குறுந்தொகையில் மகளிர் பதிவுகளின் பெண்ணிய அரசியல் :
அக்கால தமிழ்ச் சமூகத்தில் பல பிரிவினைகள் உருவாகியிருந்தமையை
வரலாறுகள் சுட்டுகின்றன. வேலைப்
பிரிவினை, வேலையாள்
பிரிவினை, பால் அடிப்படையிலான பிரிவினை என்பன அடிப்படையான பிரிவினைகளுள்
சிலவாகும். இதில் வேலைப்பிரிவினை என்பது வர்க்கப்பிளவாகவும் வேலையாள் பிரிவினை என்பது சாதியக்கட்டுமானமாகவும் சமூகத்தில்
தொழிற்படுகின்றன . பால்
அடிப்படையிலான பிரிவினை எல்லா
வர்க்கங்களிலும் எல்லா சாதிகளிலும் தொழிற்படுகின்ற பிரிவினையாகக் காணப்படுகிறது . ஆண், பெண் என்ற பாகுபாடு இயல்பில் ஆணை முன்னிலைப்படுத்தும் வகையில் தோற்றம் பெறுகிறது.
ஆணின் ஊக்கமும் பெண்ணின் மடமும் அவர்களது பண்பென்று பயிற்றுவிக்கப்படுகிறது.
நாகரிக சமூகங்களிலும் பெண் இரண்டாம் பாலினமாகவே நடத்தப்படுகிறாள்.
அதற்காக சமூக பொதுபுத்தியும் கட்டமைக்கப்படுகிறது. ”சமூகத்தால் ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட பாலின வேறுபாடு பெண் பிறந்த நாள் தொட்டே
அவளை உருவாக்கத் தொடங்குகிறது. அவளுடைய உடை, அவளுக்கு அறிவுறுத்தப்படும் நடத்தைகள், நம்பிக்கைள்,
சமூக மதிப்பீடுகள் அனைத்தும் ஆணை விட வேறுபட்டே காணப்படுகின்றன”
(ர.விஜயலட்சுமி, ப.31)
என்ற கூற்று ஆணை பெண்ணிலும் உயர்வாக கட்டமைக்கும் சமூகத்தின் பொதுபுத்தியை
சுட்டுவதாகும்.
நிலவுடைமைச் சமூகத்தில்
பெண்ணின் பாலியல் ஓர் ஆணுக்கானதாக வலியுறுத்தப்படுகிறது. அதை கற்பென்றும் அதை கடைபிடித்தொழுகுதலே பெண்ணின் தலையாய கடமையென்றும் கற்பிக்கப்படுகிறது.
இவ்வாறு பெண்கள் ஆணின் சமூகத்தில் வாழத் தலைப்பட்ட உயிரியாக தன்னிலை
அழிந்து காணப்படுகிறாள். பெண்ணின் தன்னிலை ஆணின் தன்னிலையோடு
இணைத்துக் காண்பதே சமூக வழக்கமாகக் காணப்படுகிறது. இவரின் மகள்,
இவரின் மனைவி இவரின் அம்மா என்று சுட்டப்படுகிறாள். பின்அறிவொளிக்கால சூழலில் நிகழ்ந்த பல்வேறு மாற்றங்களில் தொழிற்புரட்சி அதையொட்டிய
ஐரோப்பிய நாடுகளின் மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை நிறுவியமை ஆகியவை உலக அளவிலும்
பெரும் மாற்றங்களை உருவாக்கின. அம்மாற்றங்களில் பெண்ணிய சிந்தனைகளின்
தோற்றமும் ஒன்றாகும். பெண்கள் தங்களது உடைமையை ஆளும் தகுதியைப்
பெற்று தனித்து இயங்கும் வகையில் எழுச்சி பெற்றனர். இதனை முதலாம்
அலை பெண்ணியம் என்று கூறுவார்கள். இரண்டாம் அலை பெண்ணியச் சிந்தனையானது
குடும்பத்தின் கட்டுத்தளைகளை அறுத்து வெளியேற வகை செய்தது. இந்தியாவிலும்
இவ்விரண்டு வகையிலான பெண்ணிய சிந்தனைகள் ஊடு பாவாகப் பரவ ஆரம்பித்தன.
80களிலும் 90களிலும் பெண்ணிய சிந்தனைகள் பெருவாரியாக விவாதப் பொருளாயின. அதுவரை கட்டமைத்து வைத்த பெண் பற்றிய சொல்லாடல்கள் மறுபரிசீலனைக்கு உள்ளாயின.
கற்பை பேணும் மாதிரி பெண் பற்றிய சொல்லாடல்கள் வழக்கத்திற்கு மாறானதாக
சுட்டப்பட்டது. பெண், ஆணைச் சார்ந்து வாழ வேண்டியவள் என்னும்
தன்மை விலக்கம் பெற்றது. ஆணின் துணையின்றி வாழும் ஊக்கத்தைப்
பெண்கள் பெற்றனர். அதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வியும்
கலாச்சார முன்னகர்வுகளும் காரணமாக அமைந்தன. கலாச்சார முன்னகர்வுகள்
என்பது கலையாக்கங்களில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தின. தங்கள் மனக்குமுறலை வெளிப்படுத்தும் உரிமையைப் பெற்றனர். ஆணியவயப்பட்ட எழுத்திற்கு இணையான பெண்ணெழுத்துகளும் வெளிப்பட்டன. இவ்வாறான பெண்ணெழுத்துகள் ஆணிய சமூக நெறிமுறைகளை கேள்விக்குட்படுத்தின.
பெண்ணெழுத்துகள் தனித்துவமான ஆளுமையை கொண்டவையாக வெளிப்பட்டன.
அவை ஆண்களின் அறங்களை அழுத்தங்களை கலைத்துப் போட்டன. இத்தகைய மேலைத்தேய சிந்தனைகள் கலாச்சாரத்தில் ஊடுபாவாக சிதைவை ஏற்படுத்தும்
என்றாலும் அது காலத்தின் தேவையாக பரிணமிக்கிறது.
ஆண்களின் கைப்பாவையாகவே
பெண் சங்க காலத்தில் சுட்டப்படுகிறாள் என்பதை ஆணின் பார்வையில் எழுதப்பட்ட இலக்கண, இலக்கியங்கள் சுட்டுகின்றன. பெருமையும் உரனும் கொண்டவன்
ஆண் (தொல்.களவு.7) என்றும் அச்சம், மடம், நாண் கொண்டவள்
பெண் (தொல்.களவு.8) என்றும் தொல்காப்பியம் சுட்டுகிறது. பெண் அதிர்ந்து பேசக்
கூடாதவள் என்பதால் மண்பானையில் நீர் கசிவது போலத் தன் உள்ளக்கிடக்கையை உடலின்
வேட்கையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் (தொல்.களவு.18) தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியத்தில் அன்பின்
ஐந்திணை எனப்பட்ட காதல் வாழ்வில் பெண்ணின் நிலை ஆணின் வருகையை எண்ணிக் கவலை கொள்ளும்
வகையிலேயே பெரும்பான்மையும் காணப்படுகிறது. பொருள்வயிற் பிரிவு
ஆணிற்கானதாகவும் அவன் வரவை எண்ணிக் காத்திருத்தல் பெண்ணிற்கானதாகவும் சுட்டப்படுகிறது..
தலைவி தன்னுடைய களவுநிலையில் காதலை நேரிடையாக சொல்ல இயலாத நிலையும் கற்புநிலையில் தன்னை தலைவனுக்கு உகந்தவளாக
வைத்திருப்பதும் அவனுக்காக காத்திருப்பதும் என்று அமைந்திருக்கிறது . அதையே தோழியும் செவிலித் தாயும் தகவமைத்து வழிப்படுத்துவதுமான
நிலையே சங்கப் பெண்களில் பொதுவான நிலையாக இருந்திருக்கின்றன . தோழியின் கூற்று
தலைவியை தலைவனுக்கு ஆற்றியிருக்குமாரும் தலைவியின் களவு நிலையை முடித்து செவிலித்
தாய்க்கு தகவல் தெரிவித்து அவள் மூலமாக நற்றாய்க்கும் தந்தை தமர் முதலியோருக்குத் தெரிவித்து தலைவியை
கற்பு நிலைக்கு வழிப்படுத்தும் வகையிலான அறத்தொடு நிற்றல் என்றும்
துறை அமைந்திருக்கிறது.
ஆணின் மனம் பெண்ணை நுகர்வுக்கு
இயைந்தவள் எனச் சுட்டும் “கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும்
பூவே“ (குறு.1)என்ற இறையனார் பாடல் வரி
பெண்ணின் கூந்தல் மணம் பற்றிய ஆய்வில் ஈடுகிறது. இதுபோல்
தலைவியைப் புணர்ந்து நீங்கும் தலைவன் அவளது மேனியின்பத்தை வருணித்துக் கூறுவதை ”யான்
நயந்து உறைவோள் தேம்பாள் கூந்தல்” (குறு.116) என்கிறான்.
இங்கும் தலைவியின் கூந்தல் தரும் மணம் சிலாகிப்பது கூறப்படுகிறது. இவ்வாறு
பெண்ணின் தன்மையை வியந்து கூறும் ஆண்களின் மனப்பான்மையில் பெண் நுகர்பொருளாகவே
காணப்படுகிறாள்.
தலைவனின் பிரிவை ஆற்ற மாட்டாதவள்
தலைவி என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறாள். இதன் மூலம் ஆணின்
உரன் கூறப்பட்டு பெண்ணின் தன்னிலை ஆணைச் சார்ந்து இயக்கம் பெறுகின்ற ஒன்று என்பது உணர்த்தப்படுகிறது.
”நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே” (குறு.4)
என்று தலைவி தலைவனின் பிரிவை ஆற்றாமல் நோகும் நிலை சுட்டப்படுகிறது.
இது போல தலைவனின் பிரிவால் துயில் தொலைத்து வாடும் நிலையை ”மெல்லம் புலம்பன் பிரிந்தென, பல்இதழ் உண்கண் பாடு ஒல்லாவே”
(குறு.5) என்ற பாடலும் ”நனந்தலை
உலகமும் துஞ்சும், ஓர்யான் மன்ற துஞ்சாதேனே” (குறு.6) என்ற பாடலும் சுட்டுகின்றன. தலைவன் பிரிந்து சென்ற நாடு எங்கு இருந்தாலும் அவனைக் கண்டடைந்து தன் காமநோயைத்
தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற தலைவியின் உள்ளக் கிடக்கையில் தலைவன் மட்டுமே தலைவிக்குரியவன்
என்ற பண்பு சுட்டப்படுகிறது. ”மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் வழிபடல்
சூழ்ந்தசின் அவருடை நாட்டே” (குறு.11) என்று
தலைவன் வேற்று மொழி பேசும் நாட்டிற்கு சென்றிருந்தாலும் அவனைக் கண்டடைய வேண்டும் என்று
தலைவி கூறுகிறாள். தலைவன் மட்டுமே தலைவியின் காம நோயைத்
தீர்ப்பவன் என்பதை ”சிறுகோட்டுப் பழம்
தூங்கியாங்கு..... இவள் காம்ம் பெரிதே” (குறு.18) என்று
குறிப்பிடுவதைக் காணலாம். தலைவன் பிரிந்து சென்று விட்டான். அவன் சென்ற இடம்
தெரியவில்லை. அந்நிலையில் தலைவிக்குத் தோழி தலைவன் இருக்கும் இடத்தை அடைவதற்கு வழி
சொல்கிறாள்.
”நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கு இரு முந்நீர் காவின் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ – நம் காதலோரே” (குறு.130)
என்கிறாள். நிலத்தை அகழ்ந்து உள்ளே சென்றிருக்க
முடியாது. வானத்தைப் பிளந்து மேலே சென்றிருக்க முடியாது. ஊர்களில் எங்காவதுதான்
இருப்பார். அவரை கண்டடைவது எளிதே என்கிறாள்தோழி. இவ்வாறு தலைவனின் பிரிவால் வருந்தும்
தலைவிக்கு ஆறுதல் சொல்லும் தோழியின் கூற்றில் தலைவன் எங்கிருப்பினும் அவனைக் கண்டடைந்து
அவனைச் சேர்தலே பெண்ணின் பெற்றி என்று காணப்படுகிறது. அல்லது அவனது வருகையை
எண்ணிக் காத்திருக்க வேண்டும். தலைவனின் பிரிவானது தலைவி ஏற்றுக் கொள்வதற்கு ”வினையே
ஆடவர்க்கு உயிரே” (குறு.135) என்று சுட்டப்படுகிறான். தலைவியே அதை
உணர்ந்து வருந்தாதிருக்க வேண்டும் என்று உணர்த்தப்படுகிறாள்.
பொருள் வயிற் பிரிந்து
சென்ற தலைவன் தன் மேல் இரக்கம் இல்லாதவன் என்றும் அவ்வாறு அவன் பொருள் தேடிச்
செல்வதே அறிவுடைமையென்றால் அவன் வரவை எண்ணி காத்திருக்கும் தனது செயல் அறிவில்லாதது
என்று கூறினாலும் தகும் என்றும் தலைவி கூறுகிறாள். ”உரவோர்
உரவோர் ஆக, மடவம் ஆக மடந்தை நாமே!” (குறு.20) என்ற பாடல்
விளக்குகிறது. தலைவன் பிரிவால் கண்ணீர் சொரிந்து நிற்பாள் தலைவி என்பதை நீர்வார்
கண்ணை நீ இவண் ஒழிப (குறு.22) என்று குறிப்பிடுகிறது. தலைவனைப் பிரிந்த துயரை
வெளிப்படுத்தும் பிரிதொரு பாடல்,
”கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே” (குறு.27)
என்று அமைகிறது. கன்று உண்ணாத பால் வீணாவது போல
தலைவன் தீண்டப் பெறாமல் தலைவியின் உடல் மேனி பசலை உண்டு வீணாவதாகக் கூறுகிறது.
இதுவும் பிரிவை ஆற்றாத தலைவியின் நிலையை வெளிப்படுத்துவதாகும். இதுபோல் தன்
பிரிவாற்றாத வேதனையைக் கண்டு கொள்ளாத ஊரை பழிக்கும் தலைவி முட்டுவேன் கொல்
தாக்குவேன் கொல் (குறு.28) என்கிறாள்.
தான் தலைவனைப்
பிரிந்திருக்கும் போது ஆண் பல்லி பெண் பல்லியை அழைப்பதைப் பார்த்துத் தலைவி
வருந்துவதை ”செங்காற் பல்லி தன் துணை பயிரும் அங்காற்
கள்ளிஅம் காடு இறந்தோரே” (குறு.16) என்ற பாடல்
சுட்டுகிறது. பிரிந்திருக்கும் நிலையில் இயற்கை செயல்பாடுகள் தலைவிக்கு உணர்வை
கிளர்த்தும் அப்போது அவள் நிலை கட்டுக்கடங்காத்தாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் தலைவனைப் பிரியக் கூடாது என்கிற அவாவை ”குக்கூ
என்றது கோழி அதன் எதிர் துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்“ (குறு.157) என்ற பாடல்
வெளிப்படுத்துகிறது. எந்நிலையிலும் தலைவனைப் பிரியக் கூடாது என்றாலும் பிரிவு
தவிர்க்க முடியாத்து என்பதும் உணர்த்தப்படுகிறது. எனவேதான் எனவே தலைவன் பிரிவில்
இருக்கும் போது தலைவன் மட்டுமே தலைவியின் வேட்கை தீர்ப்பவன் என்று தொடர்ந்து
வலியுறுத்தப்படுவதற்கு அவளது பாலியலை ஒடுக்கும் அல்லது ஒருவனுக்கே கையளிக்கும்
பண்பே காரணமாகும். இது நிலவுடைமைச் சமூகத்தின் பண்பாகும்.
நிலவுடைமையில்
வாரிசுக்கான விழைவே திருமணத்திற்கான ஏற்பாடாகும். அங்கு பெண் தன் கணவனுக்கே தன்னை
ஒப்புக் கொடுக்கும் நிலை காணப்படும். அந்நிலையே தலைவியின் பெரும்பாலான பாடல்களில்
தொனிக்கும் நிலையாகக் காணப்படுகிறது. வாரிசுரிமை என்பது ஆணின் சொத்துடைமையை
பாதுகாப்பதற்கான ஓர் ஏற்பாடாகும். அதை பேணுவதற்காக தலைவியின் மனம் ஆணைச் சார்ந்ததாக
கட்டமைக்கப்படுகிறது. ஆணின் உரன் வியந்து பேசப்படுகிறது. பிரிவின் துயரம்
எத்தகையதாக இருந்தாலும் பாலியல் ஒடுக்கம் என்பது வியந்து போற்றப்படுகிறது. ஆண் தன்
பாலியல் இச்சையை போர்வயிற் பிரிதல், பொருள் வயிற் பிரிதல் போன்ற காரணங்களுக்காக
கட்டுப்படுத்திக் கொள்வது போலத் தலைவியும் தலைவனுக்காகத் தன் பாலியலை
கட்டுப்படுத்திக் கொள்ள வற்புறுத்தப்படுகிறாள். பருவம் வரும் போது ”பெருந்
தண் காலையும் கார் அன்று” (குறு.148) அது பருவமல்ல என்று
தோழியால் ஆற்றுவிக்கப்படுகிறாள். வருவதாகக் கூறிய காலத்தில் தலைவனின் வருகை
நிகழாது இருக்குமானால் அதைக் கண்டு வருத்தமுற்று மெய் மெலிந்து பசலை படர்ந்து
காணப்படலாமே அன்றி அதை பிறிதொருவரிடத்து தீர்த்துக் கொள்ளுதல் முறையில்லை.
எனவேதான் சங்கச்சமூகம் என்பது முழு முற்றாக நிலவுடைமைச் சமூகமாக இருந்தது என்பது
சுட்டப்படுகிறது.
இவ்வாறு
பிரிவுத்துயரால் வாடும் தலைவியின் காமநோயினைத் தீர்க்கும் தலைவனின் செயலைப்
பாராட்டும் தோழி பின்வருமாறு கூறுகிறாள்.
”திண்தேர் நள்ளி கானத்து அண்டர்
பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெய் வெஞ்சோறு
எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
பெருந்தோள் நெகிழ்ந்த செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறு.210)
தலைவன் வருகையை உணர்த்திய காக்கைக்கு வைக்கும்
சோறு ஏழு கலத்தில் நெய் கலந்து வைத்தாலும் அது தலைவியின் தோளினை நெகிழ வைத்த
தலைவனது செயலுக்கு சிறிய அளவினதேயாகும் என்று தலைவனால் தலைவி பெறப்போகும் இன்பம்
போற்றப்படுகிறது. அதுபோல் தலைவன்
வருகையைக் கூறி தலைவிக்குத் தோழி ஆறுதல் கூறுவதும் ”படரும்
பைபையப் பெயரும் சுடரும், என்றூழ் மாமலை மறையும் இன்று அவர் வருவர் கொல் வாழி தோழி” (குறு.215)
எனக் காணப்படுகிறது. தலைவியின் துயர் தீர்க்க தலைவன் வருவதை மகிழ்வுடன் கூறும்
பாங்கு தலைவனின் இன்றியமையாமையை தலைவிக்கு தொடர்ந்து உணர்த்துவதாக்க் கொள்ளலாம்.
களவுக் காதலில் தலைவன், தலைவி ஆகிய இருவரும் ஈடுபட்டாலும் களவுக் காதல் வெளித் தெரிந்து விடும் என்ற
அச்சம் பெண்ணிற்கு மட்டுமே காணப்படுகிறது. தலைவன் திருமணம்
செய்து கொள்வதை தவிர்த்து காலம் நீட்டிக்கும் போது அதுகுறித்த அச்சத்தை
வெளிப்படுத்துபவளாகத் தலைவியே காணப்படுகிறாள். ”யானே
ஈண்ட்டையேனே என் நலனே” (குறு.54) என்று தலைவியின்
வருத்தம் வெளிப்படுத்தப்படுகிறது. இதைப் போல் தலைவியின் மெலிவுக்குத்தலைவன் வரைவு
நீட்டித்தல் காரணமாக இருப்பதை ”குன்றநாடன் கேண்மை மென்தோள் சாய்த்தும் சால்பு
ஈன்றன்றே” (குறு.90) என்ற பாடல் சுட்டுகிறது.
எவ்வாறாயினும் தலைவனின் செயலால் தலைவிக்கே வருத்தம் ஏற்படுகிறது. ஊரார் அலர்
தூற்றுவர் என்றும் தலைவியே வருந்துகிறாள் ”கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் எள்அற விடினே உள்ளது நாணே” (குறு.112) என்று தான் விடுவதற்கு உள்ள
ஒன்றே ஒன்று நாணம் தலைவனுடன் கொண்டுள்ள நட்பை ஊரார் அறிந்தால் அதனால் நான்
விடுவதற்கு நாணம் மட்டுமே உள்ளது என்கிறாள். பெண்ணின் இயல்பு நாணை விடாதிருத்தல்தான்
ஆனால் ஆணிற்காக அதையும் விடத் துணிகிறாள். அந்த அளவிற்கு அவளைக் காமநோய்
துன்புறுத்துகிறது என்கிறது பாடல்.
ஊராரால் அலர் தூற்றப்பட்டாலும் தலைவனுடனான
நட்பு கெடாது என்று தலைவி கூறுகிறாள். “நிலம்புடை பெயரினும் நீர் திரிந்து
பிறழினும் இலங்குதிரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும் வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை
அஞ்சிக் கேடு எவன் உடைத்தோ தோழி” (குறு.373) என்று நிலம் பெயர்ந்தாலும் நீர்
திரிந்தாலும் கடலுக்கு எல்லை தோன்றினாலும் ஊர்ப் பெண்டிரின் அலரால் தலைவன் மேல்
கொண்ட காதலை விட இயலாது என்று கூறுகிறாள்
தலைவி. இவ்வாறு தலைவனைச் சார்ந்து தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே
சங்கப்பாடல்களில் தலைவியின் பாத்திரம் அமைகிறது.
தலைவன் அற்றுத் தலைவியை பேசுவது இல்லை. தலைவன்
தலைவி என்ற கலாச்சார மாதிரியே இந்தியத்துணைக் கண்டம் தழுவிய கற்பினை வழுவாது
போற்றும் பெண்ணின் மாதிரியாகும். இந்நிலைமை இக்காலத்தும் உள்ளதை பல பெண்ணிய
சிந்தனையாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். இத்தகைய ஆணின் தன்னிலையோடு பிணைத்துக்
கட்டப்பட்ட பெண்ணின் தன்னிலையானது சுய ஊக்கம் இன்றிக் காணப்படுவதை
குறுந்தொகைப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன. தலைவன் வரும் பருவம் வந்தும் அவன்
வராதது கண்டு தலைவி வருந்துகிறாளே தவிர தலைவனுக்கு அவ்வருத்தம் கூறப்படவில்லை.
அலருக்கு அஞ்சும் தன்மை தலைவிக்குரியதாகவே காணப்படுகிறது. இதன் காரணமும்
பெண்ணிற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் இறுக்கமாகும். பெண் பேண வேண்டிய
ஒழுக்கமானது “கரணமொடு புணர கொளற்குரி மரபின் கிழவன் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்
கொள்வதாகும்”. அவ்வாறின்றி தலைவி திருமணத்திற்கு முன்பு காதல் கொள்வது இயல்புக்கு மாறானதாகும்
என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறாள்.
தலைவன் தலைவியைச்
சந்தித்துச் செல்லும்போது அவன் செல்லும் வழியில் விலங்குகளால் ஆபத்து இருப்பதை
எண்ணி தலைவி வருந்துகிறாள். தலைவனுக்கு நேரும் இடர்கள் தலைவியை வருத்தமுறச்
செய்கின்ற தன்மையானது தலைவனின் நலம் பேணுவதே தலைவியின் தலையாய நோக்காக
இருந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. ”மென்சினை யாஅம் பொளிக்கும்
அன்பின தோழி அவர் சென்ற ஆறே” (குறு.37) என்ற பாடல்
யானைகள் உலவும்
வழியில் தலைவன் சென்றதை எண்ணி தலைவி
வருந்துவதை வெளிப்படுத்துகிறது. ”மலையுடை அருஞ்சுரம் என்ப” (குறு.39) என்ற பாடல் வரி தலைவன் தன்னைச் சந்தித்துச் செல்லும்
மலைப்பாதையானது அருஞ்சுரமாக இருப்பதைக் கூறி வருந்துவதை வெளிப்படுத்துகிறது. அதுபோல்
செந்நாய்கள் இருக்கும் வழியில் செல்லும் தலைவனுக்கு ஆபத்து நேருமோ என்று ”வேட்டச் செந்நாய் கிளைத் தூண் மிச்சில்” (குறு.56) வருந்துகிறாள். தலைவன் மேல்
கொண்ட தலைவியின் அன்பானது அவனுக்கு நேரும் துயர்களைப் பற்றிய சிந்தனையையும்
கொண்டதாக அமைகிறது.
இதிலிருந்து மாறுபட்ட பாடல்களும் குறிப்புக்களும் இருக்கின்றன . தலைவன்
மீதுள்ள காதலை தன்னுடைய உடலின் வேட்கையை பெண்களே சொல்லும் விதமான பாடல்களும் உள்ளன
.தவிர தலைவனின் மாற்றுச் செயல்பாடான பரத்தையரைச் சேர்ந்தொழுகும் நிலையில் தோழி
அவனுக்கு வாயில் மறுத்துக் கண்டிப்பதாகவும் பாடல்கள் உள்ளன .ஒக்கூர் மாசாத்தியாரின்,
“மனையுறை
கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே. “
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே. “
என்கிற பாடல்
பரத்தையர் வீடு சென்று திரும்பும் தலைவனுக்கு வாயில் மறுத்து தோழி கூறுவதாக
அமைந்துள்ளது . தலைவிக்காக தோழி பேசுகிறாள் தலைவன் பரத்தையரை நாடிச் சென்று
வரும்போதும் தலைவி வாயில் மறுத்துரைத்தாலும் ஊடல் கொண்டாலும் அவை தலைவன் மேல் தொடர்ந்து
நீடிப்பதில்லை, உடன் சமாதானமும் அடைகிறாள் , பரத்தையரிடம் சென்று திரும்பும்
தலைவனை ஏற்றுக்கொள்கிறாள் என்பதை பல பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
சங்க காலத்திய
சமூக இயங்கியலில் பெண் என்பவள் பாலியல் ஒடுக்கத்தைக்
கடைபிடிக்கும் வகையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளாள். குடும்பத்தின் நற்பெயருக்குக்
களங்கம் விளைவிக்காத வகையில் நடந்து கொள்ளும் பெண்ணே தலைவி எனச் சுட்டப்படுகிறாள்.
களவுக்காதலில் ஈடுபட்டாலும் அதனால் ஏற்படும் இன்னல்களை பெரிதும் ஏற்பவள்
பெண்ணேயாவாள். தலைவனுக்கு களவின்பத்தில் திளைப்பது மட்டுமே நோக்கமாக இருக்க அவனைத்
திருமணத்திற்கு தொடர்ந்து வலியுறுத்துவதும் அலருக்கு அஞ்சுவதும் பெண்ணிற்குரியனவாகக்
காணப்படுகின்றன. தலைவியின் பிரிவாற்றாமை இங்கு பெரிதும் பேசப்படுகிறது.
பிரிவாற்றியிருத்தல் என்பது ஆணின் தன்னிலையே தனக்குப் பாதுகாப்பு என்கிற வகையில்
கட்டமைக்கப்படும் கருத்தாக்கமாகும்.
பெண்
தனக்குத்தானே சுய ஆதிக்கம் செய்து கொள்ளும் பண்பு எங்கும் இல்லை. அவளை வழி
நடத்துபவர்களாக தோழி, செவிலி, நற்றாய் ஆகியோர் காணப்படுகின்றனர். தலைவனை
வழிநடத்தும் பாங்கு எங்கும் காணப்படவில்லை. எனவே சங்க இலக்கிய காலமானது பெண்களை
குடும்ப நிறுவனத்திற்கு செறித்து ஓர் ஆணுக்குக் கையளிக்கும் வகையில் கட்டமைந்த
சமூகமாகவே இருந்தது என்பதை குறுந்தொகைப்பாடல்கள் காட்டுகின்றன. இன்றைய சூழலிலும்
இந்நிலைமை சில மாறுபாடுகளுடன் காணப்படவே
செய்கிறது.
நிலவுடைமைப்
பண்பானது பெண்ணின் தன்னூக்கத்தை மதிப்பிழக்கச் செய்கின்றன. இதனை மறுத்து இன்றைய
சூழலில் பெண்ணிய அரசியலானது பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை பெறுவதை நோக்கமாகக்
கொண்டு பிரதிகளை மறுவாசிப்பு செய்வதன் தேவையை இக்கட்டுரை முன்வைக்கிறது.
No comments:
Post a Comment