Pages

Tuesday 6 August 2013

மைதானத்திற்கு வெளியே . . .



உங்களுக்குப் போலத் தான்
எனக்கும் அதிகாலை துவங்கியது

ஆரஞ்சு நிறத்திலான மேகங்களுடன்
பறவைகளின் ஓசைகளுடன்
இருவரின் பொழுதும் ஒருபோல குளிர்ந்திருந்தது

உடையும் உங்களைப் போலவே
தேர்ந்து கொண்டேன்
பரந்த மைதானத்தில் நடப்பதற்காக

இருவரும் இணைந்து
அந்த பெருநிலத்தை ஒரு சுற்று கடந்தோம்

முதல் சுற்றின் இறுதியில்
பறவைகளின் தாகம் தீர்க்க
என் நடையைத் தளர்த்திக் கொள்ள வேண்டியிருந்தது

என்னிடமிருந்து
சில அடி தூரத்தில் முன் சென்று கொண்டிருந்தீர்கள்
உங்கள் நடை நிதானமாக இருந்தது
ஓட்டமும் நடையுமான வேகத்தில்
உங்களோடு இணைந்து கொண்டேன்

ஆகாயம் தன் ஆரஞ்சு வண்ணத்திலிருந்து
சற்றே வெளிறத் துவங்கியது

இரண்டாம் சுற்றின் இறுதியில்
பறவைகளுக்கு
தானியங்களைச் சேகரிக்கச் சென்றேன்

பறவைகள் தங்களுக்கென சேமிக்கத் தெரியாதவை
மேலும் தானியங்களின் இருப்பிடத்தையும் அறியாதவை

அவைகளின்
தானியங்களை வழங்கத் துவங்கினேன்

அப்போது
மூன்றாம் சுற்றின்
பாதித் தூரத்தைக் கடந்திருந்தீர்கள்
அதே வேகத்தில்

உங்களுடன்
இணைந்து கொள்ள விருப்பம் கொள்கிறேன்
என்றபோதும்
பறவைகளுக்குத் தானியமிட்டு
பறவைகளோடு பறவைகளாக பறக்கிறேன்
மைதானத்திற்கு வெளியே

வானம் தன் நீல நிறத்தை அடைந்திருந்தது .

Courtesy : Painting - TAMARA ADAMS

No comments:

Post a Comment