Tuesday, 11 October 2016



பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..

30.குன்றியளார்:
:




ஒரு பெண் விட்டுக்கொடுக்கிறாள்...

“இலங்கு வளை நெகிழ...

“ஒரு ஆண் தனக்கு உரிமையான பெண்ணிடமிருந்து விலகுகிற இடமும், அவ்வாறு விலகுகிற ஆணை பிறிதொரு பெண் கவர்கிற தருணமும் ஒரேபுள்ளியிலிருந்தே தொடங்குகிறது. அப்புள்ளியின் மையமாக இருக்கும் ஆணைத் தவிர்த்துவிட்டு சம்மந்தப்பட்ட பெண்களைத்தான் இச்சமூகம் குறை சொல்கிறது. ஒருத்தி பற்றிக்கொள்ள முயலும்போது, இன்னொருத்தி  விட்டுகொடுக்க இயலாமல் தவிக்கிறாள். பிரிந்திருபவளுக்கும் இணைந்திருப்பவளுக்கும் இடையே ஊசலாடும் ஒன்றாகவே ஆணின் மனம் எப்போதும் இருக்கிறது. “
__________________________________________________________________________________________

 “டாக்டர் செல்வராஜ் சார் தானே பேசுறீங்க?‘‘
‘‘ஆமா, நீங்க?‘‘
‘‘நான் மகாலட்சுமி, காஞ்சிபுரத்திலிருந்து பேசுறேன்‘‘
‘‘ம்.. சொல்லுங்க‘‘
‘‘சார்.. உங்க ட்ரைனிங் கிளாஸ்ல..‘‘
‘‘வந்திருந்தீங்களா? எந்த பேட்ச்?‘‘
‘‘ உங்களோட, மனிதஉறவு மேம்பாடு பயிற்சிக்கு என் கணவர்தான் வந்திருந்தார். அவரப்பத்தி உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்
எதிர்முனை குரலைக் கேட்டதும், டாக்டருக்கு பெரும் குழப்பம். பயிற்சிக்கு வந்தது கணவர், பேசுவது மனைவி. எதுவும் தப்பா நடந்துடுச்சா..‘‘ என யோசித்தவாறே,  
அப்படியா..அவரப்பத்தி.. எங்கிட்ட என்ன பேசணும்?‘‘ தயங்கிய குரலில் செல்வராஜ் கேட்க,
பதிலுக்கு, மறுமுனையில் விசும்பல் சத்தம் கேட்டது...இவருக்கோ மேலும் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.
ஒருவாறு அழுகை ஓய்ந்த நிலையில், “சார், எங்களுக்கு கல்யாணமாகி பதினேழு வருஷம் ஆச்சு. நாங்க காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிகிட்டோம். சின்ன வயசுல இருந்தே எனக்கு நாட்டியத்துல அப்படி ஒரு ஈடுபாடு. மூணு வயசுல இருந்து டான்ஸ் கத்துகிட்டேன். உலகத்திலயே எனக்கு பிடிச்ச விஷயம்னு சொன்னா, டான்ஸ் மட்டும்தான். என்னோட டான்ஸ் புரோகிராம்லதான் அவரு முதன்முதலா என்னைப் பாத்தாரு. அப்ப இருந்து, என்னை விரும்பறதாச் சொல்லி தவமா தவம் கிடந்து என்னை கல்யாணம் செஞ்சிகிட்டார். ஆனா, கல்யாணம் ஆன கொஞ்ச நாள்லயே நான் நடனமாடுறது அவருக்கு பிடிக்காமப் போயிடுச்சு.  இனிமே ஆடக்கூடாதுனு கட்டாயப்படுத்தினாரு. அவருக்காக நான் உயிரா நேசிச்ச நடனத்தை நிறுத்திட்டேன். ஏன்னா, நடனத்தை விடவும் அதிகமா அவரை நேசிச்சேன். நாளாக நாளாக, அவரோட குணம் மோசமாகிட்டேப் போச்சு. நான் காப்பி கொண்டுபோய்க் கொடுத்தாக்கூட நேரா நிக்கத் தெரியாதா, வளைஞ்சு நெளிஞ்சு நிக்கிறனு திட்டுவார். என்னோட நளினத்துக்காகவே என்னைக் காதலிச்சதா சொன்னவருக்கு அந்த நளினம் பிடிக்காமயே போயிடுச்சு. அவருக்காக, என்னோட நளினம், ரசனை எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுகிட்டு, சவம் மாதிரி நடமாட ஆரம்பிச்சு பல வருஷம் ஆகிடுச்சு. இந்த நிலைமையில போனவாரம் உங்க பயிற்சிக்கு வந்துட்டு திரும்பியதும், எங்கிட்ட மன்னிப்புக் கேட்டார். நீ உன் விருப்பம் போல நடனம் ஆடலாம், பாட்டுப்பாடலாம்‘‘ன்னு சொல்லி என்னை ஆச்சரியத்துல திகைக்க வெச்சுட்டாரு. அவர் சொன்னத என்னால நம்பவே முடியல. இத்தனை வருஷமா, உடலளவுல தான் நடனத்தை விலக்கி வெச்சிருந்தேன். மனசுக்குள்ள எனக்கான நடனத்த பத்திரபடுத்தியிருக்கிறேன். திரும்பவும் என்னை நடனமாடலாம்னு சொன்னது எனக்கு சந்தோசமா இருந்ததுன்னு சொல்றத விட அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. இனிமேலும்  நான் ஆடப்போறனோ இல்லையோ, எனக்குத் தெரியாது. ஆனாலும், அவர் மனசுல, நீங்க ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கீங்க ன்னு அவரோட இந்த ஒருவார நடவடிக்கையில தெரிகிறது.  அதனாலதான் உங்ககிட்ட பேச விரும்பினேன்என்றார் அந்த பெண். 

இது ஏதோ ஒரு கதையின் பகுதி அல்ல. டாக்டர்.பி.செல்வராஜ், மிகத்திறமையான மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர். விவசாய மேம்பாட்டினைச் செயல்படுத்துகிற நபார்டு வங்கியில் பணிபுரிகிறவர். பணிசார்ந்து அவருக்கு தினந்தோறும் புதியமனிதர்களைச் சந்திக்கிற வாய்ப்பு அதிகம். ஒவ்வொருவருடன் பேசும்பொழுதும் அவர்களிடமிருந்து புதியதாக ஒன்றைக் கண்டடைவதாகக் கூறுகிறார். ஒருவரிடம் கண்டடைந்ததை தன்னுடைய பயிற்சி வகுப்பில் இருப்பவர்களுக்குக் கடத்துகிறார். ஒருவரின் வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும் பொழுது யாரேனும் இன்னொருவருக்கு அவர் வாழ்வுக்கான புதிய ஒரு திறப்பினை ஏற்படுத்தும் என நம்புகிறார். சகமனிதர்களிடமிருந்து அவர்களுடைய வெவ்வேறு விதமான வாழ்வியல் சிக்கல்களைக் கேட்கிறார். இங்கே காதுகொடுத்து கேட்கத்தான் ஆட்கள் குறைவு. ஒருவரின் பிரச்சனைக்குத் தீர்வு எதுவும் சொல்லத் தேவையில்லை, யாரிடம் சொல்வோமென தவிக்கிற ஒருவரின் தவிப்பை கேட்டாலே போதும். டாக்டர் செல்வராஜ் கேட்கிறவராகவும் இருக்கிறார். ஒருநாள் அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது. அந்த அழைப்பின் உரையாடலைத்தான் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
டாக்டர் செல்வராஜ் என்கிற ஒருவர் இருப்பது உண்மையென்றால்  மகாலட்சுமி என்கிற இந்த ஒரு பெண் மட்டுமல்ல இவரைப்போல ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் இருப்பதும் உண்மை. அந்த ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் கடைசிவரை எந்த மாற்றமும் ஏற்படாமேலேயே கூடப் போய்விடுவதுண்டு.

ஒரு பெண்ணிடம் அவளை நேசிக்கப் பிடித்த காரணமே திருமணத்திற்குப் பிறகு ஒருகட்டத்தில் பிடிக்காமல் போய்விடுகிறது. அவளுடைய நளினம், எல்லோரிடமும் கலகலப்பாகப் பேசுவது, சிரித்த முகத்துடன் இருப்பது, ஆளுமைத்திறனுடன் இருப்பதென ஒரு பெண்ணின் பல்வேறு நுண்ணியல்புகளில் ஆண் ஈர்க்கப்படுகிறான். அதனை முன்னிட்டே அந்தப்பெண்ணை அவன் நெருங்குகிறான். தன்னுடைய பல்வேறு செயல்களின் மூலமாக அவளது கவனத்தை தன் பக்கமாகத் திருப்ப முயலுகிறான். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அவளும் அவனிடம் ஈர்க்கப்படுகிறாள். அதன் பிறகு அந்தப்பெண் அவனுக்கு உடமையாகிறாள். அவனுக்கென உரிமையானவுடன் அவளிடம் ஈர்ப்புடைய பொதுவான பண்புகளை தனக்கே உரியதாக வைத்துகொள்ள நினைக்கிறான். அவளின் சிறப்பியல்புகளை தன்னுடையதாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறான்.
அவளுடைய உடலைக் கைக்கொண்டவுடன் அவளது விருப்பங்கள் எதுவும் அவளுக்கானவையல்ல என நினைக்கிறான். காதலிப்பதற்கு முன்பாக தான் ரசித்த அவளுடைய நுண்ணியல்புகளை அவனே நசுக்கத் தொடங்குகிறான்.

காதல் திருமணத்தில் மட்டுமல்ல, பெரியவர்களால் ஒழுங்கு செய்யப்பட்டதெனினும் பெண்களின் வாழ்வு திருமணத்திற்கு முன்பு ஒருவிதமாகவும் திருமணத்திற்குப் பிறகு வேறுவிதமாகவும் மாறிவிடுகிறது. ஓவியம் வரைவது, நடனமாடுவது, பாட்டுப்பாடுவது போன்ற திறமைகள் மட்டுமன்றி நேர்த்தியாகவும் சுதந்திரமாகவும் உடுத்திக்கொள்வது போன்ற தங்களது விருப்பங்களை பின்னாளில் கணவனின் விருப்பமின்மையால் பெண்கள் கைவிட நேர்ந்துவிடுகிறது. விருப்பமானதைச் சாப்பிடுவது, நினைத்த பொழுதில் உறங்குவது போன்றவையும் முற்றிலுமாக மாறுதலடைகிறது. 

உணவுக்கூடங்களில் குடும்பத்துடன் சாப்பிடுபவர்களைக் கவனித்தால், பணியாளர் வந்து உணவு அட்டவணையைக் கொடுப்பதும்,  உணவுக்கான உத்தரவுகளை வாங்குவதும் கூட பெரும்பாலும் கணவனிடம்தான், தவிர ஒருசில கணவன்மார்களே தங்கள் மனைவியிடம் “என்னவேணும்” எனக் கேட்கிற வழக்கம் கொண்டவர்களாக அல்லது “உனக்குத் தேவையானதை நீ சொல்லிக்கொள்” எனச் சொல்பவர்களாக இருக்கிறார்கள். வெளியிடங்களில் அவள் என்ன சாப்பிடவேண்டுமென்பதை அவனே முடிவு செய்கிறவனாக இருக்கிறான். வீட்டில் அவளே எல்லோருக்கும் பரிமாறி மீதமிருப்பதை உண்கிற பழக்கத்திற்கு ஏற்கனவே மாறியிருப்பாள். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தங்களுடைய மனைவிகள்  குழந்தைத்தனமாக இருக்கிறாள் என சில கணவன்மார்கள் குறைவுபட்டுக் கொண்டார்கள். “ஊஞ்சலாட விரும்புறா, சத்தமா பேசுறா, டான்ஸ் ஆடுறா” என்பதுபோல குற்றச்சாட்டுகள் தங்கள் மனைவியர்மீது வைத்தார்கள். இதுபோன்ற அவளுடைய மிகச்சிறிய விருப்பங்கள் கணவனுக்குப் பிடித்தமில்லாதவையாக இருக்கின்றன.

இவள் ஒரு சொல் பேசமாட்டாளா, ஒரே ஒருமுறை பார்க்கமாட்டாளா எனத் தவித்திருக்கும் ஆண்தான்  பின்னொருநாள் “கொஞ்சம் வாய மூடிட்டு சும்மா இருக்கியா, ஓயாம தொணதொணக்குற, வீட்டுக்கு வந்தாலே மனுஷன் நிம்மதியா இருக்க முடியல, என் கண்முன்னாடி நிக்காத, உன்னப் பாக்கவே பிடிக்கல” இப்படியான சொற்களில் வெறுப்பையும் விலகலையும் உமிழ்ந்துகொண்டே இருக்கிறான். இருவருக்குள்ளும் ஏற்படுகிற இடைவெளிக்கு ஒற்றைக் காரணத்தை ஒருபோதும் சொல்லிவிட இயலாது. நிறைவாக இருந்த உறவு இன்மைக்கு நகர்ந்துவிட்டதின் துயரம் பற்றி கவிஞர் நந்தமிழ் நங்கையின் கவிதையொன்று வெளிப்படுத்துகிறது.

“பின்புற ஏரிக்கரையில்
வண்டுருட்டாம் பூச்சி
வசந்தத்தில் நீ தந்த முத்தங்களை
உருட்டி நடக்கிறது
ஐயிதழ் விரித்து
அலங்காரமற்றிருக்கும்
மஞ்சள் நெருஞ்சிப்பூ முள்ளில்
மழை நடந்த சாலையாய்
மெளனித்துக் கிடக்கும் உன் வசைகள்
ஒய்ந்திருந்து பருத்துப் பெருக்கின்றன
மூழ்கிச் செத்த சவலை நாய்க்குட்டியாக
சீமையோட்டினை இதமாகப் பிரித்து
உள்ளிறங்கும் காலை வெயில்
கனவிலிருந்தே விழிக்க வைக்கிறது
உன் அருகாமை
வாய்க்காத இரவிலிருந்து.”

ஒருகாலத்தில் முத்தங்களால் நிறைந்திருந்த உறவு, பின்னொருநாளில் அவனின் வசைகளாகி அவை அவளிடம் பருத்துப் பெருகத் தொடங்கிவிடுகின்றன. தனிமையில் பெருகுகிற காதலின் துயருக்கும், தனிமையில் பெருகுகிற வெறுப்பின் துயருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தனிமையில் இருக்கும்பொழுது தீவிரப்படுகிற உணர்வுகளில் பெண்கள் எப்பொழுதுமே நோய்மையடைகிறார்கள்.

சமீபத்தில் வாசிக்கக் கிடைத்த பெண்களின் பெரும்பாலான கவிதைகள், “அவனுக்கு என்னைப் பிடிக்காமல் போய்விட்டது, அவனுடைய கவனம் என்மீது இல்லை, அவனுடைய மௌனம் என்னை வதைப்பதாக இருக்கிறது, என்னுடைய தனிமையை உணர்கிறவனாக அவன் இல்லை” என்கிற பொருள் தருகிற விதமாக எழுதப்படுகின்றன. அன்பையும் காதலையும் எழுதிக்கொண்டிருக்கிற பருவத்திலிருந்து காதலின் வன்மத்தையும் துரோகத்தையும் எழுதுகிறவனாக ஆணும், விலகிச் செல்லுதலின் துயரையும் கைவிட்டுச் சென்றவனுக்காக காத்திருப்பதையும் சொல்கிறவளாகப் பெண்ணும் மாறியிருக்கிறார்கள். அன்பில் பிணைந்திருந்த ஆண் விலகிச் செல்வதன் துயரைத் தாங்கிக் கொண்டிருக்கும் பெண்ணைப் பற்றி கவிஞர் சாய் இந்து தன்னுடைய கவிதையொன்றில் குறிப்பிடுகிறார்.

“எய்த அம்புகளையே
இன்னும் எடுத்தபாடில்லை
உமிகாட்டில் உருண்ட பஞ்சென
உள்ளிறக்கிய கூர்முனைகளை
உலுக்கி உதித்திட
உதிரத்தில் உயிர் இல்லை
ஒவ்வொன்றாகக் களைந்தபின்
சொல்லி அனுப்புகிறேன்
உள்ளங்கையில் உருட்டித் திரித்து
தீயில் இட்டுக்கொள்
அவ்வொளியில்
புதினம் அவளை முழுதும் படித்தும்
புரியாமல் பழித்தும்
அறியாமையின் இருள்
அழிந்து போகட்டும்
குருஞ்சாம்பல் காற்றில் கரையட்டும்.”

பெண் காத்திருக்கிறாள். மீண்டும் மீண்டும் பெண்ணே காத்திருக்கிறாள். அவனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ இவள் அவனுக்காகக் காத்திருக்கிறாள். முன்பொரு காலத்தில் அவன் அவளிடம் மகிழ்ந்திருந்தவன்தான். இப்போது அவளைவிட்டு விலகுகிறான். அவனுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக தன்னுடைய எல்லா விருப்பங்களையும் விட்டுக்கொடுத்துவிடுகிறாள். அதன்பிறகும் விலகிச்செல்கிறான். ஆனால், அப்போதும்கூட என்றைக்காவது அவனைத் தாங்கும் மனுஷியாக தான்தான் இருக்கவேண்டுமென இன்றைக்கும் காத்துக் கொண்டிருக்கும் பெண்களை கவிஞர் சரஸ்வதி காயத்ரியின் கவிதையொன்று காட்டுகிறது.

“பிரியத்தின் அதீதத்தில்
உன்னை மகிழ்விப்பதாக
நினைக்கிறேன்.
நீ மூச்சு முட்டுகிறது என்கிறாய்..
மகிழம்பூக்களால் 
நிரம்பிவழிகிற என் தோட்டத்தில்
நின்றபடி 
"
தலையை வலிக்கிறதென்கிறாய்...
பேரன்பில் இழைக்கப்பட்ட
என் கவிதைகளை
"
க்ளிஷே" என்கிறாய்..
விருப்பமின்மையை
இப்படியும் சொல்லலாம் போல....!
நினைவில் கொள்..
என்றேனும்
ஒரு நாள் உனக்கு உதவக்கூடும்
தீராதவலியைப் போக்கும்
நிவாரணியாய்....

நீ வெறுத்த என் வார்த்தைகள்.”

இன்றைய காலகட்டத்தில் விரும்பிய பெண்ணை, ஆண் பிரிந்து செல்வதற்கான காரணங்களை நீண்ட பட்டியலிடலாம். ஆனால் சங்க இலக்கியத்தில் பொருள்வயின் பிரிவு, கல்விக்காகப் பிரிவது, போருக்காகப் பிரிவது மற்றும் பரத்தையர் பிரிவு போன்ற குறிப்பிட்ட சில காரணங்களால் மட்டுமே இருவரும் பிரிந்திருப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்தப்பிரிவுகளில் போருக்காகப் பிரிதல் தவிர மற்றவை எல்லாம் தற்காலிகமானவை.

சங்க இலக்கியங்களில் தலைவன் தலைவி பிரிவில் பரத்தையர் பிரிவு ஆண் மையச் சிந்தனையை வலுப்படுத்தியது. சங்க அகமரபில் பரத்தையரின் குரலே ஓங்கி ஒலிக்கும் ஒற்றைப் பெண்குரலாக இருக்கிறது. தலைவி, தோழி, செவிலி, நற்றாய் பாடினி, விறலி போன்ற பெண்களின் குரல் ஆணுக்கு அடங்கியதாகவே இருக்கின்றன. தன்னிடமிருந்து பிரிந்து தலைவியிடம் செல்கிற தலைவனிடம் முரண்படுகிற, கோபப்படுகிற பரத்தையரும் உண்டு. பரத்தமை உறவை தலைவியிடம் காட்டிக்கொடுத்துவிடுவதாகச் சொல்லி, தலைவனைக் கேலிசெய்கிற பரத்தையரும் உண்டு. தலைவியின் பூப்புகாலங்களில் அல்லது பேற்றுக்காலங்களில் பரத்தையரிடம் சென்றிருக்கும் தலைவனை மீண்டும் தலைவியிடம் செல்ல வழிப்படுத்துகிற பரத்தையரும் உண்டு. பரத்தையரிடம் செல்கிற தலைவனை நினைத்துப் பெருமைப்படுகிற தலைவியைச் சொல்கிற பாடல்களும், தன்னை நாடிவந்த தலைவனை பரத்தை ஒருத்தி தன்னிடமே தக்கவைத்துக்கொள்ளுதல் சங்கமரபில் இல்லை என்பதுகூட ஆண்மனதின் விருப்பத்தைத்தான் வெளிப்படுத்துகிறது. பரத்தமை என்கிற இயல்பின் தேவையானது ஆணுக்கு சங்ககாலத்திற்கும் முன்பிருந்து இன்றுவரையில் வேறுவேறு சொல்லாடல்களில் மிகத்தேவையாக இருக்கிறது.

தன்னிடம் இதற்கு முன்பாக இன்புற்றிருந்த தலைவன் பிரிந்து சென்றதால் துன்புற்றிருக்கும் தலைவி பற்றிய சங்கப்பெண்பாற் புலவர் குன்றியளார் எழுதிய குறுந்தொகைப்பாடல்,

ஐயவி அன்ன சிறுவீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

“வெண்மையான சிறிய கடுகினைப் போன்ற மிகச்சிறிய பூக்களையுடையது  ஞாழல் மரம். மருதமரத்தின் மலர்கள் செம்மை நிறமுடையன. மருதத்தின்  வாடிய செம்பூக்களுடன் ஞாழலின் வெண்மையான சிறியபூக்கள் பரவி அழகுசெய்கிற நீர்த்துறையை உடையது தலைவனுடைய ஊர். அவர் முன்னர் தழுவி இன்புற்றிருந்த என்னுடைய தோள்கள், தோள்வளை நெகிழ்ந்து விழுமாறு மெலிந்து தனிமைத் துன்பத்தையே அணிகலனாகப் பெற்றிருக்கிறது” என தூதாக வந்தவரிடம் தலைவி சொல்வதாக அமைந்த இந்தப்பாடலில் மருதமரத்தின் மலர்கள் பற்றிய குறிப்பு வருவதாலும் அதுவரையில் இன்புற்றிருந்த தலைவிக்குத் துன்பம் ஏற்படுமாறு தலைவன் பிரிந்து சென்றிருப்பதாலும் இந்தப்பாடல் மருதத்திணையில்  சேர்க்கப்பட்டுள்ளது.

மருதமரத்தின் செம்மை நிறமுடைய மலர்களுடன் ஞாழலின் வெண்மையான சிறியபூக்கள் கலந்து பரவிக்கிடப்பதை தலைவன் பரத்தையரோடு கலந்திருப்பதைக் குறிப்பால் உணர்த்துகிறது. அதாவது நீர்த்துறையில் பரத்தையர் பயன்படுத்திய மலர்களே வாடிக்கிடக்கின்றன. தலைவியை விடுத்து வேறு ஒரு பெண்ணை விரும்புவது சங்ககாலத்திற்கு மட்டுமானது அல்ல.

“தன்னுடைய தோள் தனிமையை அணிந்து பொலிவுற்றிருக்கிறது” என தனிமையில் நலிவடைந்திருக்கும் துயரை நேரடிச் சொல்லில் அல்லாமல் மறைமுகமாக ஒரு தலைவி தன்னை வெளிப்படுத்துகிறாள். தலைவன் புறக்கணித்ததால் தலைவிக்குத் தோள் மெலிகிறது. அதனால் வளை நெகிழ்கிறது. தலைவனைச் சார்ந்திருக்காது தனித்திருப்பதால் தன்னுடைய தோள் மெலிந்திருக்கிறது என்று சொல்கிற தலைவியும் எல்லாக்காலத்திலும் இருக்கிறாள்.

இந்தப்பாடலில் தலைவியை தலைவன் பிரிந்து சென்றதற்குக் காரணம் பரத்தையர் என்கிற நேரடிக் குறிப்பில்லாவிட்டாலும் ஒரு பெண்ணை ஆண் பிரிந்து செல்வதென்பதும் அதற்கு பெரும்பாலும் இன்னொரு பெண் காரணமாக இருப்பதுவும் காலம்தோறும் நடந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்வுதான்.
கண்ணகியோடும் மாதவியோடும் தங்கள் வாழ்வை அநேகமான பெண்கள் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்கிறார்கள். பெரும்பாலான தமிழ்த்திரைப்படங்கள் முக்கோணக்காதல் கதையை வேறுவேறு வடிவங்களில் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. கதைகளின் மையப்புள்ளியாக இரண்டு பெண்களையுமே துன்புறச் செய்கிறவனாக ஆண்தான் இருக்கிறான். அந்த ஆண் மிகவிரும்பிய பெண்ணிற்காக இன்னொரு பெண் விட்டுகொடுக்கிறாள். இறுதியில் ஆணின் விருப்பமே நிறைவேறுகிறது.

ஒரு ஆண் தனக்கு உரிமையான பெண்ணிடமிருந்து விலகுகிற இடமும், அவ்வாறு விலகுகிற ஆணை பிறிதொரு பெண் கவர்கிற தருணமும் ஒரேபுள்ளியிலிருந்தே தொடங்குகிறது. அப்புள்ளியின் மையமாக இருக்கும் ஆணைத் தவிர்த்துவிட்டு சம்மந்தப்பட்ட பெண்களைத்தான் இச்சமூகம் குறை சொல்கிறது. ஒருத்தி பற்றிக்கொள்ள முயலும்போது, இன்னொருத்தி  விட்டுகொடுக்க இயலாமல் தவிக்கிறாள். பிரிந்திருபவளுக்கும் இணைந்திருப்பவளுக்கும் இடையே ஊசலாடும் ஒன்றாகவே ஆணின் மனம் எப்போதும் இருக்கிறது.

இவர் பாடியதாக பத்து பாடல்கள் கிடைத்துள்ளன. அகநானூறு: 40,41, குறுந்தொகை: 50,51,117.238,301,336, நற்றிணை:117,239.

Sunday, 2 October 2016



பெண் – 
உடல் , மனம் , மொழி :

சங்கப்பெண்பாற் புலவர்கள் பற்றிய தொடர்..


29. வெண்பூதியார் :




ஒரு பெண்ணின் எழில் தனித்தலைகிறது:


“யானே ஈண்டை யேனே; என் நலனே...”

“திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் புறத்தோற்றத்தைப் பராமரிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொள்கிறார்கள். அதைவிடவும் தங்கள் உணவுப்பழக்கத்தைக்கூட குடும்ப உறுப்பினர்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். குழந்தைகளுக்காக பத்தியம் இருப்பது, கணவனுக்குப் பிடித்தமான உணவுக்கு மாறிவிடுவது, எல்லோரும் சாப்பிட்டு மிச்சமிருப்பதை கீழே போட மனமின்றி அதிகமாகச் சாப்பிடுவது என பெண்களின் உணவுமுறை முற்றிலுமாக மாறிவிடுகிறது. இவ்வாறெல்லாம் மற்றவர்களுக்காக தனது சுயத்தைக் கலைத்துக் கொள்கிற பெண்கள், தங்களை தங்களுக்காக அழகுபடுத்திக்கொள்வது என்பதையே  மறந்துவிடுகிறார்கள்.”
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

அமராவதி என்கிற என்னுடைய தோழி, தான் சந்திக்கிற பெண்களுக்கு, முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கும் பழக்கத்தை உடையவள். பெண்கள் தங்களுடைய கைப்பையில் வைத்துக்கொள்ளுமளவு மிகச்சிறியதாக இருக்கும். இப்படியொரு வினோதமான பழக்கத்தை அவளுடைய அம்மாவைப் பார்த்து உருவாக்கிக் கொண்டதாகச் சொல்கிறாள். அமராவதியின் அம்மா மிக அழகானவர். தன்னுடைய அம்மாவின் கருப்புவெள்ளைப் புகைப்படங்களைப் பார்த்து எப்போதும் ரசிப்பதுண்டு. காதில் ஜிமிக்கியும், தோள்வரை வழிந்திருக்கும் மல்லிகைச் சரமும், கண்களில் தீற்றியிருக்கும் மையும் என அம்மாவின் அழகு அவளுக்கு ஈர்ப்புடையதாகவே எப்போதும் இருக்கிறது. அம்மாவின் இடுப்பில் தானிருக்கும் புகைப்படங்களில் அம்மாதான் பேரழகியென நினைத்துக்கொள்பவள், தன்னுடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் அம்மாவோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வரிசைபடுத்திப் பார்ப்பது இவளுக்குப் பொழுதுபோக்கு. உண்மையில் அந்த கணங்களில், பொழுதினை சேகரித்துக் கொண்டிருப்பதாகச் சொல்வாள். அந்த அளவுக்கு அவளையும் அம்மாவையும் காலத்தையும் ஒப்பீடு செய்துகொண்டிருப்பாள். காலம், இருவரின் உடலிலும் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களுக்கு உட்பட்டு அம்மாவின் ஆடையும் அலங்காரங்களும் மாறியிருப்பதைக் கணக்கிடுவாள். தன்னுடைய தாவணிப்பருவம் வரையில் அம்மாவின் அகன்ற தோள்களில் புரண்டுகொண்டிருந்த மல்லிகைச்சரம் அதன்பின்பு காணாமல் போயிருந்தது. தழையத்தழையப் பின்னலிட்டிருந்த கூந்தலும் அதன்பிறகு  கொண்டையாக மாறியிருந்தது. நீளமான நெற்றித்திலகம் வட்டமான குங்குமமாக மாறியிருந்தது. மகள் பூப்பெய்தவுடன் தன்னுடைய கால்கொலுசுகளைக் கழற்றி வைத்துவிட்ட அம்மாவை அறிந்திருக்கிறாள். தன்னை அலங்கரித்துக்கொள்கிற தன்னுடைய விருப்பங்களை மகளின் வளர்ச்சியில் ஒவ்வொன்றாகக் கைவிடுகிற காலகட்டத்தைச் சேர்ந்த அம்மா அவள்.

அம்மாவிடமிருந்து விடைபெற்றுகொண்ட சில பழக்கங்களும் உண்டு. அதில் முதலாவதாக இடம்பிடிப்பது, கண்ணாடி பார்ப்பது. திருமணம் ஆனவுடன் அம்மாவுக்காக அப்பா வாங்கிய முதல் பொருளே ஆளுயர பெல்ஜியம் கண்ணாடிதான். தேக்குமரச் சட்டத்தினால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த அந்தக்கண்ணாடியை அம்மா நடமாடும் இடத்தில் அவளது முழுஉருவத்தையும் பார்க்கும்படியாக சுவற்றில் மாட்டி வைத்திருப்பார். இப்போதும்கூட அந்தக் கண்ணாடி, அதேவீட்டில் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் ஒருபோதும் அம்மா அந்தக்கண்ணாடியைப் பார்ப்பதேயில்லை.

நினைவு தெரிந்த நாள் முதலாகவே அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்ப்பதென்பது அனைவருக்குமே மிகப்பிடித்த பழக்கங்களில் ஒன்றாக இருக்கும். குழந்தைகள் வளரவளர கண்ணாடி பார்ப்பதில்கூட பால்வேறுபாடு வந்துவிடுகிறது. இளம்பருவத்தில் அடிக்கடி கண்ணாடி பார்க்கிற பழக்கம் பெண்களிடம் சற்றுக் கூடுதலான செயலாக ஆகியிருக்கும். பொதுவாக திருமணமாகி குழந்தைகள் பெற்றுக்கொண்டு தங்கள் கவனத்தையெல்லாம் குழந்தைகளிடத்திலும் கணவனிடத்திலும் செலுத்தத் தொடங்கியபிறகு கண்ணாடி பார்க்கிற பழக்கம் பெண்களிடமிருந்து தானாகவே மெல்லமெல்ல விடைபெறத் தொடங்கிவிடுகிறது. ஒரு காலகட்டத்தில் ஒருநாளில் ஒரே ஒருமுறை கண்ணாடி பார்ப்பது என்பதுகூட அரிதாகிவிடுகிறது. அப்படித்தான் அமராவதியின் அம்மாவும் இப்போதெல்லாம் கண்ணாடி பார்க்கிறாரா என்பது கூட தெரியாத அளவுக்கு தன்னுடைய புறத்தோற்றத்தில் கவனம் செலுத்தாதவர் ஆகிவிட்டார். இத்தனை பெரிய மாற்றத்தை அம்மாவிடம் கவனித்த ஒரு தினத்தில்தான் அமராவதி சந்திக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறிய முகம்பார்க்கும் கண்ணாடியைப் பரிசளிக்கத் தொடங்கினாள். குறைந்தபட்சம் தான் பரிசளித்த கணத்திலாவது முகம் “பார்க்கிற உணர்வில்” கண்ணாடியைப் பார்ப்பார்கள் என நம்புகிறாள். இந்த நவீனகாலத்திலும் கண்ணாடி பார்க்கிற பழக்கத்தைத் தொலைத்துவிட்ட பல பெண்களைக் காணமுடிகிறது. கவிஞர் எழிலரசியின் கவிதை ஒன்று இதனைப் பேசுகிறது.

“என் வீட்டுக்குக் கண்ணாடியில்தான்
என் உயரம் எனக்கே தெரியும்
எகிறிக் குதித்துப் பார்த்த நாட்கள்
தலைமட்டும் தெரிந்த நாட்கள்
புருவத்தோடு தெரிந்த நாட்கள்
வாய்வரைத் தெரிந்த நாட்கள்
திருப்தி அடையாத மனம்
தாவணிப்பருவத்தில்
உருவம் முழுக்க எதிர்பார்த்தபோது
அதட்டிய அம்மாவின் திட்டுக்கள்
சேலைக் கொசுவம்வரை
தெரிந்தபோது
கண்ணாடிமீது மிகப் பிரியமிருந்தது
இப்போது நினைவில் இருப்பதில்லை
கண்ணாடி பார்க்கும் தருணங்கள்.”

திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்கள் புறத்தோற்றத்தைப் பராமரிப்பதை படிப்படியாகக் குறைத்துக் கொள்கிறார்கள். அதைவிடவும் தங்கள் உணவுப்பழக்கத்தைக்கூட குடும்ப உறுப்பினர்களுக்காக மாற்றிக் கொள்வார்கள். குழந்தைகளுக்காக பத்தியம் இருப்பது, கணவனுக்குப் பிடித்தமான உணவுக்கு மாறிவிடுவது, எல்லோரும் சாப்பிட்டு மிச்சமிருப்பதை கீழே போட மனமின்றி அதிகமாகச் சாப்பிடுவது என பெண்களின் உணவுமுறை முற்றிலுமாக மாறிவிடுகிறது. இவ்வாறெல்லாம் மற்றவர்களுக்காக தனது சுயத்தைக் கலைத்துக் கொள்கிற பெண்கள், தங்களை தங்களுக்காக அழகுபடுத்திக்கொள்வது என்பதையே  மறந்துவிடுகிறார்கள்.

கண்ணாடி பார்ப்பதென்பது தங்களுடைய பூவையும் நெற்றித்திலகத்தையும்  சிறிதளவு திருத்திக்கொள்வதற்காக என்று மட்டும் மாறியபின்பு, கண்ணாடி முன்நின்று தங்களை ரசிக்கும் கணங்களை அவர்கள் முற்றிலுமாகத் தொலைத்திருப்பார்கள். தங்களுடைய அழகும் எழிலும் ஆண்களுக்கானது என நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. தன்னையவள் அழகுபடுத்திக் கொள்வதே கணவனாக வருகிற ஆணுக்கு கையளிக்க என்பதாக மரபுவழிப்பட்ட மனதுடன் அவளையுமறியாமல் ஏற்றுக்கொள்கிறாள். அதனால்தான் இன்றைக்கும்கூட வீட்டில் கணவன் இல்லையென்றால் நல்லதாக உடுத்திக்கொள்வதைத் தவிர்க்கிற பலருண்டு. திருமணத்திற்கு முன்பும் பின்பும் பெண்ணின் எழில் என்பது அவளுக்கானது அல்ல என்பதாகவே எந்தக்காலத்திலும் அமைந்துள்ளது.  

“தன்னுடைய எழில் என்பது தனக்கானது அல்ல” என்கிற இந்த சிந்தனையின் வேர் சங்ககாலத்தில் தொடங்கியது. ஆண்பாற்புலவர்களின் பாடலானாலும், பெண்பாற்புலவரின் பாடலானாலும் பெண்ணின் அழகும், இளமையும் அவளுக்கானது அல்ல என்றே திரும்பத்திரும்பக் கூறுகிறது. தலைவனைப் பிரிந்து துயரடையும் பொழுது தன்னுடைய அழகை தலைவி தொலைப்பதும், பசலைபடர உடல் மெலிவதுமாக இருக்கிறாள். தலைவன் கூற்றாக வெளிப்படுகிற பாடலில் கூட தலைவியைப் பிரிந்து, ஆண் மெலிவதாகவோ, அவனுடைய உடல் தோற்றம் கெடுகிறது என்றோ எங்கும் பாடப்படவில்லை. தன்னைப் பிரிந்திருப்பதால் தலைவி வருந்துவாளே, உடல் மெலிந்திருப்பாளே என்பதாகத்தான் தலைவன் சொல்கிறான்.

சங்கப்பெண்பாற்புலவர் வெண்பூதியாரின் குறுந்தொகைப் பாடல்,

“யானே ஈண்டை யேனே; என் நலனே
ஆனா நோயோடு கான லதே
துறைவன் தம்ஊ ரானே;
மறைஅலர் ஆகி மன்ற ததே.”

மிகச்சிறிய இந்தப்பாடலில் தலைவி தோழியிடம்,” நான் இங்கே தனியாக இருக்கிறேன். தலைவன் என்னைப் பிரிந்து சென்றதால் தந்துவிட்டுச் சென்ற ஆறாத துயரத்துடன் இருக்கிறேன். தலைவனை எனக்குத் தந்த என்னுடைய நலன் இப்போது என்னிடம் இல்லை. அவனைத் தேடியவாறு என்னை விட்டுச்சென்று, தலைவனுடனிருந்த கடற்கரைச் சோலையிடத்தே தனித்தலைகிறது. அவனோ, தன்னுடைய பெற்றோருடன் ஊரில் இருக்கிறான். எங்களுடைய களவு உறவு பலரறிய வெளிப்பட்டு, ஊரலராகிப் பொதுவிடத்தில் இருக்கிறது” என்கிறாள்.

வெண்பூதியார், மூன்று குறுந்தொகைப் பாடல்களை எழுதியுள்ளார். மூன்று பாடலும் பேசுகிற பொருள் ஒன்றுதான். தலைவன் பிரிந்து சென்றிருக்கிறான். ஒருபாடலில் பெற்றோருடன் இருக்கிறான். ஊர் அலராகி தலைவி தனித்துத் தவிக்கிறாள். இரண்டாம் பாடலில், பொருள்தான் பெரிதென்று பிரிந்து சென்றிருக்கிறான். இதுவும் கூட திருமணத்திற்கு முன்பான பிரிவு என்றுதான் குறிப்பால் உணரமுடிகிறது.  பாடலில் கவைமுள் கள்ளிக் காய்விடு கடுநொடி என்றொரு வரி வருகிறது. தலைவன் செல்கிற பாலைநிலத்தில் முள்ளையுடைய கள்ளிக்காய் வெடிக்கும். அப்போது எழுகிற சிறிய ஓசையே பேரொலியாகி  மெல்லிய சிறகையுடைய ஆணும் பெண்ணுமாக இணைந்துள்ள புறாக்கள் பறந்து வெளியேறும். அத்தகைய கொடிய பாதை என்று இந்தப்பாடல் சொல்கிறது. தலைவன் தன்னைப் பிரிந்து சென்றதால் வெளியாகும் அலரின் ஓசையைப் பற்றியே தலைவி அச்சப்படுகிறாள்.

திருமணத்திற்கு முன்பாக தீராமல் காதல்செய்துவிட்டு, வேலையைக் காரணம்காட்டி அல்லது வேறு ஏதாவது நம்பும்படியாகச் சொல்லி, காதலித்த பெண்ணைக் கைவிட்டுவிடுகிற ஆண்கள் என்றைக்கும் இருக்கிறார்கள். ஒரு ஆண் வெட்டியாக ஊர் சுற்றும் பொழுதோ அல்லது சாதாரண வேலையில் இருக்கும் பொழுதோ பெண்ணின் வசதியோ அல்லது வேறு எதுவும் மனதில் பதிவதில்லை. அவனுக்குப் பிடித்துவிட்டால் போதும், கணப்பொழுதும் விடாமல் பெண்ணை விரட்டிவந்து, காலில் விழுந்துகூட காதல் செய்வான். அவனுக்கு வெளிநாட்டு வேலையோ அல்லது அரசு உயர்பதவியோ கிடைத்துவிட்டால், அதுவரையில் காதல் செய்த பெண்ணிடம் இல்லாத குறையெல்லாம் அவனுடைய கண்ணில் தெரியும். ஆனால் இவர்கள் உறவினைப் பற்றி அந்த ஊரில் பரவியிருக்கிற செய்தியினை ஒன்றும் செய்யவியலாமல் தன்னுடல் வெளிறி, மெலிந்து தீராத துயருடன் வீட்டில் பார்க்கிற வேறு ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டு பெயருக்கு “வாழ்கிற” பெண்கள் பலருண்டு.

வெண்பூதியாரின் மூன்றாம் பாடலும் பெண்ணுடலின் நிரந்தரப் பசலையைப் பற்றியே பேசுகிறது. “அடக்கமும் அவளைவிட்டு நீங்கிவிட்டதாகவும், அறிவு மட்டும் தலைவனை நோக்கி செல்க“ என்று சொல்வதாகவும் அமைந்துள்ளது. தன்னுடைய தனித்த துயரினை நீக்குவதற்கு இதுதான் தருணம் என்று தலைவன் உணரவேண்டும் என இந்தப்பாடலின் தலைவி சொல்கிறாள்.

அவளுடைய உடலுக்கு உரியதாக ஆகிவிட்ட பசலையைப் போக்க தலைவன் வரமாட்டான் எனில் இந்தப்பெண் என்னாவாள்? என்பதுதான் இந்த மூன்று பாடல்களும் கூறுகின்றன. தலைவன் வராமல் போயிருந்தால் அந்தப்பெண் என்னாகியிருப்பாள், எளிமையாகச் சொல்லிவிடலாம் அப்போதும் பசலை படர்ந்த மேனியுடன் தற்கொலை செய்துகொண்டிருப்பாள். ஆனால் அப்படியொரு பதிவு சங்கப்பாடல்களில் இல்லை. இல்லை என்பதால் நிகழ்ந்திருக்காது என்பதில்லை. அல்லது வெளிறிய உடலுடன் பெற்றோர் விருப்பத்தில் வேறு ஒருவரை மணம் முடித்து வாழ்ந்திருப்பாள். அதுவும் சங்கஇலக்கிய பதிவில் இல்லை. சிலநிகழ்வுகள் பதிவுகளாக இல்லையெனினும் இருந்திருப்பதை உணரமுடிகிறது.


குறுந்தொகை : 97,174,219