Wednesday, 8 March 2017

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..


32.மாற்றோக்கத்து நப்பசலையார்:

ஒரு பெண் அப்படியும் வாழ்கிறாள்:

“துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்... ”

“மனைவியின் உடலுக்கு நோவு என்றாலோ, பிள்ளைப்பேறுக்காக  அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அதற்கும்  தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல கணவன் ஒதுங்கி நிற்க, அந்தப்பெண்ணின் உறவினர்களோ அல்லது பக்கத்துவீட்டுப் பெண்ணோ உடனிருப்பார்கள். கணவனின் உடலுக்கு ஏதாவது ஆகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்பொழுது  பெரும்பாலும் மனைவியே உடனிருப்பாள். அவனுடைய உயிருக்காக பிராத்தனை செய்து கொண்டு, அவனுடைய குரல் கேட்கத்தவித்து, அவனுடைய சிறு அசைவுக்காக இவள் கண் மூடாமல் காத்திருப்பாள். மரணத்தின் அண்மையிலிருக்கும் கணவனை தன்னுடைய அண்மைக்குத் திருப்புகிற முழுமுயற்சியுடன் அவளிருப்பாள்.”
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கு.ப.ரா. என்று பரவலாக அறியப்பட்ட கு.ப. ராஜகோபாலன் தமிழ் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்கவர். இவருடைய “விடியுமா?”என்கிற தலைப்பில் உள்ள கதையானது, “சிவராமையர் - டேஞ்சரஸ்”  எனத் தொடங்குகிறது. அதிலிருந்து முடிவுவரையில் நிமித்தங்கள், உரையாடல்கள், காட்சிகள்  யாவும் சிவராமையர் மனைவியின் நோக்குநிலையிலிருந்தே விவரிக்கப்பட்டுள்ளது.

தந்தியொன்று’ சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியிலிருந்து கும்பகோணத்திலிருக்கும் சிவராமையரின் மனைவி குஞ்சம்மாவிற்கு வருகிறது.  சிவராமையருக்கு என்னாகிற்று என்பதை ஒற்றைத் தந்தியின் இரண்டு வார்த்தைகளில் அறிந்துகொள்ள இயலாமல் கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு ரயிலில் கிளம்புகிறவர்களின் மனப்போராட்டத்தைச் சொல்கிறது கதை. நிமித்தங்கள் வழியாக தவறாக எதுவும் நிகழ்ந்துவிடாமல் சாதகமாக இருக்கவேண்டும் என்கிற நம்பிக்கைகள் மற்றும் யூகங்கள் எனக் கதை அமைந்திருக்கிறது.  மாலை ரயிலில் குஞ்சம்மாவையும் தம்பியையும் வழியனுப்பும் அம்மா மஞ்சள் துணியில் காணிக்கை முடிந்து வைக்கிறாள். குஞ்சம்மாளுக்கு மஞ்சள் கிழங்கு, குங்குமம், புஷ்பம், வெற்றிலைப்பாக்கு க்ஷேமத் தண்டுலம் எல்லாம் மறந்து போகாமல் மடிநிறையக் கட்டிக்கொடுக்கிறாள். அம்மா வாசலில் போய்ச் சகுனம் பார்க்கிறாள். திவ்யமான சகுனம். ‘ஸ்வாமிக்கு நமஸ்காரம் பண்ணு! என குஞ்சம்மாவை நமஸ்காரம் செய்ய வைத்து, காவேரியிலிருந்து ஜலம் எடுத்துக்கொண்டு அடுத்தவீட்டுச் சுந்தரி எதிரே வருகிற சகுனம் நல்லதென்று சொல்லி வழியனுப்புகிறாள்.

ரயில் பயணத்திலும் நகரத்தார் இனத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருத்தி தன் பக்கத்திலிருந்த ஓலைப் பெட்டியிலிருந்து கொஞ்சம் மல்லிகைப்பூ எடுத்துக் குஞ்சம்மாளுக்குக் கொடுக்க இவள் மெய்சிலிர்த்துப் போகிறாள். வெகு ஆவலுடன் அந்தப்பூவை வாங்கி ஜாக்கிரதையாகத் தலையில் வைத்துக்கொள்கிறாள். அம்பாளே அந்த உருவத்தில் வந்து தனக்குப் பூவைக் கொடுத்து, ‘கவலைப்படாதே! உன் பூவிற்கு ஒருநாளும் குறைவில்லை!’ என்று சொன்னதுபோல எண்ணிக்கொள்கிறாள். தவிர, “மகாலட்சுமி போலே இருக்கீங்கம்மா! ஒங்களுக்கு ஒண்ணும் கொறவு வராது!” என்று அவள் சொன்னதைத் தெய்வவாக்காக எடுத்துக்கொண்டு விடுகிறாள் குஞ்சம்மாள். இவ்விதமாக கதையின் போக்கு முழுக்கவே சொல்லாகவும் செயலாகவும் தனக்குச் சாதகமான நிமித்தங்களை தேர்ந்துகொண்டே இருக்கிறது. இவையாவும் கணவனின் உயிர் பற்றிய பதற்றத்துடன் தொடர்புடையதாகவும் அவருக்கு ஒன்றும் நேர்ந்திருக்கக்கூடாது என்பதாகவும் இருந்தாலும் குஞ்சம்மா தம்பியிடம் தங்கள் குடும்ப வாழ்வுபற்றிப் பகிர்கிற ஒருபகுதி இந்தக் கதையில் வருகிறது. “அம்பு, ஒங்க அத்திம்பேருக்கு வாக்கப்பட்டு நான் என்ன சுகத்தைக் கண்டேன்?’ என்கிறாள் குஞ்சம்மாள்.
அவளுடைய கண்களில் ஜலம் மளமளவென்று பெருகிற்று.
‘என்னிக்கும் பிடிவாதம், என்னிக்கும் சண்டை, நான் அழாத நாள் உண்டா? - என் வாழ்வே அழுகையாக-’ என்று உணர்ச்சி வேகத்தில் ஆரம்பித்தவள் சட்டென்று நிறுத்திக்கொண்டாள்.‘எதிலாவது நான் சொன்ன பேச்சைக் கேட்டது உண்டா? எப்படியோ ஆயுசுடன் இருந்தால் போதுமென்று தோன்றிவிட்டது, போனதடவை உடம்புக்கு வந்தபோது!’ என குஞ்சம்மாள் சொன்னபிறகு இருவரும் மௌனமாகவும் அதேசமயம் கலவரப்பட்ட மனதுடனும் மீதிப்பயணத்தைத் தொடர்கிறார்கள்.

ஒரு பெண் தன்னுடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் நிரூபணங்களை எதிர்பார்க்கிறவளாக இருக்கிறாள். குறிப்பாக அவனுடைய அன்பை அவளிடம் நிரூபித்துக் கொண்டே இருக்க விரும்புகிறாள். அதனைப் போலவே அவனுடைய மரணத்தையும் அவள் அத்தனை எளிதில் நம்பிவிடுவதில்லை.
பிரியமானவரின் மரணத்தை ஒருபோதும் ஏற்றுகொள்ளவே முடியாது. மரணம் பொய்க்கிற கணம் அதுதான். சிவராமையர் இறந்துவிட்டார் என ஜெனரல் மருத்துவமனையின் குமாஸ்தா சொன்ன போதிலும் அவர் உடலைப் பார்க்கும்வரை குஞ்சம்மா நம்பவில்லை.

கதை இப்படி முடிகிறது, “கொஞ்சநேரம் கழித்துப் பிரேதத்தைப் பெற்றுக் கொண்டோம். அப்பொழுது, அதைப் பார்த்தவுடன், நிச்சயமாயிற்று!
ஒருவழியாக மனத்திலிருந்த பயம் தீர்ந்தது; திகில் தீர்ந்தது.
பிறகு-? விடிந்துவிட்டது.” சிவராமையரோடு குஞ்சம்மாவின் வாழ்வு அத்தனை சுகப்படவில்லை. ஆனாலும் அவர் உயிரோடு இருக்கவேண்டும் நல்லபடியாக இருக்கவேண்டும் என்பது அவளுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தப் பதற்றத்துடன்  சிவராமையருக்கு ஒன்றும் ஆகியிருக்கக்கூடாது என்று நினைத்துக் கொள்கிறாள். உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்கிற அவஸ்தைக்கு விடிவு வந்துவிட்டதாகவும், சிவராமையரோடு வாழ்கிற துன்பகரமான வாழ்வுக்கு விடிவு வந்துவிட்டதாகவும் மாற்றுச்சிந்தனையை முன்னெடுப்பதாக இந்தக்கதையின் முடிவு அமைந்திருக்கிறது. தலைகொள்ளாமல் பூ வைத்துக் கொள்வது குஞ்சம்மாவுக்குப் பிரியமான செயல். ஆனால் அவள் மல்லிகையைச்  சூடிக்கொள்வதே கணவனின் அடையாளமாகச்  சொல்லப்படுகிறது. இவ்விதமாக கதையில் அமைந்துள்ள உரையாடல்கள் மற்றும் நிமித்தங்கள், அனைத்துமே பெண்ணின் மஞ்சள், குங்குமம் சார்ந்தவையாக இருக்கின்றன.

பிணக்குகள், பூசல்கள் என எந்நாளும் குடும்ப உறவில் விரிசலை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கணவன் சட்டென ஒருநாள் இறந்துவிட்டால்,  அவனுடைய மனைவிக்கு அது சிறியஅளவிலான நிம்மதியை அளிக்கும். இவ்வகையான மரபு மீறலான சிந்தனையை முன்வைக்கிறது கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினியின் “முத்தங்கள் தீர்ந்துவிட்டன” என்கிற தலைப்பிலான கவிதை ஒன்று.  

“மாலை ஊதுபத்தி
இன்ன பிறவாய்க்
கனம் சொன்னது கணம்
கைப்பிடித்து அரவணைத்து
அவளுக்குள் கடத்தினேன்
ஆறுதலை

அவளின் மூச்சில்
வெளிப்பட்டது இரகசியமாய்
சம்பிரமாயச் சோகம் தாண்டிய
நிம்மதி அதிர்வு

ஒற்றையாய்ச் சுவாசிக்கும்
பெண்ணிடமெல்லாம் வீசும்
விடுதலை வாசம்
இவளின் நாடியிலும்
அரங்கேறியபடி

அழுவதற்கு மட்டுமல்ல
அவனின் அது.”

கோவில்களில் மஞ்சள் தோய்ந்த துணியில் முடிந்து வைக்கப்படுகிற ஒற்றை நாணயத்தில் பெரும்பாலும் ஒரு ஆணின் உயிரும், உடல் நலனுமே இருக்கின்றன. கணவனாக இருப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதெல்லாம் ஒரு பொருட்டல்ல, மனைவியின் மாங்கல்யம், மஞ்சள், குங்குமமாக அவன்தான் இருக்கிறான் என்பதால் அவன் திடமாக இருக்கவேண்டும் என்பது ஒருபெண் குழந்தை பிறந்து வளரும்பொழுதே உணர்த்தப்படுகிறது. மாங்கல்ய பூஜையும் அதுசார்ந்த வாழ்வியல் நெறியும் அவளுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகிறது. அனுசுயா, அருந்ததி, சீதை, த்ரௌபதி, தாரை, மண்டோதரி, காந்தாரி, குந்தி என நம்முடைய புராணக்கதைகள் பலதும் பெண்ணுக்கு இவ்விதமான அறிவுரை சொல்வதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளன.

நாகேஸ்வரராவ், வரலட்சுமி நடித்த “சத்தியவான் சாவித்ரி” திரைப்படத்தில் சாவித்ரி தன்னுடைய பால்யம் மாறாத பருவத்தில் அனுசுயா கதையை தெரிந்து கொள்கிறாள்.  அத்ரி முனிவரின் மனைவி அனுசுயா, “சொப்பன எண்ணத்திலும், சுத்த இதயத்திலும், பதிபாதங்களைப் பூசிக்கிறவள்/ மனதாலும் நிர்மல வாக்காலும் பதிசேவை புரிய நினைக்கிறவள்/ பதியை பெருங்கடவுளாக பாவிக்கிறவள்” என்றுகூறி கூழாங்கற்களை வேகவைக்கிற, மும்மூர்த்திகளையும் தன்னுடைய கற்பின் திறனால் குழந்தைகளாக்கித் தொட்டியில் போட்டுத் தாலாட்டுகிற கதையில் சாவித்திரி ஈர்க்கப்படுகிறாள்.  அனுசுயா போல தானும் பதிவிரதையாக வாழ அந்தப்பருவத்தில் முடிவு செய்கிறாள். வளர்ந்து பெரியவளாகி சத்தியவானைத் திருமணம் செய்துகொண்ட பிறகு பாம்பு தீண்டி அவனுடைய உயிர்பிரிகிறது. சத்தியவானின் உயிரை எடுத்துகொண்டு எமலோகம் செல்கிற எமனைத் தொடர்ந்து சென்று தன் கணவனுடைய உயிரை மீட்டுத் திரும்புகிறாள் சாவித்ரி. இந்தத் திரைப்படம் பார்த்து தங்களுடைய கணவன் உயிரை இவ்விதமாக மீட்டுவிடலாம் என நம்பிய தலைமுறையின் வழிவந்தவர்களாகவே இன்றும் பெண்கள் இருக்கின்றனர்.

ஜாதகம் பார்த்துத் திருமணம் செய்யும் பொழுது மாங்கல்ய பலம் எப்படியிருக்கிறது எனக் கேட்டுக்கொண்ட பின்புதான் அந்தத் திருமணத்தை முடிவு செய்கின்றனர். இளம்வயதில் ஒரு பெண் தன்னுடைய கணவனை இழப்பது என்பதில் முதலாவது அவளுடைய சமூக அந்தஸ்து பறிபோய்விடுகிறது. இன்றைக்கு பெண்களுக்கு மறுமணம் போன்றவை இயல்பாகிவிட்டது. இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிற பெண்ணுக்கு அவள் ஏதோ தவறு செய்து விட்டதுபோல குற்றஉணர்ச்சி அல்லது தாழ்வு மனப்பான்மை வலிந்து உருவாக்கப்படுகிறது. மறுமணம் செய்கிற ஆணைப் பற்றி அவளுக்காக அவன் பெரிய தியாகம் செய்துவிட்டதாக நினைக்க வைத்துவிடுகிறார்கள். இது ஒருபக்கம் இருக்க, கணவனை இழந்துவிட்ட பெண்ணுக்கு உடனடி இழப்பான அவளது சமூக அந்தஸ்துக்கு இணையான பொருளாதார நிலையும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இவையிரண்டு காரணங்கள் தவிர அடிப்படையிலேயே பெண்ணுக்கு கணவன்தான் சகலமும் என்பதை முற்றிலும் நம்புகிறவளாக தன்னிலும் அதிகமாக அவனை நேசிக்கிறவளாக இருக்கிறாள்.

பெண்களுக்குக் கல்வியும் சிறிதளவு சமூகமாற்றமும் ஏற்பட்டிருக்கும் இந்தக்காலகட்டத்தில் கணவனின் உயிர்பிரிந்த நிலையில், அடுத்து ஆகவேண்டியதை அவளே சற்று திடமான மனதுடன் செய்ய முனைகிற பெண்கள் இருக்கிறார்கள். அத்தகைய திடமான பெண்ணும், எதிர்பாராத விதமாக நோய்வாய் பட்ட கணவனை மருத்துவமும் கைவிரிக்கும் பொழுது . தளர்வுற்ற நிலைக்கு அவளும் ஏதோவொரு கணத்தில்  நகர்ந்திருப்பாள்.  அப்போது அவளுடைய கடைசி நம்பிக்கையாக ‘மஞ்சள் துணியில் முடிந்திருந்த ஒற்றை நாணயத்துடன் அவன் உயிர் பாதுகாக்கப்பட்டிருக்கிறதான’ நம்பிக்கையை கடவுளிடம் வைப்பாள். கணவனின் உயிரை இவளது கடைசிநேர சிறுநம்பிக்கைகளாவது காத்துவிடாதா என்று ஏங்கித் துயருருவாள். அன்பு எத்தனை திடமான பெண்ணையும் தளர்வுறச் செய்துவிடுகிறது. அத்தகைய பெண்ணைப் பற்றி கவிஞர் பத்மஜா நாராயணனின் கவிதை பேசுகிறது.

“உதடு பிதுக்கியபின்
ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும்?
அருகில் கூட வரப்பயந்து
தூரத்திலிருந்தே சாரி சொல்லி
விரைகின்றனர் மருத்துவர்
வெளியில் நிற்கும் உடன்பிறப்புகள் ஓடிவர
உறைந்து நிற்கிறது மனம்
வீட்டு உரிமையாளர் எண்ணழுத்தி
உடலைக் கொண்டுவர அனுமதி கேட்கும் என்னை
விசித்திரமாகப் பார்ப்பதுகூடத்
தெரியவில்லை
அணைத்து வெளியேற்றப்படும் போது
கையில் முடித்து வைத்த
காசுடன் கூடிய மஞ்சள் துணியை தூர
எறிகிறேன்
அதுவரை அதில் முடிந்து வைக்கப்பட்டிருந்த
அவனுயிர்
என்னிலிருந்து அவிழ்ந்து விலகி உருண்டு பறக்கிறது
விசும்பினோடு ஒன்றாகிறது
என் கண்ணீர் துளி.“

மனைவியின் உடலுக்கு நோவு என்றாலோ, பிள்ளைப்பேறுக்காக  அந்தப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலோ அதற்கும்  தனக்கும் சம்பந்தம் இல்லாததுபோல கணவன் ஒதுங்கி நிற்க, அந்தப் பெண்ணின் உறவினர்களோ அல்லது பக்கத்துவீட்டுப் பெண்ணோ உடனிருப்பார்கள். கணவனின் உடலுக்கு ஏதாவது ஆகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்பொழுது  பெரும்பாலும் மனைவியே உடனிருப்பாள். அவனுடைய உயிருக்காக பிராத்தனை செய்து கொண்டிருப்பாள். அவனுடைய அண்மைக்காக அல்லது ஒரு குரலுக்காக ஏங்கித் தவித்து நினைவற்றுக் கிடக்கும் கணவனுக்கருகில் அவனுடைய சிறு அசைவுக்காக இவள் கண் மூடாமல் காத்திருப்பாள்.  மரணத்தின் அண்மையிலிருக்கும் கணவனை தன்னுடைய அண்மைக்குத் திருப்புகிற முழுமுயற்சியுடன் அந்தப்பெண் இருப்பாள். அவனை இழந்துவிட்டால் அதன்பின்பு அவள் உயிர்வாழ விரும்புவதில்லை.

மாற்றோக்கத்து நப்பசலையாரின் புறநானூற்றுப் பாடலில் போர்க்களத்தில் விழுப்புண் அடைந்தவனை காப்பாற்ற இயலாத அவனுடைய மனைவி அவன் இறப்புக்குப் பின்பு தானும் இறந்துவிடுவதாக பாணனிடமும் விறலியிடமும் கூறுவதாக அமைந்திருக்கும்.

“என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்;
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண ! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல் ? அளியிர்; நுமக்கும்
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே ! யானும்
மண்ணுறு மழித்தலைத் , தெண்நீர் வாரத்,
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
வழிநினைந்து இருத்தல், அதனினும் அரிதே!”

“என்னுடைய தலைவனுடைய மார்பில் உண்டான புண் மிகக்கடுமையாக உள்ளது. நடுப்பகலில் வண்டுகள் மொய்க்கின்றன. வீட்டில் வைத்த விளக்கும் தொடர்ந்து  நின்றெரியாமல் அடிக்கடி அணைகிறது. பலநாள் அவனருகே இருந்து விழித்த என் கண்கள் தாமாகவே மூடுகின்றன. உறக்கத்தை விரும்புகின்றன. கூகையும் அச்சம்தரும் வகையில் கூவுகின்றது. நெற்கதிர்களையும் நீரையும் பெய்து இவன் உயிர் பிழைத்துக் கொள்வான் என்று சொன்ன முதுபெண்டிரின் சொல்லும் பயன்பெறவில்லை. துடி கொட்டுபவனே, பாணனே, பாடுகின்ற விறலியே, இனி நீங்கள் என்ன ஆவீர்களோ, இரங்கத்தக்கவர் ஆனீர். இனியும் நீங்கள் இங்கே இருந்து வாழ்தல் என்பது அரிது.  நானும், இவ்வுலகில் தலைமயிரைக் களைந்து, முடியிழந்த நிலையில் தண்ணீர் புறத்தேத் தெறிக்க அல்லி அரிசியை உண்டு, அணிகலன்களை இழந்து, கைம்மை நோன்பு கொண்டு வாழ்தல் என்பது அரிது. என் தலைவன் இறப்புக்குப் பின் நானும் உயிர்விடுவேன். நீவிர் வேறு இடம் சென்று வாழ்வீராக. “

தலைவன் இருக்கும் வரையிலேயே அவனோடு கூடலும் ஊடலும் இருக்கும். தலைவனும் தலைவியும் கூடியிருப்பதில் மகிழ்கிற பாணனும் விறலியரும் அவர்கள் ஊடல் கொள்ளும்பொழுது சமாதானம் செய்து இருவரையும் இணைத்து வைப்பார்கள். தலைவன் இறந்துவிட்டால் தானும் இறந்து விடுவதாகவும் அதன்பிறகு பாணனுக்கும் விறலியருக்கும் அங்கே வேலையிருக்காது என்பதால் வேறிடம் செல்லச் சொல்கிறாள்.

தனக்கு நேர்கிற அவமானங்களை, இழப்புக்களை, துயரங்களைத் தாங்கிக் கொண்டு  ஏதோ காரணங்களால் உயிர்வாழ்கிறவர்களைப் பார்க்கும்போது தனக்கு அப்படியொரு ஒரு நிலை வந்தால் வாழவே கூடாது என நினைப்போம். அப்படித்தான் இந்தத் தலைவியும் அல்லியரிசி உண்டு,  தலைமழித்து உயிர்வாழ அனைவரின் பார்வையிலும் மதிப்புக் குறைவுற்றவளாக வாழ விரும்பவில்லை. ஒருவேளை, அவள் சொன்னதுபோல தலைவனோடு சேர்ந்து இறந்துபோகாவிடினும், குழந்தைகளுக்காக தொடர்ந்து வாழநேரிடினும் அதில் அவளுக்குத் தனிப்பட்ட சுவையேதும் இருக்கப்போவதில்லை. கணவனை இழந்தபின்பு அவளுக்குச் செய்யப்படுகிற சடங்குகளும் நடைமுறையும் இன்றளவும் அவளுக்குக் காயங்களை ஏற்படுத்தக் கூடியதாகவே இருக்கின்றன. இச்சூழலைப் பேசுகிற ராஜசுந்தரராஜன் கவிதையொன்று உள்ளது.  

“அப்படி ஒரு நிலைமை
வரும் என்றால் அக்கணமே
வாழோம் என்றிருந்தோம்

வந்தது.
அப்படியும் வாழ்கிறோம்.

நம்மோடு நாம் காண
இத்தென்னைகள்
தம் மேனி வடுக்கள் தாங்கி.”

இக்கவிதையில் சொல்கிற தென்னையில்கூட துயரின் அடையாளம்  கண்களுக்குத் தெரியும். ஆனால் கணவன் இறந்த பின்பான பெண்ணின் தனித்த வாழ்வென்பது யாரொருவர் கண்களுக்குப் புலனாகாத வடுக்களுடன் இருக்கும்.


இவர் எழுதிய பாடல்களாக கிடைத்திருப்பவை மொத்தம்: 8. நற்றிணை: 304 புறநானூறு:37,39,126,174,226,280,383

பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..



31. மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்: 






ஒரு பெண் துணிவுடன் இருக்கிறாள்:

“யாரையோ என்று இகந்து நின்றதுவே...”

“கணவனாகவும் மனைவியாக திருமண உறவிற்குள் வருவதற்கு முன்பாக இருவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும். அந்த வாழ்க்கையின்  அகச் செயல்பாடுகள் ஒரு ஆணிடம் ஓரளவு வெளிப்படையாகவும் பெண்ணிடம் இரகசியமாகவும் மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் பிறரிடம் பகிர்ந்துகொள்கிற ஓர் அந்தரங்கம், அதில் அவனோடு பங்கெடுத்த பெண்ணின் வாழ்வில் எப்போதும் இரகசியமாக இருக்கிறது.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருமணமான புதிதிலேயே, ஆண் தனது முந்தையக் காதல் பற்றியும் தன்னுடைய பெண் சினேகிதிகள் பற்றியும்  மனைவியிடம்  பகிர்ந்து கொள்கிறான். அவனது வளரிளம் பருவத்தின் குறும்புத்தனங்கள் பற்றியும்  மனைவியிடம் சொல்லிக்கொள்கிறான். இவையெல்லாம் ஆணுக்கு ஒருவகையில் பெருமிதமாக இருக்கிறது. ஆனால் பெண்ணுக்கு பால்யம் உண்டு என்பதையும் அவளுக்கும் வளரிளம் பருவத்தில்  இரகசியங்கள் உண்டு என்பதையும் அவன் உணர்வதேயில்லை. பெண் எப்பொழுதும் தன்னுடைய வாழ்நாளில் ஒருபோதும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சில விஷயங்களுடன் வாழ்ந்து மடிகிறாள். ஒரு பெண் தன் வாழ்நாள் முழுக்க இரகசியங்களைச் சுமந்து கொண்டிருப்பதற்குத்தான் அதிகமான மனஉறுதி தேவைப்படுகிறது.

ஒருவேளை அவளின் இரகசியத்தைப் பற்றி தெரிந்துகொள்ள நேர்கையில் ஆணின் மனம் என்னவாக இருக்கும். அறிந்துகொண்ட  தகவல்களின் பின்னே அலைகிறவனாகவும் அதனால் சலனமடைகிறவனாகவும் ஆகிவிடுகிறான். ஆணுடைய இரகசியத்தை அறிந்துகொண்ட பெண் அத்தனை சலனமடைவதில்லை. ஆனால் ஆணிடம் ஏதோ இரகசியமிருக்கிறது என நினைக்கிற பெண் பதற்றமுடையவளாகவே இருக்கிறாள். உண்மையில் இருவருக்குமே தனித்தனியாக அந்தரங்கமான சில விஷயங்கள் இருக்கத்தான் செய்யுமென்பதை இருவருமே ஏற்றுக்கொள்வது உறவுக்கு அவசியமானது.

மிகவும் நெருக்கமான கணவன் மனைவியாக வாழ்பவர்களுக்கு மத்தியில்கூட சிறிய இடைவெளி இருக்கும். இதுதான் அவர்களுக்கிடையே மனநெருக்கத்தை உருவாக்குவதாகவும் அமைந்திருக்கும். இடைவெளியென்பது ஒளிவுமறைவான வாழ்க்கை என்பதல்ல. இது அவரவர்க்கான அந்தரங்கம். ஒருவரின்  அந்தரங்கம் இன்னொருவரின் மனதைப் பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்வதே இங்கே முக்கியமானதாகிறது. அந்தரங்கம் என்பதுதான்  இரகசியமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.

இச்சூழலைப்பற்றி கவிஞர் லாவண்யா சுந்தரராஜனின் கவிதையொன்று பேசுகிறது.

"நீ
என்னிடம் அறிந்திருக்கும் ரகசியங்களினும்
அறியாத ரகசியங்கள்
அருவருக்கத் தக்கவையாக இருக்கக்கூடும்
உன்னிடமும் அப்படி சில இருக்கலாம்

அதீத பிரியத்தின் பொருட்டோ
அளவற்ற வெறுப்பின் பொருட்டோ
என் ரகசியவெளிக்குள்
எல்லைமீறி நுழைய வேண்டாமென்று
கேட்டுக்கொள்கிறேன்

இருளின் இவ்வுறவு
சிதறும் ஒளிவெள்ளத்தில்
உனக்கும் எனக்கும்
ஆனந்ததைவிட
அதிர்ச்சியைத் தரக்கூடும்."

கணவனாகவும் மனைவியாக திருமண உறவிற்குள் வருவதற்கு முன்பாக இருவருக்குமே தனிப்பட்ட வாழ்க்கை இருந்திருக்கும். அந்த வாழ்க்கையின்  அகச் செயல்பாடுகள் ஒரு ஆணிடம் ஓரளவு வெளிப்படையாகவும் பெண்ணிடம் இரகசியமாகவும் மாறிவிடுகிறது. ஒரு கட்டத்தில் ஆண் பிறரிடம் பகிர்ந்துகொள்கிற ஓர் அந்தரங்கம், அதில் அவனோடு பங்கெடுத்த பெண்ணின் வாழ்வில் எப்போதும் இரகசியமாக இருக்கிறது.

ஆண் தன்னுடைய அந்தரங்கத்தை பெருமையாகப் பகிர்ந்துகொள்கிற
சூழலில் மனைவியின் நிலையைப்பற்றிப் பேசுகிற கவிஞர் அகிலா கிருஷ்ணமூர்த்தியின் கவிதையொன்று உள்ளது.

“காதலியின் பெயரை
சரடுபோல் இணைத்து
தெய்வீகக் காதலென
செருக்கோடு சலம்பிக் கொண்டிருந்தான்
அவன் கணவன் ஆனதே
காதலன் பொருட்டு என்பதை
வந்தவள் பிதற்றப்போவதில்லை
பெயர் உணர்த்தும் தெய்வீகம்.”

ஒரு பெண் தனக்கு மட்டுமே சொந்தம் என ஆணும், அந்த ஆண் இதற்கு முன்பு எப்படியிருந்தாலும் பரவாயில்லை,  இனிமேல்  தனக்கு மட்டுமே சொந்தம் என பெண்ணும் நினைப்பதால் ஒருவரை ஒருவர் ஆக்கிரமிக்கத் தொடங்குகின்றனர். அன்புமிகுதியில் இருவருக்குமிடையே இருக்கிற கண்களுக்குப் புலப்படாத மெல்லிய கோட்டினை அழிக்க முயலுகின்றனர். இதன் விளைவாக ஒருவரின்  இரகசியத்தைத் திறந்து பார்க்கும் ஆர்வம் இயல்பாக வெளிப்படத் தொடங்கிவிடுகிறது. இப்படித்தேடிக் கண்டடைகிற இரகசியங்கள் எப்போதுமே இனிமையானதாக இருப்பதில்லை. ஒருவரைப் பற்றி ஒருவர்  அதிர்ச்சியூட்டும் நினைவுகளுக்குள் கொண்டு செல்வதாகவே முடிவடையும்.

குடும்பநல நீதிமன்றங்களில் தீர்வுக்குக் காத்திருக்கும் பெரும்பாலான குடும்பப் பிரச்சனைகளில் மனைவியைச் சந்தேகிக்கும் கணவனும்,  கணவனை சந்தேகிக்கும் மனைவியும்  என்கிற வழக்குகள்தான் அதிகம்.  ஆனால் கணவன் மனைவிக்கிடையே ஏற்படுகிற  சந்தேகம் சட்டங்களினாலும் தீர்ப்புகளினாலும் ஒருபோதும் தீர்க்க இயலாததாகவே  இருக்கிறது.

நிலக்கோட்டை நீதிமன்றத்திலுள்ள மக்கள் சமரசத் தீர்வு மையத்தில்  சிலவருடங்கள் கௌரவ ஆலோசனைக்குழு உறுப்பினராக இருந்தேன். ஒரு விவாகரத்துப் பிரச்சனை, அந்தப் பெண்ணுக்கு  நடத்தை சரியில்லை, வேறு ஒருவரோடு தொடர்பிருக்கிறது எனக் குற்றம் சொல்லிய கணவனும், அதனை மறுத்த பெண்ணும் என்பதுதான் வழக்கு. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்து வாழ்வது என்கிற முடிவுக்கு வந்தனர். ஆனால் மூன்று வயதேயான  ஆண் குழந்தைக்காக இருவருமே போராடினார்கள். ஒருகட்டத்தில் அந்தப்பெண், “இந்தக்குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவேயில்லையெனச் “உரக்கச் சொன்னாள். அங்கிருந்த அனைவரும் ஒருகணம் அதிர்ந்து போயினர்.  “இந்தாளுக்குப் பொறந்திருந்தாத்தானே இவனிடம் புள்ளையக் கொடுக்கணும், இது இவனுக்குப் பிறக்கவேயில்லை” என மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

அதன்பிறகு அந்தப்பெண்ணைத்  தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினேன். அப்போது அவர், தன்னுடைய  கணவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனாலேயே தன்னை  சந்தேகித்து அடிப்பதாகவும் கூறி அழுதபடி, நான் எதிர்பார்க்காத ஒருகணத்தில் தன்னுடைய ஆடைகளைக் கலைந்து அந்தரங்க உறுப்புகளின் காயங்களைக் காட்டத் தொடங்கிவிட்டார். ஒருகணம் நான் உடல்பதறிவிட்டேன். அந்தப் பெண்ணின் ஆடைக்குள்ளே உடல்முழுக்க  சூடுவைத்த காயங்களும் தழும்புகளும் மட்டுமே இருந்தன. “தப்பு செய்றது அவன், ஆனா என்னைத்தான் அவன் குற்றம் சொல்கிறான், அவனை எப்படி சும்மா விடறது அதான், ஆனது ஆச்சு புள்ளையே அவனுக்குப் பொறக்கலன்னு பொய் சொன்னேன், இந்தப் பொய்னால வழக்கு அவனுக்கு சாதகமா திரும்பிருனும் தெரியும். ஆனா பத்து பேர் முன்னாடி புள்ள அவனதில்லன்னு சொல்றது அவனுக்கு நான் கொடுக்கிற தண்டணை” எனச் சொல்லி அந்தப்பெண் கதறியழ ஆரம்பித்துவிட்டார். ஒரு ஆணுக்கு அவனுடைய குழந்தையை அவனுக்குப் பிறக்கவில்லை என அவனுடைய மனைவியே சொல்வதுபோல அவமானமானது வேறு ஒன்றும் இல்லை.  

பெண்களுக்குச் சாதகமாக  பல சட்டங்கள் இருந்தபோதிலும் நீதிமன்றத்திற்கு வருவதற்கு பெண்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்கான  காரணங்கள்  மிக எளிமையானவை, ஒன்று, பொருளாதார ரீதியாக அந்தப்பெண் ஆணைச் சார்ந்தவளாக இருக்கிறாள். இரண்டாவது, ஆணை எதிர்த்துக்கொண்டு இந்த சமூகத்தில் ஒரு பெண் வாழவே முடியாது என பெண் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறாள்.  இவ்விதமான  சமூகச்சூழலைப் புரிந்துகொண்டிருக்கும் நிலையிலும் ஒருபெண் நீதிமன்றம் வருகிறாள் என்றால் அவள் அத்தனை மன அழுத்தத்தில் இருக்கிறாள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.  மேலும் நீதிமன்றங்களில் நடைமுறைகளும் அவளை அலைக்கழிப்பதாகவே இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து  மணவிலக்குப் பெற்ற பிறகான பெண்ணின் வாழ்வு பெரும்பாலும் நிறைவுறாமலேயே அமைந்துவிடுகிறது. இதற்குப் பயந்துதான் பெண் தனக்கான குரலற்றுப் போகிறாள்.

அடிப்படையில் பெண் தனக்காக பேச இயலாது போனாலும் தன்னுணர்ச்சிமிக்க குரலெடுக்கும் இதுபோன்ற பெண்களையும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அந்தப்பெண்ணின் உடல் காயங்களையும் விடவும்  “இந்தக் குழந்தை இந்தாளுக்குப் பிறக்கவில்லை” என்று நீதிமன்றமே திகைக்கும் அளவுக்குக் கத்தியதுதான் அவரைப்போன்ற குரலற்றுப்போன பல பெண்களுக்கானதாகப் பார்க்கிறேன்.
எல்லோரும் திகைக்கும்படியாக பேசிய அந்தப் பெண்ணின் குரல் அவளுடையது  மட்டுமில்லை. சங்கப்பெண்பாற் புலவர் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையாரின் குரலாகவும் பார்க்கிறேன். பரத்தையர் வீடு சென்று திரும்பிவந்த தலைவனை “என்னை நெருங்கி அணைத்துக்கொள்ள நீ யார்?” எனக்கேட்கும் ஒரு தலைவியை நற்றிணைப் பாடலில் அடையாளம் காட்டியுள்ளார்.
“நகுகம் வாராய் பாண! பகுவாய் 
தேர்நடை பயிற்றும் தேமொழிப் புதல்வன்
 
பூநாறு செவ்வாய் சிதைத்த சாந்தமொடு
 
காமர் நெஞ்சம் துரப்ப யாம்தன்
 
முயங்கல் விருப்பொடு குறுகினேமாகப்
 
பிறை வனப்பு உற்ற மாசுஅறு திருநுதல்
 
நாறுஇருங் கதுப்பின்எம் காதலி வேறுஉணர்ந்து
 
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ
 

யாரையோ என்று இகந்து நின்றதுவே!”

இந்தப்பாடல், “பாணனே, நகையாடிக் களிக்கலாம் வருவாயாக” எனத் தலைவன் பாணனை அழைத்து, நாடகப்போக்கில் துவங்கி எழுதப்பட்டுள்ளது. பரத்தையர் உறவிலே மகிழ்ந்திருக்கும் தலைவன் தற்செயலாக தலைவி வசிக்கிற தெருவழியே வர நேர்கிறது. தலைவனின் மகன் தெருவில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறான். தன்னுடைய மகனைக் கண்ட மகிழ்வில் அவனை அணைத்துக்கொள்கிறான். அதனால் தலைவியின் நினைவு மேலெழ, மகனைத் தூக்கிக்கொண்டு தன்னுடைய வீட்டிற்குள் நுழைகிறான். அதன்பின் தலைவியைக் கூடுகிற நோக்கத்தில் நெருங்குகிறான். தலைவியோ என்னை நெருங்குவதற்கு “நீ யார்” எனக் கேட்டு அவனை விலக்குகிறாள். தனக்கு உரிமையான பொருள்தானே தலைவி, தான் விரும்பும் பொழுது அவள் எப்படி தன்னை மறுக்கமுடியும் என்கிற எண்ணம் கொண்டவனாக இருக்கிறான். அவளிடம் முயங்க இயலாத தவிப்பிலும் தன்னை எப்படி தலைவி மறுக்கமுடியும் என்கிற ஆச்சர்யத்திலும் தலைவியின் சொல்லை நம்பமுடியாமல் பாணனிடம் நகைச்சுவை போலச்  சொல்கிறான்.

தலைவன் கூற்றாக எழுதப்பட்ட பெண்பாற்புலவரின் இந்தப்பாடலை  நுட்பமாக வாசிக்க, பல செய்திகள் மறைமுகமாக உள்ளடங்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. “பரல்கள் இடப்பட்டு பிளந்த வாயுடைய கிண்கிணி ஆரவாரிக்க தெருவில் சிறுதேர் உருட்டி தலைவனின் மகன் விளையாடிக் கொண்டிருக்கிறான்.  அப்போதுதான் பேசத் தொடங்கிய குழந்தையென்பதால்  அதன் வாயிலிருந்து எச்சில் ஒழுகிக்கொண்டிருக்கிறது. குழந்தையின் உடலில் சந்தனம் பூசப்பட்டுள்ளது. குழந்தை விளையாடித் திரியும் தெருவழியே தலைவன் வரநேர்கிறது. பரல்கள் இடப்பட்ட குழந்தையின் கிண்கிணி ஆரவாரிக்கும் சிறுதேர் அவனுடைய கவனத்தைத் திருப்புகிறது. அதுவரையில் அவனுடைய தெருவென்பதையும் மறந்திருக்கிறான். செவ்வாம்பலை நினைவூட்டும் வாயில் எச்சில் ஒழுக, மழலை மொழி பேசுகிற குழந்தையிடம் தன்னை மீட்கிறான். குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொள்கிறான். தகப்பனைக் கண்டவுடன் குழறிப் பேசியதால் வழிந்து பெருகிய குழந்தையின் எச்சிலில் சந்தனம் கரைகிறது. அது தலைவனின் உடலிலும் அப்பிக்கொள்கிறது.” இதுவரையில் இருப்பவை தெருவில் நடக்கும் காட்சியாக இருக்கிறது. காட்சியில் தலைவி இல்லை. தலைவியை மறந்தே அவன் பரத்தையரிடம் இருக்கிறான். அவனுக்கு தலைவியை விடவும் பரத்தையரிடமே ஈர்ப்பு இருக்கிறது.  குழந்தையின் துருதுருப்பே அவனுக்கு தலைவியை நினைவூட்டுகிறது.

இந்த நிகழ்வுப்பற்றி  தலைவன், பாணனிடம் சொல்கிற கருத்து மட்டுமே இந்தப்பாடலில் உள்ளது. அதாவது குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் தன்மேலும் அப்பிக்கொண்டிருப்பதைப் புரிந்து கொள்ளாமல் "வேறென"  நினைத்துக்கொண்டு தன்னை விலக்கி தலைவி  நகர்ந்தாள் என்கிறான். பரத்தையருடன் கூடியிருந்த தடயமாக அந்த "வேறென" என்று சொல்கிறான். அது குழந்தையின் உடலிலிருந்த சந்தனம் என்பதை உணர்ந்திருந்தால் தன்னையவள் விலக்கியிருக்க மாட்டாள் எனத் தலைவன் நினைக்கிறான். அதனாலேயே தங்கள் உறவின் அடையாளமான குழந்தையைத் தூக்கிக் கொண்டிருந்த போதிலும், "என்னை நெருங்கிவர நீ யார்" எனத் தலைவி கேட்டதை அவனால் நம்பமுடியவில்லை. குழந்தை  என்பது அவனது ஆண்மையின் அடையாளமாக நினைக்கிறான்.  பரத்தையரிடம் சென்றது பற்றிய எந்தக் குற்றவுணர்வும் அவனுக்கு இல்லை. யாரென கேட்கும் தலைவியின் செயலே கூட அவனுக்கு நகைப்பாக இருக்கிறது. அதிலிருக்கும் அவளுடைய வருத்தமும் கோபமும் அவனுக்குப் புரியவில்லை.

தலைவியின் இடத்திலிருந்து இந்தப்பாடலை நோக்க, தன்னுடைய நினைவு இருந்திருந்தால் பரத்தையரின் வீட்டிற்கே தலைவன் சென்றிருக்க மாட்டான். தன்னுடைய தலைவன் வேறு ஒரு பெண்ணிடம் ஈர்ப்புடன் இருக்கிறான் என்பதை அறிகிற ஒரு பெண்ணின் நிலையினை உணராமல், அங்கு சென்றவன் தலைவியின் நினைவு வராமலேயே காலத்தைக் கடத்தியிருக்கிறான். அவனைப் பிரிந்திருக்கும் தலைவியின் தனிமை பற்றியோ, அதன் துயரத்தைப் பற்றியோ அவனுக்குப் புரிந்திருக்கவில்லை. குழந்தையைப் பார்த்ததால் மட்டுமே தலைவியின் நினைவு தூண்டப்பட்டிருக்கிறான். தலைவன் என்பதால் அவனை விலக்கிவிடுகிற அவளுடைய கோபமும் அவனுக்குப் புரியவில்லை.
சங்ககாலத் தலைவிகள், பரத்தையர் வீடுசென்று திரும்பும் தலைவனிடம் சிறிய அளவிலான ஊடல் கொண்டுவிட்டு பிறகு சமாதானம் ஆகிவிடுவார்கள். அல்லது அவளை சமாதானப் படுத்துவதற்காக விறலியரோ பாணனோ தூதாக அனுப்பிவைக்கப்படுவார்கள். தோழியிடம் அவர்கள் முதலில் சமாதானம் பேசுவார்கள். தோழியும் முதலில் வாயில் மறுத்துப் பேசிவிட்டு தலைவன், தலைவியரை இணைத்து வைத்துவிடுவாள்.

“தேமொழிப் புதல்வர் திரங்குமுலை சுவைப்ப
வைகுண ராகுதல் அறிந்தும்
அறியா ரம்ம துடலு மோரே.” 

ஓரம்போகியார் என்கிற ஆண்பாற் புலவரின் அகநானூற்றுப்பாடலில், “பரத்தையரை நாடிச் சென்றிருக்கும் தலைவனை ஏற்றுகொள்ளாத தலைவியை, அவனுடைய செயலைப் பொறுத்துக் கொள்ளவில்லையெனில் உண்ண உணவும் குழந்தைக்கு பாலும் இன்றி  துன்பத்தையே மேற்கொள்வாய்” என்று தோழி கண்டிக்கிறார். பரத்தையர் பிரிவு என்னும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பல பாடல்களில் தலைவியை அடங்கிப்போகச் சொல்லும் இதுபோன்ற காட்சிகள் உள்ளன.

“பரத்தையருடன் அவர்களின் கலையறிவு பற்றியும் தமிழ்ச்சமூகத்தில் இசை, ஆடல், நாடகம் முதலான கலை வளர்ச்சியில் ஈடுபட்ட கலைவிறலிகளையும் சேர்த்தே யோசிக்க வேண்டும். இல்லத்துப் பெண்கள் கலைத்துறையில் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில் பரத்தையர் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர். பரத்தையர்களின் ஜீவனோபாயம் பற்றிய பதிவு சங்கஇலக்கியத்தில் இல்லை. கைமாறும் பணம் அல்லது நெல் அளவுகள் பேசப்படவில்லை. அதெல்லாம் இல்லாமல் இத்தொழில் நடைபெறும் சாத்தியமில்லை. எனினும் அந்த விலைகள் பேசப்படாத ஒரு நாகரீகம் நிலவியிருக்கிறது. இதில் ஆறுதல் அடையக்கூடிய ஒரு அம்சம் பரத்தையர், பத்தினிகளுக்கு கிடைத்த சுதந்திரத்தைக் காட்டிலும் கூடுதலான சுதந்திரத்துடன் வாழ்ந்து இருந்ததன் சுவடுகள் தென்படுகின்றன.” என “தாழப்பறக்காத பரத்தையர் கொடி” என்கிற நூலில் பிரபஞ்சன் குறிப்பிடுகிறார்.


கற்புடை மகளிர் எனப்படுகிற சங்கத்தலைவிகள் தங்களுக்காகப் பேசவே மாட்டார்கள். ஆனால் இந்தப்பாடலில் வருகிற தலைவி தலைவனை எதிர்த்துக் கேட்கிறாள். இத்தகைய துணிவான குரலை பெண்பாற்புலவர் என்பதாலேயே எழுத முடிந்திருக்கிறது. தலைவனுக்கு எதிரான குரலென்பது பரத்தையரின் குரல் அல்ல, அது பரத்தமையின் இயல்பு. தேவைப்படுகிற இடத்தில் தன்னுடைய குரலை பதிவு செய்கிறவளாக கற்புடை மகளிர் இருந்தால் அவர்களும் பரத்தமையின் இயல்பைக் கைக்கொண்டிருக்கின்றனர் எனலாம். சங்க இலக்கியத்தில் “தோழி” என்கிற கதாப்பாத்திரம் போல “பரத்தையர்” என்பது ஒரு குறியீடு. பரத்தமை என்பது அறிவு, துணிச்சல் மற்றும் சுதந்திரம் என்பதாகவும் புரிந்துகொள்ளலாம்.


இவர் பாடியதாக இரண்டு பாடல்கள் கிடைத்துள்ளன. நற்றிணை: 250, 369