால்,
குழந்தைக்கு ஆடவருகிறதோ, நடிக்க வருகிறதோ இல்லையோ அனைத்துப் பெற்றோர்களுமே தங்கள்
பிள்ளைகளை மேடையில் பார்க்க விரும்புகிறார்கள். ஆடல் பாடல் வகைமையினை
அறிந்துகொள்ளவியலாத பாலர் பள்ளி குழந்தைகள் உட்பட எட்டாம் வகுப்புவரை அனைவரையுமே
ஏதோவொரு நிகழ்வில் மேடையேற்றி விடுகிறார்கள். ஒருசில குழந்தைகள் அற்புதமாக
ஆடுவார்கள். அவர்கள் நான்கைந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டு மொத்தக்
கலைநிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஆக்கிவிடுவார்கள்.
சமீபத்தில் நான் கலந்துகொண்ட பள்ளிவிழாவில் பரதம், கரகம், குறவன் குறத்தி
நடனம், நாட்டுபுறப்பாடல், நாடகம், துள்ளலிசை நடனம் என வெவ்வேறு நிகழ்வுகளில்
தொடர்ந்து ஆடிகொண்டிருந்த ஒரு பெண்குழந்தையைப் பார்த்தேன். நிகழ்வு முடிந்த பிறகு
அந்தக் குழந்தையிடமும் அவள் அம்மாவிடமும் பேசினேன். அப்போது அவள் அம்மா, “எம்பொண்ணு
இவ, பேரு காவியா, இந்த வருஷம் ஏழாம் வகுப்புப் படிக்கிறா. அடுத்த வருஷம்
பெரியவளாகிடுவா, அப்புறமா இவ இப்படியெல்லாம் மேடையேறி ஆடிட்டு இருக்க முடியாது,
ஆனா இவளுக்கு டான்ஸ் ஆடுறது ரொம்பப் பிடிச்சிருக்கு, அடுத்த வருஷம் ஆட முடியாது
என்பதால இந்த வருஷம் அவ மிஸ்கிட்ட கேட்டு ஏழு ப்ரோக்ராம் வரைக்கும் அவளே சேர்ந்துகிட்டா,
நானும் சரி.. பொட்டபுள்ள ஆசைபடுது, இந்த வயசுக்குள்ள தானே அனுமதிக்க முடியும்ன்னு
விட்டுட்டேன்.“ என்று சொன்னார். இம்மாதிரியான கலை நிகழ்ச்சிகளுக்கு ஏழாம் எட்டாம்
வகுப்புவரை கட்டாயப்படுத்தி மேடையேற்றும் பெற்றோர்கள் கூட பெண்பிள்ளைகளை பருவம்
வந்தவுடன் “இனியென்ன ஆட்டமும் பாட்டும்” எனத் தட்டிவைப்பது நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது.
பெண்குழந்தைகள் பருவம் எய்தியவுடன் விளையாட்டுகளும் கலையார்வமும்
ஒடுக்கப்படுகிற நிலைதான் இன்றைக்கும் இருக்கிறது. குறிப்பிட்ட பருவத்திற்குப்பிறகு
பெண்குழந்தைகளின் புத்தகப்பைக்குள் அவர்களது கனவுகளும் இரகசியமாக மறைத்து வைக்கப்படுகிறது.
முன்பொரு காலத்தில் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய
பாடலையும் நடனத்தையும் அரங்கேற்றிப்பார்க்க தங்கள் மகள்களிடம் முயலுகிற அம்மாக்கள்
கூட மகள்கள் பருவம் வந்தவுடன் அவர்களின் கனவுகளை கலைத்துவிடுகிறார்கள்.
இதனை விடவும் மேலான இன்னொரு சிக்கல் இந்தக்கால மாணவர்கள் சந்தித்துக்
கொண்டிருக்கிறார்கள். அது, குழந்தைகள் ஒன்பது படிக்கத் தொடங்கியதும் பத்தாம்
வகுப்புக்கான நடுக்கம் பெற்றோருக்கு வந்துவிடுகிறது. பாடப்புத்தகங்களைப்
படிக்கவும் மதிப்பெண்களை எடுப்பதற்காகவும் மட்டுமே பிறந்தவர்கள் போல அதன்பின்பு அவர்களுடைய
வாழ்வு பெரும்பாலும் மாறிவிடுகிறது. கல்வி என்பதை நான்கு சுவர்களுக்குள்
பாடப்புத்தகங்களில் கற்றுக்கொள்வதாக நினைக்கிற தலைமுறையினை உருவாக்கிவிட்டோம். ஒவ்வொருமுறை
பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் பொழுதும்
மிகப்பெரிய பதற்றத்தை உருவாக்கிவிட்டார்கள். எங்காவது ஒரு மாணவனோ அல்லது மாணவியோ
தேர்வில் தோற்றதால் தற்கொலை செய்துகொண்ட செய்தியைக் கேட்காமல் ஒரு வருடத்தையேனும்
கடக்க முடியாதோ எனத்தோன்றிவிட்டது.
அடிப்படையில் நமது பண்டையக் கல்வி முறையானது வாழ்வோடு இயைந்த
கலைகளாகவும் தொழில் திறன் சார்ந்த பயனுறு படிப்பாகவும் இருந்தது. எகிப்து,
சுமேரியா, பாபிலோனியா, சீனா, ஜப்பான், பெர்சியா, கிரேக்கம் போன்ற நாடுகளைப் போலவே
நமது இந்தியக் கலைமரபும் தொன்மையான ஒன்று. அதில் பழந்தமிழ் கலைகளுக்கும் தனியிடம்
உண்டு. பாணர், துடியர், விறலியர், கூத்தர், பறையர், கடம்பர், வினைஞர் என பலவகையான
கலைமரபினர் வாழ்ந்தனர். யாழ், குழல், பறை, முரசு, பம்பை, தூம்பு, சங்கு, கோடு,
போன்ற தோல்கருவி, துளைக்கருவி, குழற்கருவி போன்றவை இருந்த பாடல் பதிவுகள் மூலமாக
இசைக்கலையின் வளமையை அறிய முடிகிறது.
ஆட்டனத்தி, ஆதிமந்தி, ஆடுகோட்பாட்டுச்சேரலாதன் போன்றோர் பற்றிய
குறிப்புகளில் ஆடற்கலையின் நுட்பம் அறிந்த கலைஞர்களைப்பற்றி அறிய முடிகிறது. கட்டடக்கலை,
ஓவியக்கலை மற்றும் சிற்பக்கலை சார்ந்தும் சாட்சியங்களாக சங்கப்பாடல்களை அடையாளம்
காணமுடிகிறது.
பொன்முடியாரின் சங்கப்பாடலில் “சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே”
என்கிற வரியானது வெறுமனே ஏட்டுக்கல்வியினை மட்டும் குறிப்பிடவில்லை. ஒற்றைச் சாளர
நிகழ்வில் ஒருவனைச் சான்றோன் ஆக்குவது சாத்தியமில்லை. மதுரைக்காஞ்சியில்,
“தொல்லாணை நல்லாசிரியர்
புணர்க்கூட் டுண்ட புகழ்சால் சிறப்பின்” (மது:761) என்கிற
வரிகளில் கல்வியில் தேர்ந்து மெய்யுணர்ந்த ஆசிரியர்கள்பற்றிக் குறிப்பிடுகிறது.
மேலும் ஏட்டுக்கல்வி என்பதேகூட பல்வேறுவிதமான நூல்களைக் கற்று அதனுடைய உண்மையை கண்டுணரும் பொருட்டு, வாதம் செய்கிற முறையையும் பழந்தமிழர் கல்வி கொண்டிருந்தது.
இதன்
தொடர்ச்சியாகத்தான்
“கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.”
என்கிற
இறையனார் என்னும் சங்கப்புலவர் எழுதிய குறுந்தொகைப் பாடலின் அடிப்படையில்
திருவிளையாடல் புராணம் என்கிற கதைவடிவமும் அதனைத் தொடர்ந்து திரைப்படமும் உருவாக்கப்பட்டது.
கல்வியை கதை வடிவமாக மாற்றுவதன் வழியாக கற்பித்தல் நிகழ்கிற நிலமாகவே
இருந்திருக்கிறது.
வேட்டைத்தொழிலையும் வேளாண்தொழிலையும் அடிப்படையாகக் கொண்ட
ஆதிக்குடிகளிடம் பாறைகளில் வண்ணம் தீட்டுவதும் கற்களைச் செதுக்குவதும் இயல்பான
பொழுதுபோக்கு நிகழ்வாகத் தொடங்கியிருக்கும். பொருள்தேடி வெளியே சென்றவர்கள் திரும்பிவந்து
அவர்கள் சந்தித்த இடர்பாடுகளையும் அதிலிருந்து தப்பித்த வகைகளையும் நடித்துக்காட்டியதன்
மூலம் நாடகம் அரங்கேறியிருக்கும். வாழ்வியல் சார்ந்த செயல்பாடுகள் அழகுணர்ச்சி
வெளிப்பாடாக வளர்ச்சியடைந்திருக்கும். இதனடிப்படையிலேயே பயிற்றுவித்தலும்
நடைபெற்றிருக்கும் என்பதால் பழந்தமிழகக் கல்வி முறையானது வாழ்வியல் சார்ந்ததாக மட்டுமே இருந்திருக்கும்.
அங்கிருந்து வெகுதூரம் பயணித்திருக்கும் இன்றைய கல்வி முறையில்
படித்த கல்விக்கும், செய்யும் பணிக்கும் சம்மந்தமே இல்லாத சூழலில் வாழ்கிறவர்களை
அன்றாடம் சந்திக்க முடிகிறது.
இன்றைய கல்விமுறையினைக் குற்றம் சொல்லிக்கொண்டே அதனை வளர்த்தெடுக்கும்
செயலும் நடந்து கொண்டிருக்கிறது. பிறக்காத குழந்தைக்கு நுழைவுத்தேர்வெழுதும்
பெற்றோர்களைப்போலவே ஆறாம்வகுப்புப் படிக்கும் குழந்தையை ஐஐடி பரீட்சைக்குத் தயார்
செய்வதும் முன்னிலும் தீவிரமடைந்திருக்கிறது. ஒருக்காலத்தில் குழந்தைகளுக்கு
தற்கொலை என்றால் என்னவென்றே தெரியாது. குறிப்பாக தேர்வுக்கால பயமும், தேர்வு
முடிவுகளை அறிந்துகொள்கிற நாளின் பதற்றமும் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே
இருக்கிறது.
மேலும் இயல்பாக இருந்த கலைசார்ந்த நாட்டமும் தொழில்முறையாக
மாற்றப்பட்டுவிட்டது. வாழ்நாள் முழுவதும் பயிலவேண்டிய ஒரு கலையினை எட்டாம்
வகுப்பிற்குள் கற்றுத் தேர்ந்துவிட முடியுமென நினைப்பவர்களால் குழந்தைகளின்
விருப்பங்கள் அழிக்கப்படுகிறது. தவிர அந்தப்பருவத்திற்குள் ஒரு குழந்தை அனைத்துக்
கலைகளிலும் மேதமையுடன் திகழமுடியுமென்பதாக நம்பவைக்கப்பட்டுள்ளது. எனவே
பால்யத்தின் விளையாட்டுகளைத் துறந்தவர்களாக இன்றைய குழந்தைகள் ஆகியிருக்கிறார்கள்.
எப்படி வாழவேண்டும், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதைக்
கற்றுத்தரக்கூடிய இராமாயணம், மகாபாரதம்
போன்ற புராண இதிகாசக்கதைகளைப் போதிக்கிற
தாத்தா,பாட்டியின் அண்மையின்றி குழந்தைகள் தனித்திருக்கிறார்கள். முந்தைய
தலைமுறையிடமிருந்து செவிவழி அறிந்துகொள்ள இயலாத கதைகளற்ற குழந்தைகளின் வெளியானது
வளரிளம்பருவ கற்பனைகளை விரிவுசெய்ய இயலாத நிலைக்கு நகர்ந்திருக்கிறது.
மூத்தோரிடமிருந்து அறியப்படுகிற கதைகள் உறவுகளைப் பலப்படுத்தும்
குடும்ப உறவுகளின் இயல்பான அரவணைப்பு இன்றி தொலைகாட்சி, கணிப்பொறி,
அலைபேசி என ஒரு மெய்நிகர் உலகில் வாழ நிர்பந்திக்கப்பட்ட
ஒரு தலைமுறையினை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டோம்.
எல்லோர் வீடுகளிலும் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தை இருக்கிறார்கள். தாயும் தகப்பனும் சம்பாதிக்கிறார்கள். குழந்தை என்ன கேட்டாலும் தட்டாமல் வாங்கிக்கொடுக்கவே பெற்றோர்கள் விரும்புகிறார்கள். விளையாட்டுக்காக பள்ளிக்கூடங்களில் ஒதுக்கப்படுகிற பொழுதானது, கணக்குப்பாடம் படிக்கவோ அறிவியல் படிக்கவோ மாற்றப்பட்டு விளையாட்டுகள் அற்ற மைதானங்களையே அநேகமான பள்ளிகூடங்களில் காணமுடிகிறது. விளையாட்டுப் போட்டிகள் வெற்றி தோல்வியை தாங்குகிற பக்குவத்தை உருவாக்குகின்றன என்பதை மட்டுமல்ல விளையாட்டு ஒருவிதமான குழு ஒற்றுமையை உருவாகும் என்பதையும் இன்றைய கல்விமுறை மறந்துவிட்டது.
ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன் என்கிற அரசன் எழுதிய புறநானூறு பாடலொன்று
"உற்றுழி
உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!”(புறம்:183)
தமக்கு கல்வி கற்றுத்தருகிற ஆசிரியருக்கு உரியவகையில் உதவி செய்தும்,
அவருடையத் தேவையான பொருளுதவி செய்தும், அவரை வழிபடும் மனதுடன் செயல்பட்டும் கல்வி
கற்க வேண்டும் எனக் கூறுகிறது. இத்தனையும் செய்து கற்பித்தலுக்குத் தகுதியுடைய
ஆசிரியரைத் தேர்ந்த நிலையிருந்து கல்வி என்பது நிறுவனமயமான சூழலில்
ஆசிரியரின் அடையாளம்
மறைக்கப்பட்டுவிட்டது. மேலும் ஒருகாலம் வரையில் ஆசிரியருக்கு பணிந்திருந்த
மாணவர்கள் மட்டுமன்றி ஆசிரியர்களும்
இன்றைக்கு நிறுவனங்களிடம் முற்றிலுமாக
பணிந்து கிடக்கவேண்டிய நிலை உள்ளது.
கல்வியும் கலையும் தங்களை மட்டுமல்ல தாங்கள் வாழும் சமூகத்தையும்
மேம்படுத்த வல்லது என நம்பி செயல்பட்டவர்கள் பலருண்டு. அவர்களால்தான் இந்த பூமி
முழுவதும் அவற்றின் விதைகள் முளைத்து விருட்சங்களெனப் பரவி நிற்கிறது. ஒவ்வொரு
குழந்தைக்கும் அதற்கேயுரிய தனித்திறன்கள் இருக்கும். அவற்றைக் கண்டறிந்து
வளர்த்தெடுக்கக் கூடிய பக்குவமும்
நிதானமும் கொண்ட கல்விமுறை நமக்கு வேண்டும்.
கலீல் ஜிப்ரானின் வரிகள்,
"உங்கள் குழந்தைகள்
உங்களுடையவர் அல்லர்.
அவர்களே வாழ்வும்,
வாழ்வின் அர்த்தங்களும் ஆவர்.
அவர்கள் உங்கள் வழியாக வருகிறார்களேயின்றி
உங்களிடமிருந்து அல்ல.
உங்களுடன் இருந்தாலும்
அவர்கள்
உங்களுக்கு உரியவர்களல்லர்.
அவர்களுக்கு உங்கள் அன்பைத் தரலாம்.
எண்ணங்களால் அல்ல.
அவர்களுகென்று சுய சிந்தனைகள் உண்டு.
அவர்களுடைய உடல்களை
நீங்கள் சிறைப்படுத்தலாம்;
ஆன்மாக்களை அல்ல.
கனவிலும் நீங்கள் நுழையமுடியாத
எதிர்காலக்கூட்டில்
அவர்களது ஆன்மாக்கள் வசிக்கின்றன.
நீங்கள் அவர்களாக முயலலாம்;
அவர்களை உங்களைப்போல
உருவாக்கக் முயலாதீர்கள்.
வாழ்க்கை பின்னோக்கிச் செல்வதோ,
நேற்றுடன் தங்கிப்போவதோ இல்லை.
உயிர்கொண்ட அம்புகளாய்
உங்கள் குழந்தைகளும்
விரைந்து செலுத்தும் வில்லாய்
நீங்களும் இருக்கிறீர்கள்.
வில்லாளியானவர்,
முடிவில்லா பாதையின் இலக்கை நோக்கி
தன்னுடைய அம்புகளை
துரிதமாகவும் தூரமாகவும்
செலுத்தும்வண்ணம் உங்களை வளைக்கிறார்.
அவர் கைகளில் உங்களின் வளைவு
மகிழ்வுக்கு உரியதாக இருக்கட்டும்.
ஏனெனில்
பறக்கும் அம்புகளை மட்டுமல்ல
நிலைத்து நிற்கும் வில்லையும்
அவர் நேசிக்கிறார்.“
___________________________________________________________________________
http://www.vikatan.com/news/coverstory/85513-education-should-be-without-torture.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2
No comments:
Post a Comment