Wednesday, 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..
36.நக்கண்ணையார்:
ஒரு பெண் தன்னை உணர்த்துகிறாள்:


“யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே...”

ஒரு பெண்ணுக்கு தன்னுடைய ஆண் என்று ஒருவனைத் தேர்வுசெய்யும் வரை  குழப்பமான  மனநிலையே  இருக்கும். ஆனால் அவ்விதமாக  முடிவு செய்துவிட்டப் பிறகு அவளிடம் எவ்விதமான சஞ்சலமும் இருப்பதில்லை.  தான் விரும்புகிற ஆணைப்பற்றிய செய்திகளைச்  சமூகத்தின் முன்னிலையில் வைக்கத்தான் அவளுக்குத் தடைகள் அதிகம். ஆனால் விரும்புகிறவனிடம் வெளிப்படுத்த அவள் தயங்குவதேயில்லை. ஒரு பெண்ணுக்காக உருகித் தவிக்கிற ஆணுக்கு அதனை அவளிடம்  உணர்த்துவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரு ஆணுக்காக சமிக்க்ஷையை எந்தச்சூழலிலும் அந்த ஆணிடம் பெண் உணர்த்திவிடுகிறாள்.
______________________________________________________________________________


 “நேரடியாக
குகையிருட்டில்
மூங்கில் காட்டில்
வெடித்த சிக்கி முக்கித் தீயின்
வெளிச்சத்தைத் தரிசிக்கவில்லை
வெப்பத்தை ஸ்பரிசிக்கவில்லை.
அதன் அணையாத யாத்திரையை
நம்புகிறேன் ஆனால்
அடுத்த யுகங்களின் குகைகளுக்கும்
வெளிச்சம்தரும்
வீரியம் உண்டு அதற்கு.
தீயின்றி தீராது உலகம்.
தீயும் தீர்ந்துவிடாது.“

கல்யாண்ஜி என்கிற வண்ணதாசனின் படைப்புலகத்தைத் தொடர்வதென்பது ஒவ்வொருவருக்கும்  தங்களுடைய அகவாழ்வின் நுண்ணிய இழைகளை தங்களுக்குள் உணர்வதாகவே எப்பொழுதும் இருக்கிறது. ஒவ்வொரு ஆணுக்கும் அல்லது ஒவ்வொரு பெண்ணுக்கும் தங்களுக்கான வெளிச்சத்தை, தங்களுக்கான வெப்பத்தைத் தேர்வு செய்வதென்பது வாழ்வின் பெருவிருப்பமாக இருக்கிறது. அநாதிக்காலத்தில் மிகப்பழமையான நிலத்தின் பெண்ணொருத்தி, தன்னுடைய ஆணிடமிருந்து தன் வாழ்விற்கான ஒளிர்வின் திரியினை ஏற்றியிருப்பாள். இவளின் யுகங்களைக் கடந்தும் தொடர்ந்திருக்கும் அச்சிறுநெருப்பை, வெம்மையை அவனும் உணர்ந்திருப்பான். இதனை தங்களுடைய வாழ்வின் ஒருகணத்திலாவது உணர்ந்துவிட வேண்டுமென்ற தவிப்பிலேயே பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அந்தத் தீயினைச் சுவைக்க சிலருக்கு வாய்க்கிறது.

ஒரு மனிதனை இயக்கும் அடிப்படையான இச்சைகள் பசியும், காமமும் என நீட்சே கூறுகிறார். இந்த இரண்டையும் இரண்டு வகையான தீ எனலாம். வயிற்றுப்பசிக்கு ஒருவன் தன்னுடைய சுயதேடலின் மூலம் உணவைக் கண்டடைந்துவிட முடியும். இந்த “பசி” என்கிற உணர்வுக்கு முன்பாக சில வகைப்பாடுகள் உள்ளன. காமம் என்பது ஒப்புநோக்க வயிற்றுப்பசியை விடவும் சிக்கலானது. இதனைத் தீர்க்க இன்னொரு மனமும் உடலும் வேண்டும். வயிற்றுப்பசியின் பொழுது விரும்புகிற உணவிலிருந்து, கிடைக்கிற வேறு உணவினால் பதிலி அல்லது ஈடு செய்துவிட முடியும். ஈடு செய்யவியலாததும் மாற்று வழிமுறை செய்துகொள்ள இயலாததுமாக காமம் உள்ளது. ஆற்றுப்படுத்த முடிகிற இணை உடனிருக்கையில் காமம் ஆக்கபூர்வமானதாக இருக்கிறது. ஆற்றுப்படுத்த வழிமுறையற்ற நிலையில் காமம் என்பது அழிவுக்குக் காரணமாகவும் ஆகிறது.

வாழ்வின் புறக்காரணிகளினால் அலைக்கழிக்கப்படுகிற அளவுக்குச் சற்றும் குறைவில்லாத வகையிலேயே அகம் சார்ந்த அலைக்கழிப்புகளும் உள்ளன. பெரும்பாலான சமயங்களில் அகம் சார்ந்த சலனங்களே புறக்காரணிகளை உருவாக்குகிறது. ஒருவரின் அகம்சார்ந்த உணர்வுகளை மிகச்சரியான புரிதலுடன் பகிர்ந்துகொள்ள முடிகிற இணைக்கான விழைவே ஒட்டுமொத்த வாழ்வுக்கான தேடலாக இருக்கிறது. ஆனால் பலசமயங்களில் இதற்கான அலைச்சல்தான் எல்லாத் துயரத்திற்கும் அல்லது இன்பத்திற்கும் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமலேயே வாழ்வு முடிந்துவிடுகிறது.

“என்னை யாருமே சரியாகப் புரிந்துகொள்வதில்லை” என தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் சொல்லாதவர்கள் இருக்கமுடியாது. இதில் சொல்லப்படுகிற “யாருமே” என்கிற சொல் மிக முக்கியமானது. யாருமே எனச் சொல்கிற நபர், அவர் ஆணாகிலும் பெண்ணாகிலும் அனேகமாக எதிர்பாலினரிடம்தான் இந்தப் புரிந்துகொள்ளுதலை எதிர்பார்க்கிறவர்களாக  இருக்கிறார்கள். குறிப்பாக அவர் நேசிக்கிற ஒருவர் புரிந்துகொள்ளவில்லை அல்லது ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற மனத்தளர்வில் சொல்வதுதான் அது. தன்முன்னே இருக்கும் பிரியமான ஒருவரே இந்த உலகத்தின் ஒட்டுமொத்த “யாருமே” என்கிற பிம்பத்தை ஏற்றவராக இருக்கிறார்.

“யாருமே” என்று எல்லோருக்குமான அதிஉன்னத ஒற்றைச்சொல்லை ஏற்கத்தகுதியுள்ள தன்னுடைய இணையைத் தேர்வு செய்வதில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது. ஆணுக்கு ஒரு பெண்ணைத் தேர்வு செய்வதில் இருக்கும் சமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த சிக்கலைவிடவும்,  ஒரு பெண்ணுக்கு அவளுக்கான ஆணைத் தேர்வு செய்வதில் மிகக்கடுமையான சிக்கல் இருக்கிறது. இங்கே சிக்கல் என்பது சூழலின் சிக்கல் மட்டுமல்ல. முதலாவதாக ஒரு ஆணைத் தேர்வு செய்கிற உரிமையே பெண்ணுக்குக் கிடையாது. அப்படியே தேர்வு செய்தாலும் பெண்ணின் தேர்வுக்கு பெரும்பாலும் பெற்றோரிடம் அனுமதி கிடைப்பதில்லை. சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. இவ்வகையான புறம்சார்ந்த நிகழ்வுகளுக்கு முன்னதாக பெண்ணின் அக அலைக்கழிப்பே காலங்காலமாக தீராத அவளின் போராட்டங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

ஒரு ஆணிடம் ஈர்ப்பு ஏற்பட்டவுடன் அது காதல்தான் என முடிவு செய்வதற்குள்  ஒரு பெண்ணின் மனதிற்குள் அவனைப்பற்றிய கேள்விகளும் பதில்களும் இடைவிடாது எழும்பும். அவனைப் பற்றிய கேள்விகளுக்குள் அவளே அமைத்துக் கொள்கிற பதில்களாகி விதையென உருவாகிக் கொண்டிருப்பாள். சிறுதூறலின் கணத்தில், அது காதல்தான் என அவள் உணர்ந்துகொண்டவுடன் அவளே அறியாதவண்ணம் அடிநிலம் முழுவதும் படர்ந்த வேர்களுடன் கிளைத்துப்பெருகத் தொடங்கிவிடுவாள்.

உறையூர் வீரைவேண்மான் வெளியன் தித்தனது மகன் சோழன் கோப்பெரு நற்கிள்ளியிடம் காதல் கொண்ட ஒரு பெண்ணின் நிலைபற்றி  நக்கண்ணையார் பாடிய பாடல்,

“என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும்,
என் ஐக்கு நாடு இஃது அன்மையானும்,
ஆடுஆடு என்ப, ஒரு சாரோரே;
ஆடு அன்று என்ப, ஒரு சாரோரே;
நல்ல, பல்லோர் இரு நன்மொழியே;
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி, எம் இல், 
முழா அரைப் போந்தை பொருந்தி நின்று,
யான் கண்டனன், அவன் ஆடு ஆகுதலே.”

“என்னுடைய தலைவனுக்கு ஊர் இது அன்று, என்னுடைய தலைவனுக்கு நாடு இது அன்று. ஒரு சாரார் அவன் வெற்றியைப் போற்றுவார்கள். ஒரு சாரார் இது வெற்றியன்று எனச் சொல்வார்கள். என்னுடைய காதுகளுக்கு இருசாரார் சொற்களும் இனிமையுடையவையே. நான் என்னுடைய காற்சிலம்புகள் ஒலிக்குமாறு ஓடிச்சென்று வீட்டின் பக்கத்திலுள்ள பனைமரத்தில் சாய்ந்து நின்றேன். முடிவில் அவன் வெற்றியடைதலையே கண்டேன்.”
ஆமூர் மல்லனுக்கும் நற்கிள்ளிக்கும் மற்போரும் விற்போரும் நடந்தன. 

இதனை ஒருபெண் பார்க்கிறாள். வெளியூரைச் சேர்ந்த ஒருவரின் வெற்றியை பொதுவாக உள்ளூர்க்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் அவனுடைய வெற்றியை வெற்றி அல்ல என சிலர் சொல்கிறார்கள். வெற்றிதான் என சிலர் சொல்கிறார்கள். இப்படியொரு காட்சி நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தப்பெண் இதனையும் பார்க்கிறார். இருசாரார் சொல்வதுமே அவளுக்கு இனிமையுடையதாக இருக்கிறது என்கிற இடத்தில்தான் இந்தப் புறக்காட்சி அகத்திற்கு இடம்பெயர்கிறது. அவனது ஆளுமையும், வீரமும் அவன் மீதான காதலை அவளுக்குள் நிகழ்த்தியவண்ணம் இருக்கிறது. இவ்விதமாக மனம் மயங்கிய தன்னுடைய நிலையை ஏற்றுகொள்வதா வேண்டாமா என்கிற போராட்டம் அவளுக்குள் நிகழத்தொடங்குகிறது. புறத்தில் ஒலிக்கிற வெற்றி என்கிற சொல்லும், வெற்றியன்று என்கிற சொல் அதனுடைய விளைவை அவளுடைய அகத்தினுள் ஏற்படுத்தத் தொடங்கிவிடுகிறது. அவளுடைய மனதுக்கும் அறிவுக்குமிடையே தர்க்கம் நிகழத்தொடங்குகிறது.  

பொதுவாக சங்க இலக்கியப்பாடல்களில் வருகிற நிலக்காட்சிகள் படிமங்களாகவும் குறியீடுகளாகவும் இருக்கின்றன. ஒருமரம் அல்லது ஒரு பறவை கூட மனித உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்துள்ளன. அவள் ஓடிச்சென்று பனைமரத்தின் “முழவு” போன்ற அடிமரத்தில் சாய்ந்து நிற்கிறாள். இப்பொழுது அவள் புறக்காட்சியிலிருந்து முற்றிலும் விலகுகிறாள். இறுதியில் அவன் வெற்றி பெற்றான் என்று சொல்வது நடைபெற்ற மற்போர் குறித்தது அல்ல. அறிவுக்கும் மனதிற்குமிடையே மயங்கித் தடுமாறிய அவளுடைய மனமே இறுதியில் வெற்றியடைகிறது. இப்போது அவளிடம் தர்க்கங்களுக்கு இடமில்லை. பனைமரத்தின் தூர் பற்றிக் குறிப்பிடுகையில் “முழவு” போன்ற என்கிறார். முழக்கம் செய்யக்கூடிய கருவிக்கு முழவு என்று பெயர். பல்வேறு சிறிய இசைக்கருவிகள் ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் முழவின் ஓசை ஒலிக்கப்படுமாயின் மற்றவைகளின் ஒசை எடுபடாமல் போய்விடும். அவளுடைய தர்க்கங்கள் அத்தனையும் அதற்கான வலுவினை இழந்து போகும்படியாக அவளுடைய மனமானது அவனுடைய பெயரை மட்டுமே முழங்குவதாக மாறியுள்ளதென என எடுத்துக் கொள்ளலாம்.
நக்கண்ணையார் பாடிய பாடல் மற்றொரு பாடலில்,

“அடிபுனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;
அடுதோள் முயங்கல் அவை நாணுவலே;
என் போல் பெரு விதுப்புறுக; என்றும்
ஒருபாற் படாஅதாகி,
இருபாற் பட்ட இம் மையல் ஊரே!”

“வீரக்கழலும், கருமையான இளந்தாடியும் உடைய காளை ஒருவனுக்காக என்னுடைய கைவளையல்கள் நெகிழ்ந்தன. என்னுடைய அன்னைக்கு நான் அஞ்சுகிறேன். பகைவென்ற அவனுடைய தோள்களைத் தழுவ விரும்பினாலும் அவையினரைக் கண்டு நாணம் கொள்கிறேன். அன்னையின் பக்கமாகவும் அவையின் பக்கமாகவும் இருபக்கத்திலும் நடுக்குற்று இருப்பதுபோல இந்த ஊரும் இரண்டு பக்கத்திலும் மாறிமாறித் துன்புறுகிறது.

சரியான சூழல் அமையும் பொழுது பெண் தன்னை வெளிப்படுத்த நினைப்பாள். இதற்கு முதல்தடையாக அம்மா இருப்பதாக எண்ணி அச்சமடைவாள். காதலில் நெகிழ்ந்திருக்கும் மகளுக்கு அம்மாவின் மிகச்சிறிய கடுஞ்சொல்லும் தாங்கவே இயலாததாக இருக்கும். மகளாக இருக்கும் பெண் தன்னுடைய அகம் சார்ந்த முதல் பொய்யை அம்மாவிடமே அரங்கேற்றம் செய்கிறாள். நாணத்தைவிட்டு அவளுடைய காதலை வெளிப்படுத்தத் தடையாக அவள் வசிக்கிற ஊரும் இருப்பதாக தவிக்கத் தொடங்குவாள். அப்பொழுது அம்மாவும், உறவுகளும், ஊராரும் அவளுடைய உலகத்திலிருந்து மறைந்துவிட விருப்பம் கொள்வாள். ஒரு பெண்ணுடைய காதல் உலகமென்பது இப்புவியைவிடவும் பெரியதாக இருக்கிறது. அதனால்தான் தேவகுலத்தார் என்கிற சங்கப்புலவர் குறுந்தொகைப் பாடலில் (குறுந்:3) “தலைவனோடு கொண்ட காதலானது இந்த உலகத்தைவிடப் பெரியது, வானைவிட உயர்ந்தது, கடலைவிட ஆழமுடையது” என்கிறார்.

காதலில் அமிழ்ந்திருக்கும் பெண் யாருமே இல்லாத தனித்த இடத்திலிருப்பதை விரும்புகிறாள். அந்தத் தனிமையில், அவளுடைய காதலன் மட்டுமே எப்பொழுதும் உடனிருக்கவேண்டும் அல்லது அவனைப்பற்றிய கற்பனையில் திளைத்திருக்க வேண்டுமென நினைக்கிறாள். மனதுக்குள் வரித்துக்கொண்ட தலைவனுடன் வாழ்வதற்காக  அவர்களுக்கே உரிய தனித்த உலகத்தை சிருஷ்டித்துக் கொள்கிறாள். அவனை அடைந்து வாழத்தொடங்கும் காலத்திற்கு முன்பாக அவளே படைத்த உலகத்தில் கனவுகளாலும் நினைவுகளாலும் அவனோடு வாழத் தொடங்கியிருப்பாள். இந்த தனித்த வாழ்வை யார் ஒருவரும் அறிந்துவிடக்கூடாத இரகசியமாக வைத்திருப்பாள். இதற்கு இடையூறு நிகழாமல் பார்த்துக்கொள்ள ஒவ்வொரு கணத்திலும் முயலுகிறாள்.

காதல் நிரம்பிய பெண்ணொருத்தி எப்பொழுதுமே உணர்ச்சிகளின் அழுத்தத்தில் இருக்கிறாள். சதாப்பொழுதும் நினைவுகளின் அலைக்கழிப்புக்கு ஆட்பட்டவளாக இருக்கிறாள். எதன்மீதும் பிடிப்பற்று, எந்த இடத்திலும் ஸ்திரப்பட இயலாது தவித்தபடி இருக்கிறாள். அவள் காண்பதெல்லாம் அவன், உணர்வதெல்லாம் அவனெனத் தன்னை உருவாக்கிக் கொள்கிறாள்.

1939 இல் வெளியான “ Gone with the Wind “ என்கிற திரைப்படத்தில் கதையின் நாயகியாக வருகிற ஸ்கார்லெட் என்கிற பெண்ணுக்கு ஆஷ்லே என்பவனின் மீது காதல். அவனுக்கோ வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விடுகிறது. இது தெரிந்தபின்பும் இந்தப்பெண் தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்துகிறாள். அந்தத்கதை முழுக்க நிறைவேறாத காதலுடன் அவள் அலைந்து கொண்டிருப்பாள். ஆனால் ஆஷ்லே மீது மனதிற்குள் பொதிந்து வைத்திருக்கும் காதலுடன் வெவ்வேறு மூன்று திருமணங்களை செய்கிறாள், மூன்றாவது கணவனுக்கு ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கிறாள், கிட்டத்தட்ட ஏழு, எட்டு வயதுவரை வளர்ந்த அந்தக் குழந்தை விபத்தில் இறந்துபோகிறது. அவளுடைய வாழ்வில் இவ்வளவு நடந்த பிறகும் ஆஷ்லே மீது கொண்ட காதலை கைவிட இயலாதவளாக இருக்கிறாள். கதையின் பின்னணியில் ஒரு கொலை செய்கிறாள். பணத்திற்காகப் பொய் சொல்கிறாள், ஏமாற்றுகிறாள். ஆனால் எந்தச் சூழ்நிலையிலும் ஆஷ்லேவுக்காக ஏங்குகிறாள். மார்க்ரெட் மிச்சலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டத் திரைப்படம் இது. பதினோரு மாகாணங்களைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினரிடம் அடிமைகளாக இருந்த நீக்ரோக்களை விடுவிக்க, அன்றைய அமெரிக்க அரசு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு காலகட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள கதை. போருக்கான காரணத்தையும், போரில் மரித்த அத்தனை உயிர்களையும் புறந்தள்ளும் வகையில் ஸ்கார்லெட் என்கிற பெண்ணின் நிறைவேறாத காதல் மிகநுட்பமான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருதலையாகக் காதல் செய்வது என்பது உலகளாவிய உணர்வுதான். இந்த உணர்வு, தமிழ் நிலத்தில் கைக்கிளை என்கிற திணையில் வகைபடுத்தப்பட்டுள்ளது. இந்த வெளிப்பாட்டின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டத் தமிழ்த் திரைப்படங்களும் எண்ணற்றவை. பெரும்பாலும் ஒருதலைக்காதல் என்பது ஆணுக்கு உரியதாகக் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களே ஆரம்பகாலங்களில் உருவாகின. பின்னாட்களில் இருபாலினருக்குமாக பொதுமைப்படுத்தப்பட்டன. பாலுமகேந்திராவின் “ஜூலி கணபதி” என்கிற திரைப்படம் கைக்கிளையின் வன்மையான பகுதியைப் பேசுகிறது. அதாவது பெண் கொண்ட ஒருதலையான காதலின் நிறைவேறாத நிலையை, சற்று மனம் பிறழ்ந்த பெண்ணை வைத்து கதை சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப்பெண்ணின் மனப்பிறழ்வைச் சொல்வது அந்தத் திரைப்படத்தின் நோக்கமல்ல. நிறைவேற்றிக்கொள்ள இயலாத காதலினால் ஏற்படுகிற பித்துநிலையின் தீவிரத்தைச் சொல்கிறது. ஆற்றுபடுத்த இயலுகிற காதலின் தீ ஆக்கப்பூர்வமாகவும், ஆற்றுப்படுத்தவே முடியாத நிலையில் அது பேரழிவுக்கும் இட்டுச்செல்கிறது. சமீபகாலத்தில் அறியவருகிற பல்வேறு நிகழ்வுகளின் வழியாக கைக்கிளையின் தன்மையென்பது மென்மையும் தியாகமும் மட்டுமல்ல என்கிற அப்பட்டமான உண்மையை ஒத்துகொள்ள வேண்டியிருக்கிறது.

தனக்குப் பிடித்திருக்கிறது என்பதாலேயே அவனுக்கோ அல்லது அவளுக்கோ நம்மைப் பிடித்திருக்கும் என்கிற அடிப்படையான மனஉணர்வின் உந்துதலில் தொடங்குகிறது கைக்கிளை. அவளை அல்லது அவனை ஏற்றுக்கொள்ள இயலாத சூழலில் அவன் அல்லது அவள் இருக்கலாம். என்றபோதிலும் கண்களின் சைகைகளினால் அவர்களுக்கு மட்டுமே உணரமுடிகிற மிக நுட்பமான பரிமாற்றம் அவர்களுக்கிடையே நிகழ்ந்திருக்கும். இந்த நுட்பமான பரிமாற்றமே காதல் என்கிற உணர்வுக்குள் ஒருவரை நகர்த்துகிறது. எதிரே இருப்பவரால் உணரப்படாத காதல் பெரும்பாலும் இல்லையென்றே சொல்லலாம். சூழலினால் இணைந்திருக்க இயலாமல் போகலாம். சமூகத்தின் பார்வையில்தான் அது கூடாக் காதலாக பிரிந்திருக்கும். மனதிற்குள் அவர்கள் தங்களுக்கான ஆதித் தீயினை உணர்ந்திருப்பார்கள். சமூக வரையறையில் ஒருதலையாகக் காதல் வயப்பட்டிருப்பவர்கள் தங்களுக்குள் என்றுமே தீராத தவிப்பிற்குட்பட்டவராக இருக்கிறார்கள். எவ்விதமாகிலும் காதலின் தீயின்றி ஒருவரின் வாழ்வு தீர்வதில்லை.

நக்கண்ணையாரின் முதல் பாடலில் தலைவியின் மனமானது இரண்டுபட்டிருக்கிறது. தலைவனுடைய வெற்றியை ஊர் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ இவளது மனதிற்குள் அவள் வெற்றி பெற்று விடுகிறான். இரண்டாம் பாடலிலும் இரண்டுவிதமாக அலைக்கழிகிறாள். இவளுடைய நிலைகண்டு அந்த ஊரும் அன்னையின் பக்கமாகவும் அவையின் பக்கமாகவும் பிரிந்திருக்கிறது. இவ்விரண்டு பாடல்களிலும் தலைவியின் மனமானது தலைவனைக் குறித்தே தடுமாறிக் கொண்டிருக்கிறதைக் குறிப்பிடுகிறது. ஒரு பெண்ணுக்கு தன்னுடைய ஆண் என்று ஒருவனைத் தேர்வுசெய்யும் வரை  குழப்பமான  மனநிலையே  இருக்கும். ஆனால் அவ்விதமாக  முடிவு செய்துவிட்டப் பிறகு அவளிடம் எவ்விதமான சஞ்சலமும் இருப்பதில்லை.

தான் விரும்புகிற ஆணைப்பற்றிய செய்திகளைச்  சமூகத்தின் முன்னிலையில் வைக்கத்தான் அவளுக்குத் தடைகள் அதிகம். ஆனால் விரும்புகிறவனிடம் வெளிப்படுத்த அவள் தயங்குவதேயில்லை. ஒரு பெண்ணுக்காக உருகித் தவிக்கிற ஆணுக்கு அதனை அவளிடம்  உணர்த்துவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால் ஒரு ஆணுக்காக சமிக்க்ஷையை எந்தச்சூழலிலும் அந்த ஆணிடம் பெண் உணர்த்திவிடுகிறாள்.


இவரது பாடல்கள்:அகநானூறு:252 நற்றிணை: 19,87 புறநானூறு:83,84,85 மொத்தம்: 6

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..


35.மாற்பித்தியார்:


ஒரு பெண் பொறுப்புக்களை ஏற்றிருக்கிறாள்:

“சொல்வலை வேட்டுவன் ஆயினன்...”

ஒரு ஆண் எப்பொழுதெல்லாம் இல்லற வாழ்வில் சலிப்புற்று துறவுக்காக மனம் ஏங்குகிறான் என்று பார்த்தால் அதற்கு அடிப்படையாக ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதை அறியலாம். பெரும்பாலும் அவன் உறவாக வரித்துக் கொள்கிற பெண்ணும் அவள் வழியாக உருவாகிற சந்ததியும் அதன் காரணமாகத் தொடர்கின்ற பொறுப்புகளும் அவனைப் பதற்றபடுத்தியபடி இருக்கின்றன. பலசமயங்களில் ஆணின் துறவுக்கு ஞானத்தேடலை விடவும் பொறுப்புகளிலிருந்து தப்பித்துப் போதலே உள்ளார்ந்த காரணமாக இருக்கிறது. பாம்பு சட்டை உரிவதுபோல தன்னுடைய பொறுப்புகளை கலைந்துவிட முயலுகிறான். பெண்ணுக்கு குடும்பம் சார்ந்து, அதன் மீதான பொறுப்புக்கள் சார்ந்து சிக்கல் ஒருபோதும் இல்லை. அவள் பொறுப்புக்களை உவந்து ஏற்கிறாள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------


திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்வது என்னுடைய வழக்கம். எல்லா உயிர்களும் தீயின் வடிவம் கொண்டவை என்கிற நம்பிக்கை எனக்குண்டு. தீ வழிபாடாக அங்கு ஏற்றப்படுகிற மகாஜோதி தரிசனத்தைக் காணப்பிடிக்கும். அங்கு சென்று திரும்புகிற பயணங்களில் எல்லாம் தவறாது எனக்குள் தோன்றுகிற  எண்ணம், “இங்கே சாமியாராகச் சுற்றித் திரிபவர்களுக்கெல்லாம் மனைவி, பிள்ளைகள் கிடையாதா? இவர்களில் எத்தனை பேர் தங்கள் பொறுப்புகளை விட்டு நழுவி இங்கே வந்து அமர்ந்திருக்கிறார்கள், இந்த ஒரு பகுதியில் மட்டும் இத்தனை சாமியார்கள் இருக்கிறார்கள் என்றால் நாடுமுழுக்க எத்தனை ஆயிரம் அல்லது லட்சம் ஆட்கள் இருப்பார்கள், இப்படி குடும்பத்தைத் துறந்து காவி உடுத்திக் கொண்டவர்கள் எல்லோரும் ஞானத்தை அடைந்தார்களா அல்லது ஞானத்தை அடைவதற்காக மட்டுமே குடும்பத்தைத் துறந்தவர்களா, மன்னனாக இருந்த சித்தார்த்தன் புத்தனாக ஆனதும் மன்னனாக ஆகவேண்டிய இளங்கோவடிகள் துறவியானதும் போலவே எல்லோரும் ஞானம் அடைந்தார்களா” என்பதுதான்.

ஆண், தன்னுடைய வாழ்வில் ஏதாவது ஒருகட்டத்தில் தன்னுடைய நட்புகளையும் உறவுகளையும் ஒட்டுமொத்தமாக அறுத்துவிட்டு தான்மட்டும் பிறவிப்பெருங்கடல் நீந்தவும், இந்தப் பிறப்பினைக் கடந்து தப்பிச் செல்லவும்  நினைக்கிறான்.  இனியொரு பிறப்பு வேண்டாம் என்று பிறவியினை அறுத்துக்கொள்ள விரும்புகிறான். ஒருவன் தன்னுடைய வாழ்நாளில் ஒருமுறையேனும் சாமியாராகப் போயிருக்கலாம் எனச் சொல்லாமல் இருப்பதில்லை.

ஒரு ஆண் தன்னுடைய இளமைக்காலத்தில் பெண்ணுடன் ஏற்படுத்திக்கொள்கிற உறவுக்காக ஆவல் கொள்கிறான். இந்தப் பிணைப்பிற்காக அவளிடம் தன்னைக் கையளிக்கவும் அவளைக் கைக்கொள்ளவும் படாதபாடுபடுகிறான். அவன் விரும்புகிற பெண்ணை அடைவதற்காக எதனையும் இழப்பதற்குத் தயாராக இருக்கிறான். சிலசமயம் விரும்பியது கிடைத்தாலும் அதனை குறித்த கவலை அவனுக்கு இருக்கிறது. தன்னுடைய உடல்வலு குறையும் பொழுது, தான் விரும்பியவை அல்லது தான் நேசித்தவைக் தன்னைவிட்டுப் போய்விடுமோ எனத் தடுமாறுகிறவனாக இருக்கிறான்.

ஒரு குடும்பத்தின் பல்வேறு பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கிற ஒருவன் அதனை அவன் விரும்பிய விதமாக நிறைவுசெய்ய இயலாதநிலை வரும்பொழுது சோர்வடைகிறான். எதார்த்த வாழ்வின் அன்றாடத்திற்குள் தோல்வியுறுகிறவன் குடிகாரனாகவோ துறவியாகவோ ஆகிறான். இளமையில் ஒரு பெண்ணோடு சேர்ந்து வாழ்வதே இன்பம் என நினைப்பவன் இக்கட்டான சூழலில் முதலாவதாக கைவிட்டு விலக நினைப்பதும் அவளைத்தான். வாழ்வின் தொடக்கத்தில் ஒரு பெண்ணுடன் பற்று ஏற்படுத்தத் தவித்ததுபோலவே  அவளிடமிருந்து அறுத்துக் கொள்ளவும் முயலுகிறான்.  

இளமைக்காலத்தில் மட்டுமல்ல, பெண் மீதான பிரியம் என்பது ஆணுக்கு எந்தப்பருவத்திலும் குறைவது இல்லை. அம்மா, மகள், சகோதரி, தோழி, போன்ற உறவுகளினால் பெண்களுடன் எப்போதும் தன்னைப் பிணைத்துக் கொண்டிருக்கிறான். மற்ற எல்லா உறவுகளையும்விட மனைவி அல்லது காதலியிடம் கூடுதல் உரிமை எடுத்துக்கொள்கிறான். இந்த உரிமையே காதலாகவும் காமமாகவும் அதிகாரமாகவும் இருக்கிறது. பெண் என்பவள் ஆணுக்கு காதலும் காமமுமாக இருக்கிறாள். அவளிடம் அவனுக்கு இவ்வுணர்வுகள் தீர்வதேயில்லை. எனவேதான் தன்னுடைய காதலையும் காமத்தையும் கரைத்துக் கொள்வதற்காக அவளுக்குள்ளே தொலைந்துபோகவும் முயலுகிறான்.

ஒரு பெண்ணிடம் நிறைந்து, அவளை நிரப்பி  அவளுடைய அடிவயிற்றின் வெதுவெதுப்புக்குள் அடிபெருத்து, கிளைபெருத்து, விழுது தாங்கும் மரத்திற்கான  வீரிய வித்தினை விதைக்க விழைகிறான். மிகச்சரியான பருவத்தில் முதலிரண்டு தாயிலை துளிர்க்க வைத்து அத்தாவரத்தின் மூன்றாம் இலையை துளிர்க்க வைக்கிற பெண்ணுக்குள் அடைக்கலமாகிறான்.  

தன்னுடைய சந்ததி விருத்தியடைகிற கிளையை அவள் வழியாக பரப்புகிறான். அதனாலேயே அவளிடம் சரணடைந்து, தன்னுடைய பிறவியை அவள் அறுத்துவிட மாட்டாளா எனவும் ஏங்குகிறான். ஆனாலும் பலசமயங்களில் ஒரே ஒரு பெண்ணிடம் நிறைவடையாமல் தவிக்கிறான்.

சிலசமயம் தன் மூலமாக உருவாகிற சந்ததி ஆணை அச்சப்படுத்துகிறது. பெண்ணுடல் என்பது அவனுக்கு உற்பத்திக்கருவியாக இருக்கிறது. பெண்ணுக்கு இவ்வகையான குழப்பம் ஏதுமில்லை. அவள் நிலம் எந்த விதை போட்டாலும் விளைவிப்பதற்குத் தயாராக இருக்கிறது. பெண் தன்னுடைய உடலை உயிர்களை உற்பத்தி செய்யும் கருவியாகப் பார்ப்பதில்லை. தன்னுடைய இன்னொரு வடிவமாக புதிய உயிரைப் பார்க்கிறாள். அவளுக்கு இரத்த உறவுகளின்பால் பயமேதுமில்லை. இவர்களை வளர்த்து ஆளாக்குவது குறித்த குழப்பமில்லை. அதனால் குடும்ப உறவுக்குள் இணைத்துக் கொள்கிற ஒரு பெண் தனியாக ஒரு துறவு வாழ்வை மேற்கொள்ள அல்லது பிறவிப் பெருங்கடலை நீந்த இயலாமல் தவிப்பதில்லை.

குடும்பம் என்பது ஆணை பதற்றப்படுத்திக் கொண்டே இருக்கிறது. தன்னுடைய மனைவியும் குழந்தைகளும் தனக்கு அடங்கி இருப்பதையே ஆணின் மனம் மிகவும் விரும்புகிறது. அசோகமித்திரனின் விமோசனம் என்கிற கதையில், கதையின் நாயகி சரஸ்வதி கணவனுக்கு மிகவும் பயப்படுகிறவள். எப்பொழுதும் மற்றவர்களின் முன்பாக அவமானப்படுத்துகிற கணவனுக்கு பயப்படுகிற அவளைப் பார்த்தால் பரிதாபமே ஏற்படுகிறது. ஒருமுறை குழந்தையின் அழுகையை அடக்கமுடியாமல் தடுமாறும் அவளை கடுமையாகத் திட்டி அடிக்கிற கணவனிடம், அதுவரை அடங்கியே இருந்த மனைவி திடீரென்று எழுந்து நின்று "உம்" என்கிறாள்.  அவன் திடுக்கிட்டுப் பயந்து பின் வாங்குகிறான். சரஸ்வதி கணவனைப் பார்த்து கண்களை உருட்டி அகல விரித்து, "உம், ஜாக்கிரதை" என்று திரும்பவும் சொல்கிறாள்.  குழந்தையும் கூட அப்பொழுது  அழுகையை நிறுத்துகிறது.  ஆனால் அதன்பிறகு அவள் கணவன் அவளிடம் பேசுவதில்லை.  அவனிடம் பலமுறை கெஞ்சிக் கூத்தாடிப் பார்க்கிறாள். அவன் அவளிடம் பேசவேயில்லை. கதையின் இறுதியில், முன்பு கணவனுடன் சந்தித்திருந்த மகானைப் பார்த்து அவள் தன்னுடைய  துயரத்தைப் பகிர்ந்துகொள்ள போகிறாள். ஆனால் அவரைப் பார்க்க இயலவில்லை. வீடு திரும்புகிறாள். அன்று அவள் கணவன் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.  ஏன் என்றுமே வந்திருக்கவில்லை” என்று கதையை முடித்திருக்கிறார் அசோகமித்திரன்.  இப்படித்தான் பல ஆண்கள் பெண்களிடம் தன்னுடைய அதிகாரம் சிதைவுறும் நிலையை ஏற்றுகொள்ள இயலாமல் இருக்கிறார்கள்.

மாணவப்பருவம், இல்வாழ் பருவம், ஓய்வுநிலை, துறவுநிலை என ஆண்களுக்கு  நான்கு பருவங்கள் இருப்பதாக வேதமரபு சொல்கிறது. மாணவப்பருவம் முடிந்தவுடன் இல்வாழ்வில் நுழையாமல் துறவு வாழ்வில் நுழைவது ஒருவகை. பெரும்பாலும் புத்தமதமும் சமணமும் திருமணத்திற்கு முன்பான துறவினை வழிப்படுத்தின. இந்துமதம் துறவினை நான்காம் நிலையிலேயே வைத்துப் பார்த்தது.
பெண்ணிடம் காதல் கொண்டு, இயற்கையான உணர்வெழுச்சிக்குள் தன்னை ஒப்புகொடுக்க காதலி ஒருத்தியைத் தேர்வதும், உடலை அதன்போக்கிலேயே அனுமதித்து, தன்னுடலை தான் உணர்வதும்தான் இல்லறத்தில் முக்கியமானது. தன்னை உணர்ந்த நிலையிலிருந்து லௌகீக வாழ்வுக்கு முற்றுபுள்ளி வைப்பது வானப்ரஸ்தம் என்கிற பூரணசந்நியாசம் பெற்றுக்கொள்வது ஒரு நிலை. திருமணம் முடித்து, குடும்பம் மற்றும் உறவுகளுக்குச் செய்யவேண்டிய கடமைகளை முழுமையாகச் செய்து, “ஓய்வுநிலை” என்கிற மூன்றாம் நிலையில் உறவுகளை விட்டு மெல்ல மெல்ல விலகி, சம்பாதித்த பொருட்களை தானம் செய்கிற மனநிலைக்கு வந்து நான்காம் நிலையான துறவுக்குள் நுழைய வேண்டும்.
ஆண்டுக்கு ஒருமுறை விரதம் இருந்து கருப்பு உடையோ, காவி உடையோ கட்டிக்கொண்டு தன்னை  ஒரு சாமியாராக நினைத்துக்கொள்வதில் ஆண் உள்ளூர மகிழ்வடைகிறான். உறவுகளைத் துறந்துவிட ஒருகணமேனும் நினைக்கிற ஆண்தான் ஆண்டுதோறும் முருகனுக்கும், ஐயப்பனுக்குமென  குறுகிய தவவாழ்வை வாழ்ந்து பார்க்கிறான். கடைநிலை ஊழியத்தில் பணிபுரிபவர்கள் இக்காலகட்டத்தில் தாங்கள் “சாமி” என்று அழைக்கப்படுவதை விரும்புகிறார்கள். இந்நாட்களில் தாங்கள் மரியாதையுடன் நடத்தப்படுவதில் உள்ளூர மகிழ்கிறார்கள். பகல் முழுக்கக் குடிப்பவரும், இரவு வந்தால் குடி நினைவில் கைகால் நடுங்குபவரும் கூட சாமிக்கு மாலை போட்டு விரதமிருந்தால் யாரும் சொல்லாமலேயே சுயக்கட்டுப்பாட்டுக்கு வந்துவிடுகின்றனர். அக்காலகட்டத்தில் தன்னையவன் முழுமையான துறவு நிலைக்குள் வைத்துக்கொள்ள முனைகிறான். கிடைத்ததை உண்டு, மிகக்குறைவாக உறங்கி, போகத்திலிருந்து விலகியிருப்பது ஒரு வகையான தவம். தற்காலிக துறவுகளில் நிறைவடையாமல் முழுமையான துறவு மேற்கொள்பவர்களும் உண்டு. குடும்பம், உறவுகளை விட்டு விலகாமல் வீட்டிற்குள்ளேயே ஐம்புலன் அடக்கி துறவு ஏற்பவரும் உண்டு. இவ்வுலகும் மனித உறவுகளும் நிலையானது அல்ல என்று நம்பத் தொடங்கும் ஒருவன் உலக வாழ்வில் மீது பற்று அறுக்க முழுமையானத் துறவுநிலையைத் தேர்ந்தெடுக்கிறான்.

11 ம் நூற்றாண்டின் துறவி பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர்.  கடல்வழி வாணிகத்தில் பெரும்பொருள் சேர்த்தவர். மனைவி சிவகலையோடும் பெரும்செல்வத்தோடும் வாழ்ந்தவர்.  “காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே” எனக் கூறிய தத்துதெடுத்த பிள்ளை மருதவாணனின் சொல்லைக்கேட்டு, பொருளின் நிலையாமையை உணர்ந்து துறவறம் பூண்டவர். சொத்துக்களையும் ஆடம்பரங்களையும் விட்டு விலகியவர். புத்தருக்கு இணையானவர்.  

உஜ்ஜயினி அரசர் பர்த்ருஹரியாருக்கு மனைவி பிங்கலை மீது காதல். தனக்குக் கிடைத்த அதிசயப்பழம் ஒன்றினை பேரன்புடன் அரசிக்குக் கொடுக்கிறார். அரசிக்கு குதிரைக்காரன்  மீது காதல், எனவே பழத்தைக் கொண்டுபோய் அவனுக்குக் கொடுக்கிறாள். குதிரைக்காரனுக்கு ஒரு தாசியின் மீது காதல், அவன் பழத்தை அவளிடம் கொடுத்து விடுகிறான். அந்த தாசி அந்தப்பழத்தை அரசனுக்கு அர்ப்பணிக்கிறாள். பர்த்ருஹரியாருக்கு அரசியைப் பற்றிய இந்த உண்மை தெரிந்தவுடன் உலகியலில் வெறுப்புற்று  துறவியாகிவிடுகிறார். பட்டினத்தார்க்கு சேவகம் செய்யும் வாழ்வைத் தேர்கிறார். பொருள் மீதான பற்றறுத்தலை விடவும் பெண் மீதான பற்றினை அறுப்பது அத்தனை எளிதல்ல. இவ்வகையான சூழ்நிலையில் துறவியானவர்கள் பலர் இன்றைக்கும் இருக்கிறார்கள்.

ஒற்றைப்புள்ளியில் குவிகிற குறிமையமான ஆணின் காமமானது, உடலெல்லாம் காதலாகப் பரவியிருக்கிற ஒரு பெண்ணை சிலசமயம் ஈடு செய்யவியலாமல் போய்விடுகிறது. வேறு சில சமயம், ஒரு பெண் தன்னிடம் நிறைவடைந்து விட்டாளென்பதை  ஆணுடைய  மனம் நம்ப மறுக்கிறது. தான் அவளை முழுமைப்படுத்தவில்லையோ எனத் தன்னையே சந்தேகிக்கிறது. இச்சூழலில் பெண் என்கிற உறவைவிட்டே ஆண் விலகிச் செல்கிறான். அதைப்போல ஒரு பெண்ணை நிறைவு செய்தோமா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இயலாமல், அவளிடமும் மனம் ஒன்றியிருக்க முடியாமல் வேறு ஒரு பெண்ணை நாடிச்செல்கிறான். ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு தாவுகிற இந்த அலைச்சல்கூட யாராவது ஒரு பெண்ணிடம் தன்னை முழுவதுமாக நிறைவுசெய்ய முனைவதுதான். ஆனால் எங்கும் தடுமாறுகிறான். காலம் முழுக்க ஒருபெண் மாற்றி இன்னொருபெண் என இப்படியே அலைந்து கொண்டிருப்பவரும் உள்ளனர், இவ்வகையான ஆணை நிறைவு செய்வதென்பது சிலசமயம் ஒரே ஒரு பெண்ணால் இயலுவதில்லை. ஒரு பெண்ணிடம் தொடங்கி அவளிடமும் அல்லது வேறு சில பெண்களிடமும் தோய்ந்து காதல் செய்கிற ஒருவன் இறுதியாக துறவை நோக்கிப்போன கதைகளும் உள்ளன.

கற்புடை மகளிர் என்று சொல்லப்படுகிற மனைவியுடன் மட்டும் உறவு வைத்துக் கொள்கிற ஆண், வாழ்கிற காலம் முழுக்க மிகப்பெரிய மாற்றங்களுக்கு தன்னை உட்படுத்திக் கொள்வதில்லை. ஆனால் தனக்கு அடங்கியே இருக்கிற பெண்ணைவிடவும் சவாலான பெண்ணை ஆண் மிகவும் விரும்புகிறான். அவள் ஆணைத் தூண்டுகிறாள். பதற்றப்படுத்துகிறாள். அவள் தன்னைவிட்டு விலகி விடுவாளோ எனப் பயப்படுகிறான். சங்ககாலத்தில் பரத்தையர் எனவும் காப்பியக்காலத்தில் கணிகையர் எனவும் சொல்லப்பட்ட பெண்கள் பக்திக்காலத்தில் வளர்ந்து நிறுவனமாகினர். தாசியர் எனப்படுகிற தேவதாசிப் பெண்கள் ஆணுக்குச் சவாலாக இருந்தார்கள். பரத்தையர், கணிகையர், தேவதாசி ஆகியோரை அடுத்தடுத்த காலத்தில் வைத்துப் பார்ப்பதை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை.
பரத்தையர் என்கிற வகைப் பெண்களை இன்றைய புரிதலின் படியான  பாலியல் தொழிலாளிகளைப் போல உடலின் இச்சையினைப் பூர்த்தி செய்பவர்களாக மட்டும் பார்க்க இயலாது. கற்புடை மகளிரை ஆணுக்குக் காத்திருப்பவளாகவும் அவனுடைய விருப்பத்திற்கு மாற்றுக்கருத்து இல்லாதவளாக வளர்த்தெடுத்த தமிழ்ச்சமூகம், பரத்தையர் வகைப்பட்ட பெண்களை பல்வேறு திறமைகளோடு உருவாக்கியது. சான்றோனாகவும், கலைகளில் தேர்ந்தவனாகவும் இருக்கிற ஆண், அவனுடைய அரசியல் சிக்கல்களை, கலைகளில் உள்ள ஈடுபாட்டினைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆள் தேவைப்பட்டிருக்கலாம். அப்படித் திறன்படைத்தவர்கள் பெண்களாகவும் இருக்க, அவளிடம் அவனுடைய பாலியல் விருப்பத்தினையும் நிறைவு செய்துகொள்கிறான். மனைவிடம் அவளை அடக்குபவனாக, வெற்றியாளனாக இருக்கும் ஆண், பரத்தையரிடம் வரும்பொழுது தோற்றவனாக உணர்வதற்கும் இடமிருக்கிறது. அவள் எதிர்த்துக் கேள்வி கேட்கிறாள், சமமாக சமர் செய்யும் அளவு அறிவில் தேர்ச்சியுடையவளாக இருக்கிறாள். அவளிடம் தோல்வியுறும் ஆண் தன்னிலை இழந்துவிடுகிறான். கோவலன் மாதவியிடம் கோபப்பட்டுப் பிரிந்த இடமும் அதுதான்.
திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் முதலியன அருளிச் செய்தவருமான அருணகிரி “மானார் கனி வாய் உகந்து சிக்கெனவே அணைந்து
கைப்பொருளே இழந்து அயர்வாயே” என்கிற வரிகளின் மூலம் நிலைத்திருக்கிறார். இவர் தன்னுடைய இளமைப் பருவத்தில் தாசியரின் உறவுக்குள் மிகையான போகத்தில் திளைத்திருந்தவர். முருகன் மேல் கொண்ட பக்தியுடன் ஒருநாள் எல்லாவற்றையும் துறந்து துறவியானார்.   

மற்ற எந்த நாடுகளையும்விட இந்தியாவில் துறவிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. உண்மையில் இவர்கள் எதையும் துறந்தவர்கள் இல்லை. அவர்கள் தங்களைத் தாங்களே தொலைக்க இயலாமல்  வேறு எங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஞானத்தை அடைவதற்கு காமமும் ஒருவழிதான், அதனால் தான் ரஜனீஷ் என்பவர் ஓஷோவாக அறியப்பட்டார். ஓஷோ தன்னுடைய “காமத்திலிருந்து கடவுளுக்கு” நூலைபற்றிச் சொன்னவை, “தந்திரா தத்துவத்தை வெளியிட்ட ஒருநாடு கஜுராஹோ, கொனார்க் போன்ற கோயில்களை உருவாக்கிய நாடு முட்டாள்தனமானதாக இருக்க முடியாது. நான் சொல்வது விளங்கிகொள்ள முடியாததாக இருக்க முடியாது. கஜுராஹோ எனது சாட்சியம். தந்திரா இலக்கியங்கள் எல்லாமே என் சாட்சியங்கள். தந்திரா போன்றவை தாக்குப்பிடித்து இருந்த நாடு இது ஒன்றுதான். உலகத்தின் எந்த நாட்டிலும் காமத்தின் ஆற்றலை ஆன்மிக ஆற்றலாக மாற்றும் முயற்சி நடைபெறவே இல்லை.”
இவ்வகையான ஆணின் துறவு  பற்றி சங்கஇலக்கியத்தில் மாற்பித்தியார் என்னும் பெண்பாற் புலவர் இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
முதல் பாடல்,

ஓவத் தன்ன இடனுடை வரைப்பிற்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்ந்த மள்ளற் கண்டிகும்-
கழைக்கண் நெடுவரை அருவியாடிக்,
கான யானை தந்த விறகின்
கடுந்தெறல் செந்தீ வேட்டுப்
புறம்தாழ் புரிசடை புலர்த்து வோனே
.”

“ஓவியம் போன்று விளங்கும் அழகிய இடத்தில், குறுகிய வளையலணிந்த மகளிரின் கைகளிலிருந்து அணிகலன்கள் கழன்று நெகிழுமாறு காதலை மூட்டிய இளைஞனைக் கண்டோம். இப்போது அவன் மூங்கில் நிறைந்த மலைச்சாரலின்கண் அருவியில் நீராடிக் காட்டிலிருந்து யானையால் கொண்டுவரப்பட்ட விறகை எரித்தாற் போன்ற செந்தீயென விளங்கும் நீண்டு தாழும் சடையை உலர்த்திக் கொண்டுள்ளானே.”
இரண்டாம் பாடல்,

“கறங்குவெள் ளருவி ஏற்றலின்  நிறம் பெயர்ந்து,
தில்லை அன்ன புல்லென் சடையோடு,
அள்இலைத் தாளி கொய்யு மோனே
இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன், முன்னே.

“ஒளி விளங்கும் அருவிநீரில் நீராடுதலால் தன்னுடைய கருமையான நிறம் மாறி, தில்லை இலை போன்று புல்லிய சடையோடு கூடியவனாய்ச் செறிந்த இலையுடைய தாளியில் தளிர் கொய்யும் இவன், முன்பு இல்லங்களில் விளங்கும் மயில் போன்ற சாயலையுடைய மகளிரைத் தன் இனிய சொல்லால் காதல் மொழியாற்றி வயப்படுத்தும் வேட்டுவனாக இருந்தவன்.”

இந்த இரண்டு பாடல்களிலும் தலைவன் குடும்பப்பொறுப்பை ஏற்று அதன்பின்பு துறவறம் ஏற்றிருக்க வாய்ப்பில்லை. உரையாசிரியர்கள் சொல்வது போல முதுமையில் துறவு என்றோ, மனைவி இறந்த பின்பான ஆணின் துறவு என்றோ இந்தப் பாடல்களை அர்த்தப்படுத்திக் கொள்ள இயலாது. ‘இழைநிலை நெகிழ்த்த’, ‘சொல்வலை வேட்டுவன்’ ஆகிய வெளிப்பாடுகள் அவனை கற்பொழுக்கத்தில் இருந்தவனாகக் காண்பிக்கவில்லை. இளமைகாலக் களவுகளின் பின்பு புலனொடுக்கத்தை நாடி துறவு ஏற்றவனாக இருக்கிறான்.

ஞான அநுபூதி பெற்று வாழ ஆண்களே பெரும்பாலும் விரும்புகின்றனர். துறவு மேற்கொண்ட எல்லோரும் ஞானத்தைக் கண்டடைந்தவர் என்று சொல்லிவிட இயலாது. இளமையில் துறவு பூண்ட ராமானுஜர் ஒருவகை என்றால் இளங்கோவடிகள் இன்னொருவகை. இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டு காப்பியங்களைப் படைத்தார். விவேகானந்தர் இன்னொரு வகை. இந்திய ஆன்மீகத்தை உலக மொழியாக ஆக்கிப்பார்க்க முனைந்தார். தன்னைக் கண்டடைந்து தன்னை நாடிவருபவர்களையும் உள்மலரச் செய்யும்  சொற்களாக உடனிருப்பது ஞானியின் செயலாக இருக்கும்.  

சாமியாராக ஆகிறவர்கள் எல்லோரும் “ஞானம்” என்கிற ஒரே ஒரு காரணத்தினால் வந்தவர்கள் அல்ல, தன்னுடைய உழைப்பை உதறி விட்டேத்தியாக இருக்க வந்தவர்கள், எந்தப்பொறுப்பையும் ஏற்க இயலாதவர்கள், கடன்பட்டு ஓடிவந்தவர்கள், மனைவியின் மீது சந்தேகம் கொண்டு வந்தவர்கள், மனைவியை நிறைவு செய்ய இயலாதவர்கள், மனைவியால் ஏமாற்றப்பட்டவர்கள், ஏதோ ஒரு சிறிய காரணத்தினால் வைராக்கியமாக குடும்பத்தை உதறியவர்கள், அனுபவித்தது “போதும்” என்று தங்களை நிறைத்துக் கொண்டவர்கள், இதனைத் தவிர கார்ப்பரேட் சாமியார்கள்.

ஒரு ஆண் எப்பொழுதெல்லாம் இல்லற வாழ்வில் சலிப்புற்று துறவுக்காக மனம் ஏங்குகிறான் என்று பார்த்தால் அதற்கு அடிப்படையாக ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்கள் இருப்பதை அறியலாம். பெரும்பாலும் அவன் உறவாக வரித்துக் கொள்கிற பெண்ணும் அவள் வழியாக உருவாகிற சந்ததியும் அதன் காரணமாகத் தொடர்கின்ற பொறுப்புகளும் அவனைப் பதற்றபடுத்தியபடி இருக்கின்றன. பலசமயங்களில் ஆணின் துறவுக்கு ஞானத்தேடலை விடவும் பொறுப்புகளிலிருந்து தப்பித்துப் போதலே உள்ளார்ந்த காரணமாக இருக்கிறது. பாம்பு சட்டை உரிவதுபோல தன்னுடைய பொறுப்புகளை கலைந்துவிட முயலுகிறான். பெண்ணுக்கு குடும்பம் சார்ந்து, அதன் மீதான பொறுப்புக்கள் சார்ந்து சிக்கல் ஒருபோதும் இல்லை. அவள் பொறுப்புக்களை உவந்து ஏற்கிறாள்.

 புறம்: 251,252